விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!

By த.ராஜன்

புத்தாண்டை வரவேற்பதற்காக உலகம் முழுவதும் பல விநோதமான கேளிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடுகிறார்கள். புத்தாண்டு அன்று டென்மார்க்வாசிகள் தங்களின் சாப்பாட்டுத் தட்டுகளைக் கதவுகளில் எறிந்து நொறுக்குகிறார்கள், 12 திராட்சைகளை வாய்க்குள் திணித்துவைக்க முடிந்தால் நல்லது நடக்குமென ஸ்பெயின் தேசத்தினர் நம்புகிறார்கள், ஜப்பானியர்கள் 108 முறை மணி அடிக்கிறார்கள், பெல்ஜியத்தில் பசுக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்கிறார்கள், வருடம்பூராவும் பயணித்துக்கொண்டிருக்க வேண்டுமென புத்தாண்டு தினத்தில் பெட்டிகளைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள் கொலம்பியர்கள். ஆனால், தமிழகம் புதிதாக ஒரு கொண்டாட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது. அது, ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!

2015-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பதிப்புத் துறையின் மீட்சிக்காக ‘இந்து தமிழ்’ நாளிதழ் ‘புத்தாண்டு புத்தக இரவு’ எனும் அறிவியக்கத்துக்கு அறைகூவல் விடுத்தது. 2016-ல், பணமதிப்பிழப்பு நஷ்டங்களை ஈடுசெய்யும் விதமாக மீண்டும் அதே முன்னெடுப்பு இன்னும் பல புதிய அம்சங்களோடு  தன்னை விஸ்தரித்துக்கொண்டது. இரண்டு வருடங்களில் அது விரிந்த விதத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டது.

ஆண்டின் இறுதியை நெருங்கவும் வாசகர்களே ஆர்வத்தோடு, “இந்த வருடமும் புத்தகக் கொண்டாட்டம் உண்டா?” என பதிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் மொய்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். வாசிப்பில் திளைப்பவர்களுக்கு ஒரு விநோதமான பழக்கம் இருக்கிறது. புத்தகங்களுக்கான கூட்டம் நடந்தால் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெளியே சுத்தித்திரிய வேண்டும் என்று தோன்றாது, கிரிக்கெட் மேட்ச் பார்க்கத்  தோன்றாது, வெள்ளிக்கிழமை இரவு தியேட்டர் வாசல்களில் காத்துக்கொண்டிருக்கத் தோன்றாது. தங்களது கேளிக்கைகளையெல்லாம் கைவிட்டுவிட்டுப் புத்தகக் கடைகளில் திரண்டிருப்பதைக் காணும்போது அவாசகர்கள் அதை விநோதமாகப் பார்த்துக் கடந்துசெல்வார்கள். அப்படியான வாசிப்புப் பழக்கமற்றவர்களையும் இந்தக் கொண்டாட்டம் உள்ளிழுத்திருக்கிறது.

சென்னையில் கடந்த வருடம் வீதியிலேயே மேடை அமைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார் ‘பாரதி புத்தகாலயம்’ க.நாகராஜன். புத்தக நிகழ்ச்சிகளை வீதிக்குக் கொண்டுவந்தது ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியது. புத்தக விவாதங்களை மேலும் ஜனநாயகப்படுத்துவது போன்று இருந்தது.

