பிஹார் சிறுமிகள் பலாத்காரம்; தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை: அடையாளங்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை

By ஐஏஎன்எஸ்

பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் காப்பகம் ஒன்றில் 34 மாற்றுத்திறனாளி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கும் பிஹார் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிகளின் புகைப்படம், பேட்டி உள்ளிட்ட எந்தவிதமான தகவலும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஹார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், சேவாக் சங்கல்ப் இவான் விகாஷ் சமிதி சார்பில் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது முதல் 17வயது வரையிலான சிறுமிகள் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு இரவு உணவில் மயக்க மருந்து கொடுத்து அந்தக் காப்பகம் நடத்துபவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தக் காப்பகம் நடத்துவோரும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் காப்பகத்தில் உள்ள 34 சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர்கள், ஊழியர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கிடையே பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காப்பகத்தில் இருந்த 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இன்று இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் விசாரணைக்கு எடுத்தனர். மாற்றுத்திறனாளி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிஹார் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் சிறுமிகளிடம் எந்தவிதமான பேட்டி வெளியிடுதல், புகைப்படம் பதிவிடுவது, சிறுமிகளின் முகத்தை மறைத்து புகைப்படம் வெளியிடுவது போன்றவற்றை செய்யத் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் உதவியை உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. வழக்கை வரும் 7-ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

விளையாட்டு

46 mins ago

க்ரைம்

50 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்