வலுவிழக்கிறது லோக்பால் சட்டம்!

“லோக்பால், லோக் ஆயுக்த பதவிகளை உருவாக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அதை ஏன் அமலுக்குக் கொண்டுவரவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். “இந்தச் சட்டத்தை எப்போது, எப்படி அமல் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்குக் கிடையாது” என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி அதற்குப் பதில் அளித்துள்ளார்.

“ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்” என்று மக்களவைப் பொதுத் தேர்தலின்போது வாக்களித்துத்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஊழல் செய்யும் பொது ஊழியர்கள் குறித்து சாதாரண பாமரன் புகார் அளித்தால்கூட அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்த ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது. இந்த அமைப்புகளுக்குத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. அலுவலக ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் மத்திய அரசுக்கு இல்லை. இதிலிருந்தே ஊழல் ஒழிப்பில் இந்த அரசுக்கு உள்ள அக்கறையை ஊகித்துவிட முடியும்.

தட்டிக் கழிக்கும் அரசு

2014 மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு எந்தக் கட்சியும் இடங்களைப் பெறவில்லை என்பது உண்மைதான். ஆயினும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியை, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகக் கருதக் கூடாது என்று இல்லை. லோக்பால், லோக் ஆயுக்த தலைவர்களை நியமிக்க அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்கப்பட வேண்டும் என்று லோக்பால் சட்ட அமைப்பு விதிகள் கூறுகின்றன. அப்படியொரு தலைவர் இல்லாததால் நியமிக்க முடியவில்லை என்று ஆளும் கூட்டணி வேண்டுமென்றே பதில் தருகிறது.

மத்தியப் புலனாய்வுக் கழகத்தின்(சிபிஐ) தலைவர் பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் இதே போன்ற விதிகள்தான் நடைமுறையில் உள்ளன. ஆனால், அந்தச் சட்டத்துக்கு மட்டும், அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவரையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி, சிபிஐ இயக்குநரை நியமித்தது அரசு. அதே நடைமுறையை லோக்பால், லோக் ஆயுக்த நியமனத்துக்குப் பின்பற்றத் தயாரில்லை. எனவே, 10 பக்கங்களைக் கொண்ட திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது. இந்தத் திருத்தமானது மூலச் சட்டத்தையே நீர்த்துப்போகும் வகையில் வாசகங்களைக் கொண்டிருந்தது. எனவே, எதிர்க்கட்சிகள் அந்த திருத்தத்தை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. அப்படியே அந்த திருத்த மசோதா நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இன்னும் இறுதி வடிவம் பெறாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது.

நீர்த்துப்போக வைக்க முயற்சி

2016 ஜூலை 31-ல் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டத்தின் 44-வது பிரிவின்படி, லோக்பால் நியமிக்கப்பட்டாலும், நியமிக்கப்படாவிட்டாலும் பொது ஊழியர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இப்படிச் சொத்துகளை அறிவிக்காமல் இருக்க, ஒரு திருத்த மசோதாவை அரசு கொண்டுவந்திருக்கிறது. சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை அடியோடு நீர்த்துப்போகச் செய்கிறது அந்தத் திருத்தம். அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்ட 48 மணி நேரத்துக்கெல்லாம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. மூலச் சட்டத்தை இந்தத் திருத்தம் நீர்த்துப்போகச் செய்கிறதே என்று வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அவையில் வருத்தம் தெரிவித்தனர். மசோதா நிறைவேறிய பிறகு நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டாலும், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்தான் தேர்வுக் குழுவில் இடம் பெற வேண்டும் என்ற சட்டப் பிரிவு மாற்றப்படவேயில்லை.

