மீண்டும் ஒரு பஞ்சத்தை எதிர்கொள்ளப் போகிறோமா?

சிறந்த நிர்வாகியும் சிந்துச் சமவெளி எழுத்துகளைப் படித்து உலகுக்கு அறிவித்த அறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்குத் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். ஒரே வரியில் மறுமொழி கூறி ஏற்றுக்கொண்ட அவர், “கடந்த தமிழ் ஆண்டின் பெயர் ‘துர்முகி’, பெயரைப் போலவே நம்பிக்கை அளிக்காமல் போய்விட்டது” என்று சுட்டிக்காட்டினார். மழை இல்லை, தண்ணீர் இல்லை. என் மனம் வறட்சி விவகாரத்தில் உறைந்தது.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் சமீபத்தில் ஒரு நாள் என்னைப் பார்க்க வந்திருந்தார். “தண்ணீர் பிரச்சினையில் யாருமே உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மழையைப் பெய்யவைப்பது நம் கைகளில் இல்லை. ஆனால், கிடைக்கும் நீரை வீணாக்காமல் பயன்படுத்துவது நம்முடைய பொறுப்புதானே?” என்றவர், நெடுநேரம் ஆற்றாமையோடு பேசிக்கொண்டிருந்தார்.

தாது வருஷப் பஞ்சம்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் 1876-77-ம் ஆண்டு நிலவிய பஞ்சம் குறித்து விவரித்திருக்கிறார். அவர் குறிப்பிட்டிருந்த ‘தாது வருஷப் பஞ்சம்’ என்ற வார்த்தை என் மூளையைக் குடைந்துகொண்டே இருந்தது. வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியைத் தொடர்புகொண்டேன். தமிழ் ஆண்டுக் கணக்கில் தாது வருஷத்தில் ஏற்பட்ட அந்தப் பஞ்சம் எப்படியான ஆழமான தாக்கங்களைத் தமிழ்ச் சமுதாயத்தின் நினைவில் பதித்துச் சென்றது என்று அவர் விளக்கினார்.

தென்னிந்தியாவிலும் தென் மேற்கு இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் 1876-78 இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடிப் பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு அந்த நாட்களின் வரலாறுகளைப் படிக்கையில், 140 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற இன்னொரு பஞ்சத்தை நோக்கிச் செல்கிறோமா என்ற கேள்வி எழுந்தது.

ஆட்சியாளர்களின் அலட்சியம்

இந்தியாவை அந்தக் காலகட்டத்தில், அதாவது 1876-1880-ல் ராபர்ட் புல்வர் லிட்டன் பிரபு வைஸ்ராயாக இருந்து ஆண்டார். அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர்களின் நண்பர். ஆனால், வரலாற்றில் மக்களால் பெருமளவில் எதற்காக நினைவுகூரப்படுகிறார் என்றால், எதிர்மறையான செயல்பாடுகளுக்காகவே நினைவுகூரப்படுகிறார். ஆப்கனில், மிருகத் தனமாக அவர் நடத்திய படையெடுப்பில் பொதுமக்கள் பெருமளவில் உயிரிழந்தனர். அதேபோல, தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க சிறிதும் கற்பனை வளமோ, அக்கறையோ, ஆட்சித் திறனோ இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக நடவடிக்கைகளை எடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்தார்.

1876-1880 காலகட்டத்தில் மழை எப்படிப் பெய்தது என்று பார்த்தால், எப்போதாவது சொற்ப அளவில் பெய்தது அல்லது பல பகுதிகளில் தொடர்ந்து 20 மாதங்களாகப் பெய்யவே இல்லை. வறட்சி, பஞ்சம் ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை; படிப்படியாக அவை உருவாகியிருக்கின்றன.

இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பிஹாரைப் பஞ்சம் பீடித்தபோது வங்கத்தின் லெப்டினென்ட் கவர்னராகப் பதவி வகித்த ரிச்சர்ட் டெம்பிள், விழிப்போடு முன் கூட்டி பல நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், இந்தியர்களை ஆள்வதற்கான ‘பிரிட்டிஷ் அரசாங்கம்’ அப்படிச் செயல்படுவதற்கானதல்லவே! தேவை யில்லாமல் ஏன் மக்களுக்கு உணவு கொடுக்கிறாய் என்று அவருடைய பிடறியில் தட்டியது பிரிட்டிஷ் அரசு.

