காஷ்மீர் நிலவரம், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் மெகபூபாவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தியை ஸ்ரீநகரில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீர் நிலவரம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரில் 4 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் நேற்று காலை ஸ்ரீநகர் வந்து சேர்ந்தார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர் டெல்லியில் கூறும்போது, “திறந்த மனதுடன் காஷ்மீர் செல்கிறேன். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் உதவ முன்வரும் எவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில் மாநில முதல்வர் மெகபூபா முப்தி உடனான சந்திப்புடன் ராஜ்நாத் தனது பயணத்தை தொடங்கினார். ஸ்ரீநகரில் நடந்த இந்த சந்திப்பில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலவரம் குறித்தும், பாஜக - பிடிபி கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்ட அமலாக்கம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இதையடுத்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில், 2015-ல் அறிவிக்கப்பட்ட பிரதமர் மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

துணை முதல்வர் நிர்மல் சிங், மாநில தலைமைச் செயலாளர் பி.பி.வியாஸ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து வர்த்தகம், சுற்றுலா, சமூகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் 20-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

காஷ்மீர் பண்டிதர்கள், சீக்கியர்கள், ஷியா முஸ்லிம்கள், குஜ்ஜார் என பல்வேறு சமூகங்களின் பிரிதிநிதிகளும் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். பழ உற்பத்தியாளர்கள், சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்களும் அவரை சந்தித்தனர்.

தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறிய இவர்கள் இது தொடர்பாக மனுக்களும் அளித்தனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக ராஜ்நாத் இந்தப் பிரதிநிதிகளுடன் பேசினார்.

பிரிவினைவாதிகளுக்கு வீட்டுக்காவல்

இதற்கிடையே பிரிவினைவாத தலைவர்களான சையது அலிஷா கிலானி, மிர்வைஸ் உமர் பரூக் ஆகியோர் ஸ்ரீநகரில் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மற்றொரு தலைவரான யாசின் மாலிக் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகரில் 6 காவல் நிலையப் பகுதிகளில் நேற்று மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தீவிரவாதி சுட்டுக்கொலை

இதற்கிடையே வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டம், சோப்போரில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்