கான்பூரில் 8 போலீஸாரை பலியாக்கிய ‘உ.பி. டான்’ விகாஸ் துபே: 19 வருடங்களுக்கு முன் காவல்நிலையத்தில் உ.பி. அமைச்சரை சுட்டுக் கொன்றவர்

By ஆர்.ஷபிமுன்னா

கான்பூரில் நேற்று இரவு டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸாரை பலியாக்கிய விகாஸ் துபே, ‘உத்தரப் பிரதேச டான்’ என்றழைக்கப்படுபவர். இவர் 19 வருடங்களுக்கு முன் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த அம்மாநில அமைச்சரை சுட்டுக் கொன்ற குற்றவாளி.

உ.பி. கான்பூரின் ஊரகப்பகுதியான சவுபேபூர் காவல்நிலையப் பகுதியின் விக்ரு கிராமத்தை சேர்ந்தவர் விகாஸ் துபே. சொந்த பகைமை காரணமாக அப்பகுதியின் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரான சித்தேஷ்வர் பாண்டே கொலை வழக்கில் முதன்முறையாக சிக்கினார்.

இதில் ஆயுள்தண்டனை அடைந்தவரது வழக்கு மேல்முறையீடாக நடைபெறுகிறது. இதில் ஜாமீன் பெற்றவர் தொடர்ந்து உ.பி.யின் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு கிரிமினலாக மாறினார்.

இதனால், உ.பி.யின் ‘டான்’ என்றழைக்கப்படும் விகாஸ் துபே, 19 வருடங்களுக்கு முன் காவல்நிலையத்தில் நுழைந்து நடத்திய கொலை பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. திரைப்படங்களை மிஞ்சும் இச்சம்பவத்தில், அப்போதைய பாஜக ஆட்சியின் மாநில இணை அமைச்சரான சந்தோஷ் சுக்லா கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் விகாஸுக்கு எதிராக எவரும் சாட்சி கூற முன்வரவில்லை. இதனால் வழக்கிலிருந்து விகாஸ் விடுவிக்கப்பட்டார். கான்பூரின் கிராமப்புற இளைஞர்களையே தம் கும்பலில் சேர்த்து தலைவராகிவிட்டார். விகாஸ் துபேயிடம் சட்டவிரோதமான நவீனரகத் துப்பாக்கிகள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில், அரசியலிலும் நுழைய முயன்ற விகாஸ் துபே, கான்பூரின் நாகர் கிராமப்பஞ்சாயத்தின் தலைவர் ஆனார். பிறகு உ.பி.யின் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களிலும் போட்டியிட முயன்றார்.

கான்பூர் உள்ளிட்ட உ.பி.யின் பல்வேறு மாவட்டங்களில் விகாஸ் துபே மீது சுமார் 60 கிரிமினல் வழக்குகள் பதிவாகி தேடப்பட்டு வருகிறார். இதனால் உ.பி. காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டவரை பிடிக்க ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று இரவு தனது விக்ரு கிராமத்தின் ஒரு வீட்டில் இருப்பதாகக் கிடைத்த தகவலால் அவரை பிடிக்க கான்பூரின் 3 காவல்நிலையப் போலீஸார் சென்றிருந்தனர். இவர்களை கிராமத்தினுள் நடந்துவர வைக்க வேண்டி நுழைவுப் பகுதியில் பொக்லைன் வாகனத்தை திட்டமிட்டு நிறுத்தி தடுத்துள்ளார்.

இதனால், தம் வாகனங்களை நிறுத்திய போலீஸார் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதற்காகவே காத்திருந்தது போல், விகாஸ் துபே தனது கும்பலுடன் வீடுகளின் மேற்புறங்களில் மறைந்திருந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

இதன் பிறகு அருகிலுள்ள சம்பல் காடுகளில் புகுந்து அனைவரும் தப்பி விட்டனர். எனினும், விகாஸ் கும்பலைச் சேர்ந்த 2 பேரும் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கான்பூர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், மேலும் ஏழு காவலர்கள் துப்பாக்கி குண்டுகளுடன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உ.பி. காவல்துறையின் பரிதாப பலிக்கு பின் விகாஸ் துபேயை பிடிக்க அம்மாவட்ட எஸ்எஸ்பியான பி.தினேஷ்குமார். ஐபிஎஸ் தலைமையில் ஐந்து சிறப்பு படைகளும், உபி அதிரடிப்படையினரும் இறங்கி உள்ளனர்.

கிரிமினல் மற்றும் மதக்கலவரங்களுக்கு பெயர்போன கான்பூர் மாவட்டக் காவல்துறை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் பொறுப்பை முதன்முறையாக ஏற்ற தமிழராக தினேஷ்குமார் கடந்த மாதம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

28 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

30 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்