தமிழ் வாசகர்களே, மாபெரும் கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்! இந்த வருடப் புத்தகப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் எல்லையைப் பன்மடங்கு விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறது தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி). பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் களத்தில் இறங்கிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சமாக 200 இடங்களில் டிசம்பர் 31 நள்ளிரவில் புத்தகக் கடைகளைத் திறந்துவைப்பதற்கான இலக்கோடு ஆயத்தங்கள் முழு மூச்சாக நடந்துகொண்டிருக்கின்றன. “புத்தக விற்பனைக்காகக் கடைகளைத் திறந்துவைப்பதோடு மட்டுமல்லாமல் குறைந்தபட்சம் 50 இடங்களிலாவது சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருக்கிறோம். 200 இடங்களிலும் நடத்த முடிந்தால் அது பெரும் மகிழ்ச்சி அளிக்கும்.  குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும்பொருட்டு குழந்தைகளைக் கதைசொல்ல வைக்கவும் புத்தக விமர்சனம் செய்யச் சொல்லவும் திட்டமிட்டிருக்கிறோம். எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு, நாடகங்கள், உரையாடல்கள், புத்தக அறிமுகக் கூட்டம் எனத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார் க.நாராஜன். “தமிழகத்தின் எந்த மூலையிலுள்ள புத்தக விற்பனையாளர்களும் பதிப்பாளர்களும் இந்தக் கொண்டாட்டத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் பாரதி புத்தகாலயத்தை (044-24332924) தொடர்புகொள்ளலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர தமிழின் முன்னணி பதிப்பகங்களும் பெரும் திட்டமிடல்களுடன் களம் இறங்கியிருக்கின்றன. கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ‘உயிர்மை’ பதிப்பகம் தனது சென்னை அலுவலகத்தில் எழுத்தாளர்களோடு கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸில் டிசம்பர் 31 (திங்கள்) மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் கொண்டாட்டம் நள்ளிரவு 1 மணி வரை நீடிக்கிறது. “டிஸ்கவரி புக் பேலஸ் வெற்றிகரமாக 10-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.  அதனால், நிகழ்வில் கலந்துகொள்ளும் வாசகர்களுக்கு சிறப்புப் பரிசும் உண்டு” என்றார் வேடியப்பன். “ஓவியர் மருது, ஆர்.பி.அமுதன், ஆர்.ஆர்.சீனிவாசன், சி.மோகன் உள்ளிட்டோரை அழைத்து சினிமா, ஆவணப்படம், இலக்கியம் என உரையாடல் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்  ‘பரிசல்’ பதிப்பகர் செந்தில்நாதன்.  ‘சிக்ஸ்த்சென்ஸ்’ பதிப்பகம் தங்கள் எழுத்தாளர்களை வரவழைத்து எழுத்தாளர்-வாசகர் சந்திப்பை ஏற்பாடுசெய்திருக்கிறது. “2018-ல் வாசித்ததில் தங்கள் மனம் கவர்ந்த புத்தகங்கள் குறித்து வாசகர்களைப் பேசவைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.  எதிர் வெளியீடுகள் 30% தள்ளுபடியில் கிடைக்கும்” என்றார் கோவையிலிருந்து இயங்கும் ‘எதிர்’ பதிப்பகர் அனுஷ். மதுரையை மையமாக கொண்டு இயங்கும் ‘நற்றிணை’ பதிப்பகம், டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை வாசகர்களுக்கு மட்டும் மூன்றில் ஒரு பங்கு விலையில் புத்தகங்கள் விற்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பதிப்புத் துறையின் மீட்சிக்காகத் தொடங்கப்பட்ட ‘புத்தாண்டு புத்தக இரவு இயக்கம்’ தமிழகம் முழுவதும் ஒரு புது அறிவியக்கமாக உருவெடுத்திருக்கிறது.

தமிழின் முன்னணி பதிப்பகங்கள், தமிழ் நூல் வெளியீடு, தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) என இப்போது களமிறங்கியிருக்கிறார்கள். இன்னும் புதுமையாக என்ன செய்யலாம் என விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தோடு சென்னைப் புத்தகத் திருவிழாவும் சூடுபிடித்துவிடும். ஜனவரி 4 அன்று தொடங்கும் புத்தகத் திருவிழா இம்முறை 17 நாட்கள் நடைபெறுகின்றன. வாருங்கள் வாசகர்களே, ஒரு புதிய கலாச்சாரத்தை உலகுக்குக் கற்றுத்தருவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

சினிமா

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்