என்எஸ்ஜி உறுப்பினர் விவகாரம் இந்திய வெளியுறவு செயலர் திடீர் சீனா பயணம்

By செய்திப்பிரிவு

என்எஸ்ஜி விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் திடீர் பயணமாக சீனா சென்று திரும்பியுள்ளார்.

அணு மூலப்பொருட்கள் விநியோக (என்எஸ்ஜி) குழுவில் 48 நாடுகள் உள்ளன. இந்த குழுவில் உறுப்பினராக இணைய இந்தியா கடந்த ஆண்டு விண்ணப்பித்தது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

ஆனால் சீனா மட்டும் ஆரம்பம் முதலே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும், அதன்பிறகே இந்தியாவின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டும், என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினரானால் தெற்காசியாவில் அணுஆயுதப் போட்டி உருவாகும் என்று விமர்சன கணைகளை சீனா தொடுத்து வருகிறது.

சீனாவை சமரசம் செய்யும் வகையில் ரஷ்யா மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் திடீர் பயணமாக சீனா சென்று திரும்பியுள்ளார்.

கடந்த 16, 17-ம் தேதி சீன தலைவர் பெய்ஜிங்கில் முகாமிட்டிருந்த அவர் அந்த நாட்டின் தலைவர்களுடன் என்எஸ்ஜி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் உறுதி செய்துள்ளார். அவர் டெல்லியில் கூறியபோது, வெளியுறவுச் செயலர் 16, 17-ம் தேதிகளில் சீனாவில் தங்கியிருந்து அந்த நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் என்று தெரிவித்தார்.

வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் 2009 முதல் 2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீர், அருணாச்சல பிரதேச மக்களுக்கு தனித்தாளில் சீனா விசா வழங்கி வந்ததை ராஜ்ஜியரீதியில் எதிர்கொண்டு அப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

மேலும் அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே விசா மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு இந்தியா, அமெரிக்கா இடையே மீண்டும் சுமுக உறவு ஏற்பட்டது.

இந்தியா, அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக பின்னணியில் முக்கிய பங்காற்றியவர்களில் ஜெய்சங்கரும் ஒருவர்.

சீன அரசியல் நிலவரங்கள் மற்றும் ராஜ்ஜியரீதியிலான அணுகுமுறையில் ஜெய்சங்கர் மிகவும் அனுபவம்வாய்ந்தவர் என்பதால் அவரே நேரடியாக பெய்ஜிங் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். அவரது முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

விளையாட்டு

25 mins ago

கல்வி

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்