பசுமை, அதிக பெண் ஊழியர்கள் என 5 அம்சங்களில் தனித்துவமான கொச்சி மெட்ரோ ரயில்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவையை கொச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.5,181 கோடி மதிப்பில், 13 கி.மீ. தூரத்துக்கான இந்த மெட்ரோ ரயில் சேவை நாட்டின் 8-வது மெட்ரோ ரயில் சேவை என்ற பெருமையை பெறுகிறது. எனினும் மற்ற மெட்ரோ ரயில் சேவைகளுக்கு இல்லாத தனித்துவம் கொச்சி மெட்ரோ ரயிலுக்கு இருக்கிறது.

மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்தவுடன், பயணிகளை பரவசப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பாரம்பரிய செண்டா மேளத்தின் இசையொலி, இலவச வை-பை, முதல் கட்ட பணியிலேயே நீண்ட தூரத்துக்கு பாதை அமைக்கப்பட்டது ஆகியவை கொச்சி மெட்ரோ ரயிலுக்கு பெருமை சேர்த்துள்ளது.

குறுகிய காலம்

இதுதவிர வேறு சில சிறப்பு களும் கொச்சி மெட்ரோவுக்கு இருக்கிறது. மும்பை மெட்ரோ ரயிலின் 11 கி.மீ தூர முதல் கட்ட சேவை தொடங்குவதற்கு 75 மாதங்கள் பிடித்தன. சென்னை மெட்ரோ ரயிலின் 4 கி.மீ தூர முதல் கட்ட பணிகள் முடிவதற்கு 72 மாதங்கள் ஆனது. ஜெய்பூரில் 9.02 கி.மீ தூர பணிகளுக்கு 56 மாதங்களும், 8.5 கி.மீ கொண்ட டெல்லி மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயிலின் முதல் கட்ட பணிகளுக்கு 50 மாதங்களும் பிடித்தன. ஆனால் 13 கி.மீ கொண்ட கொச்சி மெட்ரோ ரயிலின் முதல் கட்டப் பணிகள் வெறும் 45 மாதங்களில் முடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் கொச்சி மெட்ரோ ரயில் முன்னுதா ரணமாக இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த மின் தேவையில் கால் பங்கு மின்சாரம் சூரிய சக்தி (சோலார்) மூலம் பெறும் வகையில் 23 நிலையங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் 2.3 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இது தவிர 4 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி மையத்தை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

மெட்ரோ ரயில் ஓடுவதற்காக அமைக்கப்பட்ட 4,000 தூண்களில், ஒவ்வொரு 6-வது தூணிலும் ‘வெர்டிக்கல் கார்டன்’ அமைக்கப் படவுள்ளது. நகரங்களை சுற்றிப் பார்க்க வசதியாக பயணிகளுக்கு ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இலவச சைக்கிள் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு

நாட்டிலேயே அதிக அள விலான மூன்றாம் பாலினத்தவர் களை பணியில் அமர்த்திய முதல் அரசு நிறுவனம் என்ற பெருமையும் கொச்சி மெட்ரோ ரயிலுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் 60 மூன்றாம் பாலினத்தவர்கள் பணி யமர்த்தப்பட்டுள்ளனர். அவர் களில் 23 பேர் இன்று டிக்கெட் வழங்குவது, பராமரிப்பு என பல் வேறு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

கொச்சி மெட்ரோ ரயில் பணி முழுமையாக நிறைவுற்றதும், நாட்டிலேயே அதிக பெண் ஊழியர்களை கொண்ட நிறுவனம் என்ற பெயரையும் தட்டிச் செல்லவுள்ளது. ஏனெனில் 80 சதவீத அளவுக்கு பெண்களே பல்வேறு பணிகளில் இருப்பார்கள்.

படகு போக்குவரத்து

10 தீவுகளில் படகு சேவையை தொடங்கவும் கொச்சி மெட்ரோ தரப்பில் திட்டம் வகுக்கப்பட் டுள்ளது. ‘நீர் வழிப் போக்குவரத்து’ என்ற பெயரில் இத்திட்டத்துக்காக ரூ.819 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி 2018 இறுதியில் இதன் முதல் கட்ட சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயிலில் பயணிக்கும் மோடி

அலுவா முதல் பலரிவட்டம் வரையிலான 13 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பாதையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி அங் குள்ள ஜவஹர்லால் நேரு சர்வ தேச மைதானத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதை யொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. முதல் ரயிலை இயக்கிய பின் பலரிவட்டத்தில் இருந்து பததிபாலம் வரையில் பிரதமர் மோடி ரயிலில் பயணம் செய்ய உள்ளார். பின்னர் அதே ரயிலில் அவர் பலரிவட்டம் வந்தடைகிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, எர்ணாகுளம் எம்.பி. கே.வி.தாமஸ், மெட்ரோ மனிதன் என புகழப்படும் பொறியாளர் ஸ்ரீதரன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்