வெறுப்பு... சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா?

By சூர்யா

புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். - இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

இந்தப் பதிவை ‘ஸ்மைலி’ போட்டு நகைச்சுவையாகப் பெரும்பாலானவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தபோது, தமிழகத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. தென்னை மரங்கள் புயல் காற்றால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, வாழ்வாதாரமே அழிந்துபோயிருந்தது. கொத்துக்கொத்தாக வீழ்த்தப்பட்ட வாழை மரங்கள், மழையிலும் காற்றிலும் நிலைகுலைந்துபோன பயிர்கள் என இழப்புகளை நினைத்து மக்கள் துடித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு வானிலை அறிவிப்பு வந்தால், உடனே மாணவர்கள் விடுமுறை கேட்பதுபோல வருகிற சாதாரண மீம்களில்கூட நகைச்சுவை அல்ல; கூடவே நம்முடைய அலட்சியத்தையும் அறிவீனத்தையும் சேர்த்தே பகிர்கிறோம். ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர். வாழ்வாதாரத்தை அழித்து, மக்களைத் துன்பத்தில் தத்தளிக்கவிடுகிற இயற்கைச் சீற்றத்தை ‘விடுமுறை தின’மாக நம் குழந்தைகளுக்குக் கடத்துவது ஆபத்தானது.

மது அடிமைகளுக்குக் குடிக்காமல் இருந்தால் எப்படி கை கால்கள் நடுங்குமோ, அதுபோலத் தங்களுடைய அபத்த நகைச்சுவைக்கு லைக், ஷேர், கமென்ட் அதிகமாகக் கிடைப்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கத் தயாராக இருக்கிறோம். நகைச்சுவை என்பது மற்றவர்களைக் காயப்படுத்துவது என்று யார் இந்தத் தலைமுறைக்குச் சொன்னது?

சென்னையில் கடந்த ஆண்டு ஒரு பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு, சில நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். அப்போது தீப்பற்றி எரிகிற கடையின் புகைப்படத்தைப் போட்டு, ‘மனைவிகூட புடவை எடுக்க வந்து மணிக்கணக்கில் காத்திருந்த கணவர்களின் வயிற்றெரிச்சல்தான் இந்தத் தீ விபத்து’ என்ற பதிவை ஸ்மைலி போட்டு சமூக ஊடகங்களில் பல ஆயிரம் பேர் பகிர்ந்திருந்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

மிகப் பெரிய இழப்புகளைக்கூட குரூர நகைச்சுவை ஆக்குவதும், அதை மற்றவர்கள் பகிர்வதும், கவலைகொள்ள வேண்டிய செயல் மட்டுமல்ல, கண்டிக்க வேண்டிய செயலும்கூட. ஊரே தீப்பற்றி எரியும்போது பிடில் வாசிப்பது என்பது இதுதான். ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்கும் நகைச்சுவை உணர்வு, இணையத்தில் ஒரு தொற்றுநோயைப் போலப் பலரின் தனிப்பட்ட வாழ்வைப் பலி கேட்கிறது. பொறுப்புணர்வற்ற பதிவுகளைப் பரப்புவதை நிறுத்தினால், அவை உருவாவது தானாகவே குறையும்.

இன்னொரு பக்கம் பிரபலங்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது சமூக ஊடகங்கள் நிகழ்த்துகிற அத்துமீறல் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. ரயிலில் பயணிக்கும்போது கழிப்பறைகளில் ஆபாசமாகக் கிறுக்கி வைத்த வக்கிரபுத்திக்காரர்கள்கூட யார் கண்ணிலும் படாமல்தான் அதைச் செய்தனர். இன்று இணையத்தில் காணக் கிடைக்கிற பல்வேறு விதமான கமென்ட்டுகளில் வெளிப்படுகிற வக்கிர மனநிலை அச்சமூட்டுகிறது.

சமூக ஊடகங்கள் ஒருவகையில் நம்மிடம் கும்பல் மனோபாவத்தை வளர்த்தெடுக்கின்றன. எங்கிருந்தும் எவர் மீதும் பாயக் காத்திருக்கும் குரூர மனோநிலைக்கு என்னுடைய தந்தையும் சமீபத்தில் இலக்கானார். ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரிடம் குறுக்கிட்டு, ‘தன்படம்’ எடுக்க முற்பட்டார் ஓர் இளைஞர். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்பேசியைத் தட்டிவிட்டார். அந்த சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவருடைய 75 ஆண்டு கால வாழ்வையே கேலிசெய்தது. ‘அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம்’ என்பதே என் கருத்தும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான். ஆனால், அந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள்? ‘விமர்சனம்’ என்ற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும் வழங்காமலிருப்பதுதான் எதிர்வினையா?

பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். இறப்பு நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தப் போகுமிடத்திலும், சிலர் ‘தன்படம்’ எடுக்க கட்டாயப்படுத்தும்போது அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறுவது எனக்கே தனிப்பட்ட அனுபவம்.

விமான நிலையத்தில் கழிப்பறையை உபயோகித்துவிட்டுத் திரும்பினால், அங்கும் கேமராவோடு நிற்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினருமே இத்தகைய அத்துமீறலைச் செய்வதும், இத்தகைய தர்மசங்கட சூழலைப் பிரபலங்கள் எதிர்கொள்வதும் அன்றாட நிகழ்வுகள்.

பொதுவெளியில் பொறுமையைத் தவறவிட்ட ஒரு கணத்துக்காக, ஒரு மனிதரின் ஒட்டுமொத்த வாழ்வையும் துச்சமாகத் தூக்கி எறிந்து ஆபாசமாகத் தாக்க முடியும் என்றால், நாமெல்லாம் யார்?

நகைச்சுவை என்கிற பெயரில் உருவான மீம்களும், விமர்சனம் என்கிற பெயரில் வெளிப்பட்ட வார்த்தைகளைப் படித்தபோது, இவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது.

இன்று சமூக ஊடகத்தில் அத்துமீறி கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்கள் நிகழும்போது, கண்ணியமிக்கவர்கள்கூட அமைதி காக்கிறார்கள். காரணம், சமூக ஊடகங்களில் பொறுப்பற்று நடந்துகொள்பவர்களைக் கண்டிப்பது என்பது, தேன்கூட்டில் கைவைப்பதுபோல ஆபத்து என்று அவர்களும் கருதுகிறார்கள். வன்மத்தை மனதில் தேக்கி வைத்துக் காத்திருந்து அடித்துவிடுகிறார்கள் என்று பயம் கொள்ளும் சூழல் எல்லோரிடத்திலும் இருக்கிறது. இன்னொரு பக்கம் இன்னொரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். சமூக வலைதளங்களில் இன்று ஆதிக்கம் செலுத்துவது யார்? நாம்தான். நம்மைப் பார்த்து நாமே அஞ்சும் நிலை அவலம் இல்லையா?

தொழில்நுட்பத்தைக் குறைகூற ஏதுமில்லை. இதே இணையவெளியில்தானே சென்னை வெள்ளத்தின்போது ஆயிரக்கணக்கான மீட்பர்கள் களமிறங்கினார்கள்? கஜா புயலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் எண்ணமுள்ளவர்களையும் ஒன்றிணைத்ததும் இதே சமூக ஊடகம்தான். ஆக, பிரச்சினை தொழில்நுட்பத்தின் மீது இல்லை. பயன்படுத்தும் நம்மிடம் வெளிப்படும் மனப்பான்மையில்தான் தீதும் நன்றும் இருக்கிறது. பூனைக்கு யாரேனும் மணி கட்டுவார்கள் என்று காத்திருப்பதில் பயன் இல்லை. ஒரு புயலைக்கூட அதன் தீவிரத்தோடு அணுகும் நிலையிலிருந்து நாம் தவறுகிறோம் என்றால், எவ்வளவு கீழே நாம் இறங்கிக்கொண்டிருக்கிறோம்? வெறுப்பை விதைப்பதில் காட்டுகிற ஆர்வம், பரப்புவதில் இருக்கிற துடிப்பு, அதைத் தடுப்பதிலும் இருக்க வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பு.

பின்குறிப்பு: ‘இவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு அவரை அட்மிட் பண்ணு’ என தினம் தினம் தாக்குவதற்குப் புதிய இலக்குகளைத் தேடி அலையும் சமூக ஊடகங்களில் என்னையும் ‘அட்மிட்’ செய்யக்கூடும் என்பதை முழுமையாக உணர்ந்துகொண்டே இதை எழுதுகிறேன்!

- சூர்யா, திரைப்பட நடிகர்.
தொடர்புக்கு: suriya@agaram.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

வாழ்வியல்

21 mins ago

தமிழகம்

37 mins ago

கருத்துப் பேழை

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்