காவல் துறையின் மனிதத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு இது!- புல்லட் பெண் காவலர் அபர்ணா லாவகுமார் பேட்டி

By என்.சுவாமிநாதன்

கேரள மாநிலம், திருச்சூர் மகளிர் காவல் நிலையத்தின் தலைமைக் காவலரான அபர்ணா லாவகுமார் தனித்துவத்தோடு வலம்வருகிறார். அண்மையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘விக்’ செய்வதற்காகத் தன் கூந்தலைத் தானமாகக் கொடுத்திருந்தார். வழக்கு விசாரணைக்குச் சென்ற இடத்தில் எளிய குடும்பத்தின் சூழலை உணர்ந்து, மறுயோசனையின்றித் தன் வளையல்களைக் கழட்டிக்கொடுத்தவர் இவர். இப்போது கரோனா காலத்திலும் புல்லட் பெண் காவல் படையின் அங்கமாகக் களத்தில் நிற்கிறார். கம்பீரமும் கனிவும் ஒருசேரக் கொண்ட அபர்ணாவுடன் பேசியதிலிருந்து…

அது என்ன புல்லட் பெண் காவல் படை?

திருச்சூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் பெண் காவலர்கள் படைதான் இது. இதில் 12 பேர் இருக்கிறோம். ஊரடங்கில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை புல்லட்டில் பறக்கும் பெண் காவலர் படை தீர்த்து வைக்கும். எளியோருக்கு உதவுவதற்காக மாநகரப் பகுதி முழுவதும் புல்லட்டில் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்போம்.

கரோனா காலத்தில் என்ன வகையான உதவிகளைச் செய்கிறீர்கள்?

ஆதரவு இல்லாதவர்கள், வெளிமாவட்டம், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக மூன்று முகாம்களை திருச்சூர் மாநகராட்சி நடத்துகிறது. அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பணி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டில் தனித்திருப்போர், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கும் நேரில் தேடிப்போய் மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொடுக்கிறோம். இன்னொருபுறம், தனியாக வீட்டில் இருக்கும் வயோதிகர்கள் சிலருக்கு வசதி இருக்கும். அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பார்கள். நிம்மதியின்றி இருக்கும் அவர்களுக்குப் பிள்ளைகளாக உடன் இருந்து தேற்றுகிறோம். போலீஸ் என்றால் எப்போதும் விறைப்பாகவே இருக்க வேண்டும் என்று இல்லை. இது அன்பைச் சுமக்கும் நேரம். காக்கிகளின் மனிதத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு.

கரோனா பணி அனுபவம் எப்படி இருக்கிறது?

மருத்துவத் துறையினர் வார்டுகளுக்குள் கரோனா நோயாளிகளைக் காப்பதற்காகப் போராடுகிறார்கள். நாங்கள் வெளியே இருந்து புதிய நோயாளிகள் உருவாகிவிடக் கூடாதெனப் போராடுகிறோம். ஆனால், கரோனா மட்டும் பிரச்சினை இல்லையே; அதனால் ஏற்பட்டிருக்கும் உபவிளைவுகள் ஏராளம். நான் புல்லட்டில் ஒரு முதிய தம்பதிக்கு உதவப் போய்க்கொண்டிருந்தேன். ஒருவர் சாலையோரம் நடக்கவே முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அவரது கால்களில் புண்கள் இருந்தன. அதிலிருந்து சீழ் வடிந்துகொண்டே இருந்தது. அவரது கால்களைச் சுற்றி ஈக்கள் மொய்த்தவண்ணம் இருந்தன. அவருக்குக் கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் இருக்கும் என ஊகித்து, புல்லட்டை நிறுத்தி விசாரித்தேன். உடனே ஆம்புலன்ஸை வரச்சொல்லி மருத்துவமனையில் சேர்த்து, பிறகு வீட்டிலும் விட்டுவந்தேன். ஆறு சதுர கிமீ மட்டுமே பரப்பளவு கொண்ட திருச்சூருக்குள் மட்டும் எத்தனை வகையான தேவைகள் மனிதர்களுக்கு இருக்கிறது தெரியுமா!

தினமும் எத்தனை பேருக்கு உதவ வாய்ப்புக் கிடைக்கிறது?

எங்கள் அணிக்குத் தினமும் 50-60 அழைப்புகள் வருகின்றன. திசைக்கு ஒருவராய்ப் பிரிந்து உதவப் புறப்பட்டுவிடுகிறோம். இதுபோக, தன்னார்வலர்களும் சில தேவைகளைக் கூறுவார்கள். முகாம்களில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பொழுதுபோக்கக் கடும் சிரமம் இருப்பதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இறகுப் பந்து, கேரம்போர்டு என வாங்கிக் கொடுத்தோம். வயோதிகர்களிடம் மிரட்சி இருக்கிறது. அரசு இதையெல்லாம் சிறப்பாகக் கையாண்டு தேவையைப் பூர்த்திசெய்கிறது. கரோனா காலத்துக்கு என்றில்லாமல் திருச்சூரில் முன்னரே இந்த புல்லட் படையை உருவாக்கும் திட்டம் இருந்ததால் தனித்திருப்போர், வயோதிகர்கள் குறித்து எங்களிடம் தகவல்கள் இருந்தன. அவசரம் கருதி உடனே செயல்பாட்டுக்கு வந்துவிட்ட இந்த புல்லட் படை, அந்தத் தரவுகளின் அடிப்படையில் பலருக்கும் உதவுகிறது. இதை உதவி என்பதைவிட, மக்களுக்கு சேவைசெய்யக் கிடைத்த வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம்.

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

க்ரைம்

25 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்