முடிவை நீங்கள் எடுங்கள் ரஜினி!

1996-ல் ரஜினி அரசியலுக்கு வரலாமா என்று கேட்டு எடுத்த கருத்துக்கணிப்பு என்ன சொன்னது?

மீண்டும் அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் ரஜினி. பொதுவாக, தனிக் கட்சியைத் தொடங்க முற்படும்போது நடிகர்கள் பேசும் ‘தூய பரிசுத்தவாத’த்தையே ரஜினியும் இப்போது உதிர்த்திருக்கிறார். அதிமுகவைத் தொடங்கியபோது எம்ஜிஆரும், தேமுதிகவைத் தொடங்கியபோது விஜயகாந்தும் பேசிய பேச்சுகளை எடுத்துப் படித்துப் பார்த்தால், அந்தப் பேச்சுகளுக்கும் ரஜினி பேச்சுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்க முடியும். பிற்காலத்தில் அந்தக் கட்சிகள் வந்தடைந்திருக்கும் நிலையையும் ரஜினி முழக்கத்தின் பின்னுள்ள மாயாவாதத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதை ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். ஆனால், எந்த நோக்கத்தின்பேரில் அவர்கள் அரசியலுக்குள் நுழைகிறார்கள் அல்லது நுழைய வைக்கப்படுகிறார்கள் என்பது இங்கு பரிசீலிக்கப்பட வேண்டியது. ரஜினியின் அரசியல் ஆசைக்கும் பிறருடைய அரசியல் ஆசைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. எம்ஜிஆரோ, சிவாஜியோ, விஜயகாந்தோ, பாக்யராஜோ ஒரு முடிவு எடுப்பதில் தெளிவாக இருந்தவர்கள். ரஜினி தானும் குழம்பி மக்களையும் குழப்புபவர் என்பதே அவருடைய ஆசையின் பின்னுள்ள வேறுபாடு.

‘ஆண்டவன் சொல்ல வேண்டும்’ என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அடிக்கடி சொல்பவர் ரஜினி. ஆனால், ஆண்டவனிடம் அல்ல; தன் உள்ளுணர்விடமும் அல்ல; தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சொல்வதையே அவர் கேட்கிறாரோ என்று தோன்றுகிறது. அரசியல் என்பது அடிப்படையில் துணிச்சலை முதலீடாகக் கொண்ட தொழில். சுயதுணிச்சல் இல்லாதவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது ஒருவரோடு முடியும் கதை அல்ல என்பதால்தான்.

சிவாஜியின் தெளிவு

‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்கிற தனிக் கட்சியைத் துவக்கிய சிவாஜிகணேசன், அதிமுகவின் ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 50 தொகுதிகளைப் பெற்றுத் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியபோது, அவருடன் தமிழகம் முழுக்கப் பயணிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. செல்லும் இடங்களில் எல்லாம் திரளான கூட்டம். உற்சாகம் ததும்பப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் போட்டியிட்ட திருவையாறு தொகுதியிலேயே மோசமான தோல்வியைத் தழுவினார். ‘‘அவ்வளவு கூட்டம் வந்துச்சே.. ஆனா யாரும் ஓட்டுப் போடலையேப்பா!’’ என்ற வார்த்தைகளையே தேர்தல் முடிந்த பிறகு உச்சரித்த சிவாஜி, கூடிய சீக்கிரமே தெளிவான முடிவை எடுத்தார்: அரசியல் நமக்குச் சரிப்படாது!

அரசியலுக்கு வருவதாகச் சொன்னதை ரஜினியின் வார்த்தையில் சொன்னால், ஒரு ‘முரட்டுத் தைரியத்தோடு’ களம் இறங்கியவர் தேமுதிக தலைவரான விஜயகாந்த். கட்சியைத் துவக்கி, அதை மக்களிடம் எடுத்துச் செல்ல மற்ற தலைவர்களைவிட அதிகப்படியான கிராமங்களுக்கு அலைந்து எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான வாக்கு சதவிகிதத்தைப் பெற்று எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆனவர். சினிமாவைக் காட்டிலும் கூடுதலான அலைச்சல்கள், மன உளைச்சல்கள், உடல் நலக் குறைவு என எல்லா இழப்புகளையும் தாண்டினாலும் அவருக்கு அரசியல் சார்ந்து ஒரு தெளிவு இருக்கிறது: அரசியல் நமக்கு வேண்டும்!

அரசியல் வேண்டாம்

சினிமாக்காரர்களின் அரசியல் கனவுகளுக்கு எம்ஜிஆர், என்டிஆரில் தொடங்கி பாக்யராஜ், டி.ராஜேந்தர் வரை வெற்றி - தோல்விகளுக்கான இரு பக்க முன்னுதாரணங்களும் உள்ளேயே இருக்கின்றன. அவற்றைக் கொண்டே அவர்கள் முடிவை எடுக்க முடியும். மக்கள் மீது திணிக்க வேண்டியது இல்லை. மக்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள முற்படுவதிலும் தவறில்லை.

