ஊதிய உயர்வும் செயல்திறனும்!

அரசு அதிகாரிகள் மக்களுக்கான சேவகர்கள்தான்



பொருளாதாரச் சீர்திருத்தங்களின் 25-வது ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிற இந்த நேரத்தில், மத்திய அரசிலும் மாநிலத்திலும் இதோடு தொடர்பில்லாத வகையில் நடைபெறும் இரண்டு விவகாரங்கள் உள்ளன. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 23.5% சம்பள உயர்வு அறிவித்துள்ளது. கேரளம் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான ஆணையத்தை முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் அமைக்கத் தீர்மானித்துள்ளது. இதைச் செய்வதில் தனக்குள்ள அரசியல் சாசன அதிகாரங்களைப் பற்றிய அக்கறை கேரள அரசாங்கத்துக்கு இருக்கிறது. அச்சுதானந்தன் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், அந்தப் பதவி ஆதாயம் தரும் பதவியாக ஆகிவிடக் கூடாது என்பதிலும் அது கவனம் செலுத்துகிறது. குடிமக்கள் என்ற முறையில் நாம் கவனிக்க வேண்டியவை இவை.

பொதுவாக, அரசு நிர்வாகத்துக்குக் குறைந்த முக்கியத்துவம் தருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்களிடமிருந்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துகள் வருவது சிறப்பானது. அவர்கள் சந்தையைப் பற்றி பயமுறுத்துவதற்குத்தான் தங்களின் சக்தியைச் செலவழிப்பார்கள். முன்னாள் சோவியத் ஒன்றியத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாகத் தூக்கிப் பிடிக்கப்பட்டது. அது தகர்ந்துபோனதற்கு சந்தையைத் திறமையில்லாமல் நிர்வாகம் செய்த முறையும் காரணம்.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு

திறமையான அரசு நிர்வாகம் இன்று அவசியமானது. தாங்கள் ஆட்சிக்கு வரும்போது நிர்வாகத் துறை தங்களிடமிருந்து அந்நியமாகிவிடும் என்பதால், ஒரு வேளை இடது அறிவாளிகள் விமர்சனப் பார்வையைத் தவிர்த்திருக்கலாம். அது பற்றிய விமர்சனம் எவ்வளவு பற்றாக்குறையாக இருந்தாலும் அரசாங்கங்களின் திட்டங் களை அமலாக்குவதில் அரசு நிர்வாகமே மேம்போக்காக இருக்கிறது. குற்றங்கள் செய்துவிட்டு தண்டனைக்கு உட்பட மறுப்பதாக இந்த அரசு நிர்வாக முறை இருக்கிறது. அதை மேற்பார்வையிட நடந்த முயற்சிகள் திறன் மிக்கதாக இல்லை. மேல்தட்டு அதிகாரிகள் சட்ட விதிமுறைகளின்படியே பாதுகாக்கப்படுகிறார்கள். கீழ்மட்ட அதிகாரிகளும் இது விஷயத்தில் ஏறக்குறைய சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள். இதனால் அன்றாட வாழ்வில் குடிமக்களுக்கு ஏற்படும் குறைகளைத் தீர்ப்பதில் நீதிமன்றங்களும் எப்போதாவதுதான் தலையிடுகின்றன.

கேரள அரசின் முடிவை இரண்டு காரணங்களுக்காக வரவேற்கலாம். கேரள அரசின் செயல்பாடு மீது அறிவாளிகள் மத்தியில் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால், அரசு இயந்திரம் நன்றாகப் பணியாற்றவில்லை என்று பொதுமக்கள் உணர்கிறார்கள் என்று இதை எடுத்துக்கொள்ளலாம். உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது நடத்திய மக்கள் நீதிமன்றங்கள் பாணிக் கூட்டங்களில் மக்கள் குவிந்ததிலிருந்து இதனை நாம் உணரலாம். அக்கறையான அரசாங்கம் என்ற முகத்தோடு சாண்டியின் நிர்வாகம் இதைத் தீர்க்க முயன்றது. முதல்வரின் நேரத்தையும் மக்களின் பணத்தையும் வீண் செய்தவையாக அவை இருந்தாலும், மக்களால் கவனிக்கப்பட்டன. மக்களுக்குப் பணியாற்றுகிற பணியிலிருந்து விலகிப்போய்விட்ட நிர்வாக அமைப்பைச் சீரமைப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு விருப்பம் இல்லை என்பதாகவும் இதை விளக்கலாம். வழக்கத்துக்கு மாறாக, இடது ஜனநாயக முன்னணி நிர்வாகச் சீர்திருத் தங்களுக்கு ஆதரவளித்துள்ளது. அதைச் செய்வதற்கான சரியான மனிதரையும் அது தேர்ந்தெடுத்துள்ளது. அரசு அதிகாரிகள் மக்களுக்கான சேவகர்கள்தான் என்று வெளிப்படையாகப் பேசும் தைரியம் உள்ளவர் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்.