ஆக, இப்போது தென்னிந்தியா பஞ்சத்தில் ஆழ்ந்தபோதும் அதே ரிச்சர்ட் டெம்பிள்தான் பஞ்ச நிவாரண நடவடிக்கைகளுக்கான ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆனால், முன்பு பிஹாரில் செயல்பட்டதைப் போல அவர் செயல்படவில்லை. அடிபட்ட எச்சரிக்கை அவரிடம் இருந்தது. மேலும் அவர் அப்படி இப்படி நடந்துகொள்ள முடியாதபடி வைஸ்ராய் லிட்டன் பிரபு பார்த்துக்கொண்டார். ஆக, லிட்டன்-டெம்பிள் கூட்டணி இரும்பு இதயத்தோடும், இறுக மூடிய கைகளோடும் ‘நிவாரணப் பணி’களைக் கவனித்தது.

பஞ்சத்தைப் போக்க உணவு தானியங்களை இறக்குமதி செய்யாமல், இருந்த தானியங்களையும் முதல் காரியமாக ஏற்றுமதி செய்தனர். வறட்சி நிவாரணப் பணிக்கு அளித்த கூலியும் மிக மிகக் குறைவு. அவர்கள் முழுக்கக் கண்ணை மூடிக்கொண்டிருந்தனர் என்று குற்றஞ்சாட்டிவிட முடியாது. ஆனால், பஞ்சத்தை நேரில் பார்த்து அறியாமல், புரையோடிய கண்கள் வழியாகப் பார்த்தனர். விளைவாக லட்சக்கணக்கான மக்களைச் சாவுக்குக் கொடுத்தனர்.

வரலாறு திரும்புகிறதா?

இப்போது நம்மைச் சுற்றி, பற்றி எரியும் வறட்சியில் யார் இருக்கிறார்கள்? லிட்டன் - டெம்பிள் போன்ற உணர்வு கொண்டவர்கள்தான் நம்மைச் சுற்றி இருக்கின்றனர். இந்திய அரசு இப்போது ‘பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர்’ நடத்திக்கொண்டிருக்கிறது. மாநில அரசும் அப்படித்தான். அதன் கவனம் வேறு எங்கோ இருப்பதால், வறட்சிக்கும் பஞ்சத்துக்கும் அதனால் எதையும் செய்ய முடியவில்லை.

மக்கள் அவதியுற்றிருந்த 1877-ல் டெல்லிக்கு சுதேச அரசர்களை வரவழைத்து பெரிய தர்பாரைக் கூட்டி, அதில் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் சக்ரவர்த்தினியாக அறிவித்தார் லிட்டன் பிரபு. எல்லோர் கவனமும் அதில் இருந்தது. இப்போது அதுபோல எதுவும் நடக்கிறதா? இருக்கிறதே, அது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! வறட்சி நிலவுவதையே கவனத்திலிருந்து நீக்கும் அளவுக்கு அபாயகரமாக அது எல்லோர் கவனத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தும் போராட்டம் இந்தியாவின் பெரும் பகுதியினர் கவனத்தை ஈர்க்காதது ஏன்?

வறட்சி பாதித்த பகுதிகளில் உள்ள தண்ணீர் இன்னும் எத்தனை நாளைக்கு நம் தேவைகளை நிறைவேற்றும் என்று சொல்ல யாராவது இருக்கிறார்களா? நெருக்கடி நேரத்தில் சென்னை மாநகர மக்களும் நிர்வாகமும் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன, நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டியது என்ன? தண்ணீரை இனி அளந்து பயன்படுத்த வேண்டுமா; நீச்சல் குளங்கள், தொழில் நிறுவனங்களுக்கான தண்ணீர் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா இதையெல்லாம் சொல்ல யாராவது இருக்கிறார்களா? பஞ்சம் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கவில்லை - வந்து சில வாரங்களாகிவிட்டது. பஞ்சம் இரக்கமில்லாதது. ஆட்சியாளர்களே, ஐயா யாராவது இருக்கிறீர்களா? எங்கள் குரல் கேட்கிறதா?

தொடர்புக்கு: gopalgandhi1@yahoo.com

சுருக்கமாகத் தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 secs ago

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

27 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

38 mins ago

இந்தியா

51 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்