சிபிஐ காவல் முடிந்தபின் சிதம்பரம் திஹார் சிறையில் அடைப்பு?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிபிஐ காவல் முடிந்த பின் திஹார் சிறைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ காவலில் இருக்கும் ப.சிதம்பரம் இன்னும் 5 நாட்கள் சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கான 5 நாட்கள் காவல் முடிந்தபின் அடுத்துவரும் நாட்களை திஹார் சிறையில் கழிக்க வேண்டியது இருக்கும்.

இதற்காக திஹார் சிறையில் உள்ள அறையை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளார்கள்.

ஐஎன்எக்ஸ் மீடியா

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சிபிஐ அவரைக் கைது செய்து காவலில் எடுத்தது. சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை வரும் 26-ம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்நிலையில் இன்னும் நான்கு நாட்கள் சிபிஐ வசம் காவலில் ப.சிதம்பரம் இருக்கப் போகிறார். இந்த 4 நாட்களும் நாள்தோறும் 30 நிமிடங்கள் தனது குடும்பத்தினரைச் சந்திக்க ப.சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 48 மணிநேரத்துக்கு ஒருமுறை சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ காவல்

5 நாட்களில் காவலில் எடுத்த சிபிஐ சிதம்பரத்தை அவர்களின் தலைமை அலுவலகத்தில் கீழ்தளத்தில் உள்ள அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அறையில் இரு படுக்கை அறைகள், ஏசி, பிரிட்ஜ், தொலைக்காட்சி, ஹீட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. சிபிஐஅமைப்பில் உள்ள எஸ்பி. அந்தஸ்து அதற்கு அதிகமான பதவியில் இருப்பவர்கள் தங்கும் அறையாகும்.

இந்த அறையில்தான் அகஸ்டாவெஸ்ட் லாண்ட் கிறிஸ்டியன் மைக்கேல், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி, அவரின் உதவியாளர் சதிஸ் பாபு சானா ஆகியோர் சிபிஐ காவலில் இருந்தபோது இந்த அறையில்தான் தங்கி இருந்தார்கள்.

இந்நிலையில் வரும் திங்கள்கிழமை வரை சிபிஐ காவலில் இருக்கும் ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் இருப்பதால், 5 நாட்கள் சிபிஐ காவல் முடிந்தபின் சிபிஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் அதன்பின் அவர் திஹார் சிறைக்குத்தான் அனுப்பப்படுவார்.

தயாராகும் திஹார் சிறை

இதுகுறித்து திஹார் சிறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் முடிந்தபின் ஒருவேளை ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் நீதிமன்ற காவலில் திஹார் சிறைக்குதான் அனுப்பப்படுவார். அவர் சிபிஐ அல்லது அமலாக்கப்பிரிவு கட்டுப்பாட்டில் இருக்கப்போகிறார் என்பதைப் பற்றித் தெரியாது. ஆனால், நீதிமன்றக் காவலில் வரும்போது அவர் திஹார் சிறைக்குத்தான், சட்டத்தின்படி வர வேண்டியது இருக்கும்" எனத் தெரிவித்தார்.

திஹார் சிறையில் உள்ள பொருளாதார ற்றங்கள் செய்தவர்களுக்கான வளாகத்தில் சிறை எண் 7-ல் அடைக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 7-ம் சிறை மிகவும் பாதுகாப்பானது.

இரு அடுக்கு பாதுகாப்பு கொண்டது. மிகவும் சிறிய அறைகளைக் கொண்டிருக்கும் இந்த சிறையில் பொருளாதார குற்றவாளிகள் தவிர்த்து, பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்கள், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் ஆகியோரும் இந்த வளாகத்தில் அடைக்கப்படுவார்கள்.

வசதிகள்

சிறையின்விதிப்படி நீதிமன்றக் காவலில் வருவோர்கூட தரையில்தான் உறங்க வேண்டும். ஆனால், ப.சிதம்பரம் மூத்த குடிமகன், முன்னாள் நிதியமைச்சர், எம்.பி. என்பதால் மரக்கட்டில் மட்டும் மெத்தையின்றி வழங்கப்படும்.

சிறையில் தயார் செய்யப்பட்டஉணவுகளைத்தான் ப.சிதம்பரம் சாப்பிட வேண்டும். மதிய உணவு, இரவு உணவுடன் பருப்பு, ஒரு காய், 4 முதல் 5 சப்பாத்திகள் வழங்கப்படும்.

ஒருவேளை ப.சிதம்பரம் தென்னிந்திய உணவுகள் வழங்க வேண்டும், சிறை உணவு பிடிக்கவில்லை எனக் கேட்டால், அவருக்கு சிறை கேண்டீனில் இருந்து தயார் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகளை வரவழைத்து சாப்பிடலாம். நீதிமன்ற அனுமதிபெற்று வேறு உணவுகளையும் வரவழைத்து சாப்பிடவும் சிதம்பரத்துக்கு அனுமதி உண்டு.

நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை அவர்களின் குடும்பத்தினர் அளிக்கலாம். அதை அணிந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படும்.

திஹார் சிறை -1

தேசத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மும்பை தீவிரவாத தாக்குதலின்போது பல்வேறு நடவடிக்கைகளை தீவிரவாதிகளுக்கு எதிராக எடுத்ததால் அவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சிறையிலும் அந்த அச்சுறுத்தல்கள் இருக்கும்பட்சத்தில் அவர் சிறை எண் ஒன்றுக்கு மாற்றப்படுவார். அங்கு கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் சிறப்பு போலீ்ஸ் பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.

திஹார் சிறையின் ஒன்றாம் வளாகத்தில் உள்ள சிறையில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றவாளியான சஹாரா நிறுவனத்தின் சுபத்ரா ராய், காமென்வெல்த் அமைப்பின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாதி ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த சிறையில் சமையல் அறையும், மேற்கத்திய பானி கழிவறையும் இருக்கும். சிறையில் வழங்கப்படும் அதே உணவுகள்தான் இங்கும் வழங்கப்படும் என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்