இவ்வாறு இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டது. லோக்பால் திருத்தச் சட்டமானது, பொது ஊழியர்களுடைய வாழ்க்கைத் துணைவர்கள், அவர்களுடைய குழந்தைகள் ஆகியோரின் சொத்துகளையும் அறிவிக்க வேண்டும் என்ற மூலச் சட்டத்தின் பிரிவை நீக்கிவிட்டது. சொத்து பற்றிய தகவல்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற பிரிவையும் இந்தத் திருத்தம் நீக்கிவிட்டது. சொத்துகள் எப்படி, எந்தவிதத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதை அரசு தீர்மானித்தால் போதும் என்று திருத்தப்பட்டுவிட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியர்கள் மீது புகார்கள் கூறப்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் இந்த சட்டமே கொண்டுவரப்பட்டது. பொது ஊழியரோ, அவருடைய சார்பில் யாராவது ஒருவரோ தங்களுடைய வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துகளையோ பணப் பயன்களையோ அடைந்தால் அல்லது வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்திருந்தால் ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவராவார் என்ற பிரிவு, புதிய திருத்தத்தால் அடிபட்டுப் போகிறது.

பொதுவாழ்வில் இருப்பவரின் வாழ்க்கைத் துணைவரோ, குழந்தைகளோ இவ்விதம் வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைத் தங்கள் பெயரில் வாங்கியிருந்தால் அது தொடர்பாக லோக்பால், லோக் ஆயுக்தவிடம் புகாராகத் தெரிவித்தால்தான் விசாரணை நடத்தி தண்டிக்க முடியும். அவர்கள் வாங்கிய சொத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லையென்று தடுத்துவிட்டால் எப்படிப் புகார் அளிக்க முடியும்?

இதற்குப் பிறகு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வியைக் கேட்டபோது, அத்துறை அமைச்சர் இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளிக்கும்போது நாடாளுமன்றத்துக்குத் தவறான தகவலைத் தந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. லோக்பால் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டு 2016-ல் நிறைவேற்றப்பட்ட திருத்தத் தீர்மானம், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவே இல்லை என்பதே அது.

சிதறடிக்கப்படும் நோக்கம்

லோக்பால் சட்டத்தை முனைமழுங்கச் செய்வதுதான் அரசின் நோக்கம் என்பது ஊழல் தடைச் சட்டத்துக்கு அது கொண்டுவர உத்தேசித்திருந்த திருத்தங்கள் வாயிலாக வெளிப்படுகிறது. லோக்பால் அமைப்புக்குள்ள முக்கிய அதிகாரங்கள் பலவற்றில் கைவைக்க அந்தத் திருத்தங்கள் வழிகோலுகின்றன. ஊழல் புகார்களை அதிகாரிகளின் பேரில் கூறினாலும் கூட, அரசு அனுமதித்தால்தான் அதிகாரிகள் மீது வழக்கு தொடர முடியும். இந்த அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்தப் பிரிவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரி மீதான புகார் என்றாலும் கூட, அரசு அனுமதித்தால்தான் ஊழல் தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்று திருத்தம் தடை விதிக்கிறது. லோக்பாலாக இருந்தாலும் கூட ஒரு அதிகாரியின் மீதான ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்துவதற்கு அரசின் முன் அனுமதி தேவை என்ற திருத்தமானது சுயேச்சையான ஊழல் ஒழிப்பு அதிகாரியின் பதவியையே கேலிப் பொருளாக்குகிறது. ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் அமைப்பையே பயனற்றதாக்கிவிட்டது.

இந்த அளவுக்கு நீர்த்துப் போய்விட்ட பிறகும் கூட லோக்பால் சட்டத்தை மோடி அரசு எப்போது நடைமுறைப்படுத்த முன்வரப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள ஒரு பதிலைப் பார்க்கும்போது நிச்சயம் வெகு விரைவில் அமலுக்கு வராது என்பது மட்டும் தெரிகிறது. டெல்லி வாடகைக் கட்டுப்பாடு சட்டமே கடந்த 30 ஆண்டுகளாக அமலுக்கு வரவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருப்பது இதைத்தான் உணர்த்துகிறது.

- கட்டுரையாளர்கள் இருவரும், தகவல் அறியும் மக்கள் உரிமையை தேசிய அளவில் பிரச்சாரம் செய்யும் அமைப்பின் உறுப்பினர்கள்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

39 mins ago

கருத்துப் பேழை

47 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

59 mins ago

மேலும்