பத்மாவதி திரைப்படத்துக்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு: கில்ஜி சித்தரிப்பில் தவறு என புகார்

By ஆர்.ஷபிமுன்னா

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி, தயாரித்துள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படத்துக்கு உ.பி. முஸ்லிம்களின் ஒரு பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படத்தில் கில்ஜி வம்சத்து பேரரசர் அலாவுதீன் கில்ஜி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தியோபந்த் மதரஸாவின் மவுலானாக்கள் கூறியுள்ளனர்.

சூபி கவிஞரான மல்லீக் முகம்மது ஜெய்ஸி எழுதிய காவியத்தை மையமாகக் கொண்டு ‘பத்மாவதி’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் தணிக்கை முடிந்து திரைப்படம் இன்னும் வெளிவராத நிலையில் அதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உ.பி.யின் தியோபந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘தாரூல் உலூம்’ மதரஸாவின் முன்னாள் மாணவர்களில் சில மவுலானாக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று தியோபந்தில் செய்தியாளர்களை கூட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ‘தன்ஜீம் உலமா-எ-ஹிந்த்’ எனும் அமைப்பின் தலைவரான மவுலானா நதீம் உல் வாஜீதி கூறும்போது, “கில்ஜி வம்சத்து இரண்டாவது பேரரசனான அலாவுதீன் கில்ஜியை அரக்கத்தனம் கொண்டவராக, ஒழுக்கமற்றவராக படத்தில் காட்டுவதாக அறிகிறோம். ஆனால் அவர் ஒரு பொறுப்பான, இளகிய மனம் படைத்தவர் ஆவார். இதனால் இப்படத்தை முஸ்லிம்களும் எதிர்க்க வேண்டும். பத்மாவதி எனும் ராணி ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. எனவே, இந்த ராணிக்காக சித்தோட்கர் மீது கில்ஜி படையெடுத்தார் என்பதும் வரலாற்றுத் தவறு ஆகும்.

கில்ஜி தனது ஆட்சியை விரிவுபடுத்த தொடுத்த பல போர்களில் சித்தோட்கர் படையெடுப்பும் ஒன்றாகும். உண்மையில் கில்ஜி இந்திய மக்களுக்காக பல வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தினார். எனினும் இவர் ஒரு முஸ்லீம் மன்னராக இருந்தமையால் அவரை களங்கப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை காவியமாக 1540-ல் சூபி கவிஞர் படைப்பதற்கு சுமார் 200 ஆண்டுகள் முன்பாக 1316-ல் கில்ஜி இறந்து விட்டார்” என்று தெரிவித்தார்.

இப்படத்துக்கு, முதலாவதாக ராஜஸ்தானின் ராஜபுதன சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் நாயகியான ராணி பத்மாவதி தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இந்த எதிர்ப்பு, வட மாநிலங்கள் முழுவதிலும் உள்ள அவர்கள் சமூகத்தினர் இடையே பரவியது. இவர்களுடன் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே அப்பிரச்சினை அரசியலாகி ராஜஸ்தான், ம.பி. மற்றும் பிஹார் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. தற்போது, உ.பி. முஸ்லிம்களும் போர்க்கொடி தூக்கியிருப்பதால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்க வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

கல்வி

12 hours ago

மேலும்