திரையரங்குகள் 100% இருக்கையுடன் இயங்க எதிர்ப்பு: தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கையுடன் இயங்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 4-ம் தேதி பிறப்பித்த அரசாணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெளியிட்ட விதிமுறைகளை நீர்த்துப் போகச்செய்யும் விதமாக தமிழக அரசின் உத்தரவு இருப்பதாகக் கூறி உடனடியாகத் தேவையான திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தற்போதுதான் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது.

இதனால் கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நாடு முழுவதும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதன்படி மாநிலங்களில் உள்ள கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் இயங்கும் திரையரங்குள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் கரோனா நிலவரம் குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி கடந்த டிச.31-ம் தேதி மீண்டும் ஒரு மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார்.

அவரது அறிவிப்பில் ஏற்கெனவே நவ.10 முதல் அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என்ற அறிவிப்பை அப்படியே கடைப்பிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 8 மாத காலமாக திரையரங்கில் படம் வெளியிடாததால் பலத்த இழப்பை திரைத்துறை சந்தித்து வருவதால் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரைத்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

நடிகர் விஜய், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தார். அப்போது அவரும் இதே கோரிக்கையை வைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன், உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து இயங்க அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா இன்று தமிழக தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நாடு முழுவதும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, மாநிலங்களில் உள்ள கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் இயங்கும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு 2021, ஜனவரி 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கையுடன் இயங்கலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக இருக்கிறது.

ஆதலால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, விதிமுறைகள் எந்தவிதத்திலும் மீறக்கூடாது, நீர்த்துப்போகச் செய்யும் விதத்தில் இருக்கக்கூடாது. அதை அப்படியே செயல்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, வழிகாட்டுதலின்படி மத்திய அரசு, மாநில அரசுகள் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூகவிலகலைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதலால், கடந்த மாதம் 28-ம்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெளியிட்ட வழிமுறைகளின்படி, தமிழக அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

55 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்