நவரச நடிகர் என்றழைக்கப்பட்ட முத்துராமன் ஓர் உதாரணம். சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரம். அரசியலுக்குள் இறங்கச் சொல்லி சிலர் அவருக்கு ஆசை காட்டினார்கள். அவருக்கும் அந்தச் சபலம் இருந்திருக்க வேண்டும். தமிழின் பிரபலமான வார இதழ் ஒன்றில் ‘நான் அரசியலுக்கு வரலாமா? உங்கள் கருத்தை எழுதுங்கள்!’ என்று வெளிப்படையாக அறவித்தார். பதிலாக வந்த கடிதங்களில் பெரும்பாலானவை ‘அரசியலில் இறங்க வேண்டாம்.. நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்!’ என்றன.

அரசியலில் இறங்கும் முடிவை மாற்றிக்கொண்ட முத்துராமன், அதற்குப் பின் காலம் முழுமைக்கும் அரசியல் பக்கம் திரும்பவில்லை. ரஜினியும் இப்படி ஒரு மக்கள் கருத்தை ஏற்கெனவே அறிந்திருந்தார். அது 1996. ‘பாட்ஷா’ படம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்காத நேரம் அது. பல பத்திரிகைகளில் ரஜினி அரசியல் பற்றிய கவர் ஸ்டோரிகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தன. அப்போது ‘துக்ளக்’கில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘துக்ளக்’ அலுவலகத்துக்கு சோவைப் பார்க்க ரஜினி அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பார்.

ரஜினி அரசியலுக்கு வரலாமா?

அந்தச் சமயத்தில் திருச்சி, தஞ்சாவூர் தொடங்கி ராமநாதபுரம், குமரி வரை தமிழகத்தில் அரசியல்ரீதியான ஒரு கருத்துக் கணிப்பை ‘துக்ளக்’ பத்திரிகைக்காக நடத்தத் திட்ட மிட்டிருந்தோம். அதற்காக நாங்கள் கிளம்பும்போது ஆசிரியர் சோ சொன்னார், “நீங்க அந்த சர்வேகூட எனக்காக இன்னொரு விஷயத்தைப் பத்தியும் சர்வே பண்ணிட்டு வரணும்’’ என்றார்.

‘‘என்ன சார்?’’

‘‘ரஜினி அரசியலுக்கு வரலாமா, அவர் வர்றதைப் பத்தி ஜனங்க என்ன நினைக்கிறாங்க, அவரை ஏத்துக்குறாங்களா, இல்லையான்னு கேட்டுட்டு எனக்குத் தனியா ஒரு ரிப்போர்ட் கொடுக்கணும். ஆனா, இது பப்ளிஷ் பண்ணுறதுக்காக இல்லை!’’

அப்படியென்றால், அது எதன் நிமித்தமானது என்று நான் புரிந்துகொண்டேன்.

அந்தக் கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக் கானோரைச் சந்தித்தோம். பெருநகரங்களிலிருந்து கிராமங்கள் வரை பலதரப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்கள் கருத்துகளை கேஸட்டுகளாகப் பதிவும் செய்து வந்தோம்.

‘‘ரஜினி அரசியலுக்கு வர்றதைப் பத்தி என்ன நினைக்கிறாங்க.. அதைச் சொல்லுங்க?’’ - சோ உற்சாகம் பொங்கக் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

நான் அந்தக் கருத்துக்கணிப்பின் விவரங்களை அவரிடம் ஒப்படைத்தேன். 75%-க்கும் அதிகமான வர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்ப வில்லை என்று தெரிவித்திருந்தார்கள். மீதமுள்ள 25%-ல் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

‘‘அப்போ ரஜினி அரசியலுக்கு வரணும்னு பத்திரிகைகளில் எழுதறதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’’

‘‘சார்.. எனக்கே இது அதிர்ச்சிதான். ஆனா, நம்ம மீடியா ரிப்போர்ட்டை மட்டும் வெச்சிக்கிட்டு எந்த முடிவுக்கும் வந்துட முடியாது - மக்கள் மனசை அங்கே போய்த்தான் தெரிஞ்சுக்க முடியும்கிறதுக்கு இது இன்னொரு உதாரணம் சார்!”

அறிக்கையைக் கொடுத்துவிட்டு நான் கிளம்பிவிட்டேன். இது நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. மறுபடியும் அரசியலை எதிர்கொள்வது பற்றிய கேள்வி ரஜினிக்கு முன் நிற்கிறது. அந்தக் கருத்துக்கணிப்புபோல ஒன்றை நடத்தி முடிவைத் தெரிந்துகொண்டு அரசியல் பக்கம் வரட்டும். ஆனால், முடிவெடுக்கும் குழப்பத்தை மக்கள் மீது அவர் திணிப்பது நியாயமே இல்லை. 1996-ல் நடந்ததை விபத்து என்று இப்போது சொல்கிறார் ரஜினி.

இப்போதைய முடிவை எதிர்காலத்தில் விபத்து என்று சொல்ல மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தன்னுடைய முடிவையே எடுக்க முடியாதவர், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு வேலையைக் கற்பனைசெய்வது என்ன நியாயம்?

மணா, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: manaanatpu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

38 mins ago

உலகம்

21 mins ago

வர்த்தக உலகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்