என்கவுன்ட்டர் நடத்துவோம் என ஆந்திர போலீஸார் எச்சரித்தும் பயனில்லை

By செய்திப்பிரிவு

திருப்பதி, கடப்பா, கர்னூல் ஆகிய 3 மாவட்டங்களில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி அமைந்துள்ளது. இதில் விலை உயர்ந்த அரிய வகை மரமான செம்மரம் அதிகளவில் உள்ளது. இவற்றுக்கு வெளிநாடுகளில் நிறைய தேவை உள்ளதால் கடத்தல்காரர்கள், தமிழக தொழிலாளர்களை பண ஆசை காட்டி திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிகளுக்கு ஏஜெண்டுகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். ஆந்திர போலீஸார் அடையாளம் காணாமல் இருக்க அவர்கள் அரசு, தனியார் பஸ்கள், ரயில்களில் பக்தர்கள் போல செல்கின்றனர்.

பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, சேலம், காஞ்சி புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். அவர்களில் மரம் வெட்ட ஒரு பிரிவும் வெட்டிய மரங்களை லாரிகளில் ஏற்ற ஒரு பிரிவும், அங்கிருந்து வாகனங்களில் கடத்த ஒரு பிரிவுமாக பிரிக்கப்படுகின்றனர். செம்மர கடத்தல்காரர்கள், ஒரு மரம் வெட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 ஊதியமாக வழங்குகின்றனர்.

ஆனால் மரம் வெட்டும் இடங்களுக்கு செம்மர கடத்தல்காரர்கள் இதுவரை வந்ததில்லை. அவர்கள் ஏஜெண்ட்டுகள் மூலமாக திரையின் பின்னால் இருந்து அரசியல், அரசு அதிகாரிகளின் பலத்தால் செம்மரங்களை கடத்துகின்றனர். கூலி அதிகமாக கிடைக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக தங்களது குடும்ப ஆட்களுக்கும்கூட தெரியாமல் சிலர் மரம் வெட்ட ஒப்புக்கொள்கின்றனர். மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரையும் பிரிந்து இந்த வேலைக்கு வருகின்றனர்.

மரம் வெட்டும் தொழிலாளர்களை தடுக்க ஆந்திர போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சேஷாசலம் வனப்பகுதிக்கு வந்தால் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் என்றும் போலீஸாரை தாக்கினால் என்கவுன்ட்டர் நடத்தப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர். ஆனால் தொழிலாளர்கள் மத்தியில் இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களில் செம்மரம் வெட்டும் தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோக்கள் அடிக்கடி வெளியாகின்றன.

இந்நிலையில் தற்போது 20 தமிழக தொழிலாளர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செம்மர கடத்தலுக்கு பின்பல மாக இருப்பது யார் என்பது குறித்து போலீஸார் இதுவரை விசாரணை நடத்தவில்லை. பிடிபடுபவர்கள் தொழிலாளர்கள் என்று தெரிந்தும் பின்னணியில் இருக்கும் அரசியல் பலமிக்க கடத்தல்காரர்களை பிடிக்க போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

என்கவுன்ட்டரில் இறந்தவர்கள் யார்?

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் தமிழகத்தை சேர்ந்த வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. முதலில் இறந்த 20 பேரில் 12 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. ஆனால் இறந்தவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீ ஸார் பின்னர் தெரிவித்தனர்.

இவர்கள் பழைய தொழிலாளர்களா என்பது குறித்தும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அனைவரின் உடல்களும் நேற்று இரவு திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இரவில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இன்று உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவை குறித்த விவரங்களை போலீஸார் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

‘போலீஸாரை தாக்கியதால் என்கவுன்ட்டர்’

திருப்பதி என்கவுன்ட்டர் குறித்து ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா ஹைதராபாதில் நேற்று கூறியதாவது: செம்மர கடத்தல் கும்பலை சரணடையும்படி அதிரடி போலீஸார் பலமுறை எச்சரித்தும் அவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் போலீஸார் தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் 2 இடங்களில் 20 செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இறந்துள்ளனர். போலீஸாரும் காயமடைந்துள்ளனர் என கூறினார்.

மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் தகவல்

திருப்பதி என்கவுன்ட்டர் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைதராபாதில் மாநில போலீஸ் டிஜிபி ராமுடு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் ஆந்திர ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனை நேரில் சந்தித்து என்கவுன்ட்டர் விவரங்களை எடுத்து கூறினார். இந்த என்கவுன்ட்டர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இது போலி என்கவுன்ட்டர்: சித்தூர் மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று இரு இடங்களில் நடந்தது போலி என்கவுன்ட்டர் என்று சித்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் குமார ரெட்டி குற்றம் சாட்டினார்.

சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பின்னர் திருப்பதியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இது நூற்றுக்கு நூறு சதவீதம் போலி என்கவுன்ட்டர் ஆகும். சம்பவம் நடந்த இடத்தை காணும்போது இது தெரியவந்தது. சம்பவ இடங்களில் வெட்டி போடப்பட்ட மரங்கள் அனைத்தும் ஏற்கெனவே வனத்துறையினர் பறிமுதல் செய்து சிவப்பு பெயின்ட்டால் அடையாளம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொழிலாளர்கள், போலீஸாரை தாக்க பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தி புதிதாக உள்ளது. இதனை உபயோகப்படுத்தியதற்கான அடையாளம்கூட இல்லை.

கோடாலி மட்டும் விழுந்து கிடக்கிறது. இதில் கோடாலி கொம்பு கூட இல்லை. இவ்வளவு பெரிய என்கவுன்ட்டர் நடந்திருக்கும்போது போலீஸார் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படாதது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்