‘ராசி எண்’ பெயரால் வக்கீல்கள் செய்த குளறுபடி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தள்ளிப் போவதன் பின்னணி

By இரா.வினோத்

கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்தன. நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் திடீரென‌ புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில், பாதுகாப்பு காரணங்களுக் காக சிறப்பு நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துத்கு மாற்ற வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கும் தேதியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரினர். இதையடுத்து நீதிபதி டி'குன்ஹா வழக்கின் தேதியை செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றலாமா? என அவர்களிடம் கேட்டார்.

வாஸ்து மற்றும் ராசி எண்

இந்த தேதியை நீதிபதி டி'குன்ஹா உச்சரித்த மறுகணமே ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் செந்திலும், அசோகனும் மகிழ்ச்சி யில் கைக்குலுக்கிக் கொண்டு 'சரி' என்றார்கள். மற்ற வழக்கறி ஞர்களும் உற்சாகமான முகபாவம் காட்டினார்கள். அதற்குக் காரணம், தீர்ப்பு தேதியான 27 -ன் கூட்டுத்தொகை 9 என்பதுதான். ஜெயலலிதாவுக்கு இது ராசியான எண் என்று வக்கீல்களே முடிவு செய்து, 27-ம் தேதியை ஒப்புக்கொண்டார்கள்.

வழக்கு விஷயத்தில் ஆரம்பம் முதலே கூர்ந்து கவனம் காட்டி வரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, அப்போதே வக்கீல்களிடம் ஓடிப்போய், “அந்த தேதி வேண்டாம். அதில் பல சிக்கல் இருக்கு. மேலும், அம்மாவுக்கு அது ராசியான எண் என்பதும் இல்லை. எனக்குத் தெரிந்து இப்போது 7 தான் அம்மாவுக்கு ராசியான எண். அது மட்டுமில்லாமல், 27-ம் தேதிக்குப் பின் 10 நாட்கள் கர்நாடகத்தில் தசரா திருவிழா பரபரப்பு தொடரும். எல்லாமே அரசு விடுமுறை நாட்கள். எனவே வேறு தேதியை கேளுங்கள்” என்றார். ஆனால் வழக்கறிஞர் அசோகனும், செந்தி லும் அதனை ஏற்க மறுத்து, “பரப்பன அக்ரஹாரா அம்மாவுக்கு ராசியான இடம்” என்றார்கள்.

மேலும், வெளியே வந்து “பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத் தின் வாஸ்து ஜெயலலிதாவுக்கு சாதகமானது. அதில் குற்றவாளி கூண்டு வடக்கு நோக்கி இருக்கும். உள்ளே நுழையும் நீதிமன்ற கதவு மேற்கு நோக்கி இருக்கும். இதுதான் சரியான பொருத்தம். வாஸ்துவும் ராசியான எண்ணும் ஒரே நேரத்தில் அமைந்திருக்கிறது” என்றெல் லாம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள்.

இதைக் குறிப்பிடும் வேறு சில வக்கீல்கள், “ஒருவேளை தசரா விடுமுறைக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ தீர்ப்பு தேதியை கேட்டு வாங்கி இருந்தால் ஜாமீன் கேட்டு வாங்குவதில் இத்தனை சிக்கல் இருந்திருக்காது. அ18 ஆண்டுகளாக வாதாடி தங்கள் வசதிப்படி வாய்தா வாங்கத் தெரிந்த இவர்களுக்கு, கர்நாடக மாநிலத்தின் அடிப்படை நடைமுறைகளைப் பற்றி யோசித்து முடிவெடுக்கத் தெரியவில்லையே” என்றனர்.

வேறு அறைக்கு மாறிய ஜெ.

ஜெயலலிதா இருந்த 23-ம் எண் அறை தனக்கு வசதியாக இல்லை. எனவே, வேறு அறைக்கு மாற்றும்படி அவர் வேண்டுகோள் விடுத்ததால் முதல் தளத்தில் உள்ள புதிய அறைக்கு மாற்றப்பட்டார்.

அந்த அறையில் குளிர்சாதன வசதி இருக்கிறது. இங்கு தங்கியிருக்கும் அவர், ‘ஜெயா டிவி’ உள்ளிட்ட தமிழ் சேனல்களை தொடர்ந்து பார்க்கிறார்.

சசிகலா,இளவரசி ஆகியோருடனும் அவ்வளவாக பேசாமல் இருக்கும் ஜெயலலிதா நாளிதழ்களை அதிக நேரம் படிக்கிறார். அதே போல சிறையில் உள்ள மற்ற கைதிகள் யாரும் தன்னை பார்க்காதவாறு, அறைக்குள்ளே தனியாக இருக்கிறார்.

முந்தைய அறையை விட இது தனக்கு வசதியாக இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்கு எவ்வித சொகுசு வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், அமைதியாக இருக்கும் அவருடைய அணுகுமுறை வியக்க வைக்கிறது என சிறை டிஐஜி ஜெய்சிம்ஹா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

“ஏ-கிளாஸ் அறையில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு எவ்வித வி.ஐ.பி வசதியும் கேட்க‌வில்லை. மற்ற கைதிகளைப் போல அவரும் நடத்தப்படுகிறார். சிறைக்காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கிறார்.ஜெயலலிதா கடுங்காவல் தண்டனை பெற்றவர் இல்லை. எனவே அவருடைய விருப்பப்படி வழக்கமான உடைகளை அணிய அனுமதித்திருக்கிறோம். ஜெயலலிதா ஆரோக்கியமாக இருக்கிறார். தன்னை பார்க்க வரும் யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. தான் முன்னாள் முதல்வர், விஐபி என எந்த வசதியும் கேட்கவில்லை.சிறைக்குள் அவருடைய நடவடிக்கைகள் மிகவும் வியப்பை ஏற்படுத்துகின்றன. குளிர்சாதன வசதி,தொலைபேசி வசதி,டிவி வசதி என அவர் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்