கிழக்கிந்திய கம்பெனியின் நடைமுறைகளிலிருந்து பெறப்பட்டது நமது நிர்வாகங்களின் செயல்முறை. அதன் நிர்வாகம் இந்தியாவின் செல்வத்தைப் பிடுங்கவும் உள்ளூர் மக்களை அடக்கவும் பயன்பட்டது. மக்களை நோக்கிய அதன் நடத்தை இன்னும் மாற்றப்படவில்லை. இன்றைய மாவட்ட ஆட்சியர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கலெக்டர்கள் என்ற பெயரில் வரிவசூலையும் சட்ட ஒழுங்கையும் பார்த்தனர். அந்த நடைமுறை சுதந்திரத்துக்குப் பிறகும் அப்படியே தொடர்கிறது. சமீபத்தில்தான் சென்னை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களின் நடத்தைகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு அரசாங்க அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளது. முதலில் 1950-லும் 1991-லும் நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்தோம். ஆனால், தீவிரமான நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்யவில்லை. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வெற்றிபெறும்போது, அவை மக்களின்பால் அதிகார வர்க்கத்துக்குக் கடமைப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். தற்போது அப்படியான விதிமுறைகள் எதுவும் இல்லை.

பணம்தான் எல்லாம்

பணம்தான் எல்லாம் என்ற அணுகுமுறைதான் இந்திய அரசின் நிர்வாக முறை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. லாபம்தான் கிழக்கிந்திய கம்பெனியின் நோக்கம். அதனால்தான் அதன் நிர்வாகம் பணம் பிடுங்குவதாக இருந்தது. அரசியல் ஆய்வாளரான சுனில் கிலானி இதை ‘மட்டமான ஆளுகை’என்று குறிப்பிடுவார்.

நிதி மேற்பார்வையானது வணிக நோக்கத்தின் அடிப்படையில் உருவாகியிருப்பதுபோல ஒழுக்கம், கண்ணியம் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக வில்லை. அரசின் இந்த ஆளுகை முறையில் சாமானி யர்களின் நோக்கங்களின்பால் ஒரு உணர்வுபூர்வமான அக்கறைக்கு இடம் இல்லை. உண்மையில், இந்த ‘உருக்குச் சட்டம்’ சாமானியர்களை வெறுப்படையச் செய்யும் முறையில் உள்ளது. காலனியாதிக்க அதிகார வர்க்கத்தின் மரபுகளை அப்படியே தக்கவைத்திருப்பதன் விளைவுகள் வெளிப்படையானவை. விளைவுகளின் மீது கவனம் செலுத்தாமல் வழிமுறைகளின் மேல் கவனம் செலுத்துவதாக இந்த அமைப்பு உள்ளது. அக்கறைக்குரியவை வழிமுறைகள்தான்; விளைவுகள் அல்ல. இத்தகைய நடைமுறைகளால் ஆதார வளங்கள் வீணாவது பற்றிய கவலை அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது.

தேவை அரசியல் உறுதி

மத்திய - மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்களுக்கு அப்பால் நமது பார்வையைக் கொண்டுசென்றால்தான், வீணாக்கப்படும் வளங்களின் பிரம்மாண்டத்தைப் பற்றியும் மக்களின் துன்பங்களைப் பற்றியும் நமது ஆய்வைத் தொடங்கவே முடியும். அரசாங்கத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரிந்து பரந்துள்ள பொதுத் துறையின் உயரதிகாரிகள் முதல் உள்ளூர் அரசாங்க உறுப்புகள் வரை நாம் பார்த்தாலே நிர்வாகத்தைச் சீர்திருத்தவில்லை என்றால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதை உணர முடியும்.

மூன்று துறைகளில் போடப்பட்ட மக்கள் பணம் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறேன். அவை: நீர்ப்பாசனம், கல்வி, தாய்-சேய் நலம். நமது நிர்வாகத்தில் பொருத்தமான நடத்தையை நம்மால் அமலாக்க முடியாத இயலாமையில்தான் இது வேரூன்றியுள்ளது. மனித வளத்தை மேம்படுத்துவதிலும் உணவு உற்பத்தியை விரிவுபடுத்துவதிலும் ஒரு நாட்டுக்கு உள்ள திறன், அதன் திறமைக் குறைவான ஆளுகையால் தடுமாறும்போது மேலும் அதிகமான தாராளமயத்தைப் பொருளாதாரக் கொள்கைகளில் கொண்டுவருவது உண்மையான பிரச்சினையிலிருந்து தப்புவதாகும். பொருளாதார நடைமுறைகளில் அரசு நிர்வாகத்தின் முக்கியமான பங்கு கிழக்காசிய அரசாங்கங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நமது அரசியல் தலைமையால் திறன் மிக்க முறையில் கையாளப்பட்டால், நமது அதிகார வர்க்கமும் வளர்ச்சிக்கான ஒரு படையாகச் செயல்படும்.

ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை மதிப்பிடுவதில் இந்த விவகாரத்தைத் தவறவிட்டுள்ளது மத்திய அரசு. உயர்தரமான செயல்திறனை முடுக்கிவிடாமல் சம்பள உயர்வை அறிவித்ததன் மூலம் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான ஒரு வாய்ப்பை மத்திய அரசு தவறவிட்டுள்ளது.

புலப்ரெ பாலகிருஷ்ணன், ஹரியாணாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

© ‘தி இந்து’ ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

விளையாட்டு

15 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

22 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

33 mins ago

இந்தியா

46 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்