பெருநகரப் படுகொலைகள்

By த.முருகவேல்

‘இதை பாருங்கள்' என்று தன் கைபேசியில் இருந்த படத்தை நண்பர் ஒருவர் காட்டினார். அந்தப் படத்தில் ஒரு பூனை சாலையில் அடிப்பட்டு இறந்து கிடந்தது. அடிப்பட்டு இறந்த பூனை சாதாரணப் பூனை அல்ல, காட்டுப் பூனை.

அந்தப் பூனையின் வலதுபுறம் முழுக்க சிதைந்து இருந்தது. அது சாலையை கடக்க முயற்சித்த வேளையில் ஏதோ ஒரு கனரக வாகனம் மோதி தூக்கியெறியப்பட்டிருக்க வேண்டும். “அதை எங்கே பார்த்தீர்கள்?” என்று கேட்டேன். மேடவாக்கம் சாலையில் அதைப் பார்த்ததாக நண்பர் கூறினார். அந்த பூனை நன்மங்கலம் காப்புக்காட்டில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

காட்டுப் பகுதிகளின் ஊடே செல்லும் நெடுஞ்சாலைகளில் இதுபோல உயிரினங்கள் கொல்லப்படுவது சகஜம். புள்ளிமான்கள், குரங்குகள், பாம்புகள் என்று பல வகை உயிரினங்கள், விரைந்து செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், சென்னை மாநகரத்தின் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் இதுபோன்ற காட்டுயிர் பலி இன்றைக்குப் பெருகிவருவது வேதனையும் அதிர்ச்சியும் தருகிறது.

சென்னையின் விரிவும் இயற்கையின் அழிவும்

சென்னை மாநகரம் நாளொரு மேனியாகவும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை வயல், முட்புதர் காடு , ஏரி, குளம், வெள்ள வடிகால் என்று பல தரப்பட்ட இயற்கை நிலப்பரப்புகளாக இருந்த பகுதிகள் இன்று அடுக்குமாடிக் கட்டிடங்களாக, தொழிற்சாலைகளாக உருமாறியுள்ளன. இப்போது வானளாவிய கட்டிடங்களை கொண்டுள்ள பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.), இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு மண் பாதையுடன் இரு புறமும் நீர்நிலைகளைக் கொண்டதாக இருந்தது.

இங்கு உணவு தேடி வரும் நத்தைக்கொத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, உள்ளான்கள், வாத்துகள் என்று பல வகைப் பறவைகளை இங்கு காணமுடியும். கடைசியாக 2005-ல் இந்த சாலையின் ஒரு பகுதியில் இருக்கும் செம்மஞ்சேரி தோப்பில் தென்பட்ட செங்கால் நாரை அதற்குப் பிறகு சென்னையில் தென்படவே இல்லை.

பரந்த புல்வெளியும் நீர்நிலையுமாக இருந்த செம்மஞ்சேரி தோப்பும் இப்பொது அடையாளம் இல்லாமல் மாறிவிட்டது. ஓ.எம்.ஆர். சாலை மட்டும் அல்லாமல், சென்னையை சுற்றியுள்ள பல இடங்களுக்கு நானும் என் நண்பர்களும் இயற்கையை ரசிப்பதற்காகவும் அங்கு வசிக்கும் பறவைகளை, சிற்றுயிர்களைக் காண்பதற்காகவும் அடிக்கடி செல்வது உண்டு. செம்பரம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் நரிகளையும், படப்பை, செம்பாக்கம் பகுதிகளில் காட்டுப்பூனையையும் காணாமல் நாங்கள் வீடு திரும்பியது இல்லை.

ஸ்ரீபெரும்புதூர் - படப்பை சாலையில் இருக்கும் பல நீர்நிலைகளில், பல வகை நீர்பறவைகள் இருக்கும். ஓர் அல்லிக்குளத்தில் எப்போதுமே குறைந்தபட்சம் பத்துக்கு மேற்பட்ட நீளவால் இலைக்கோழிகள் (Jacana) இருக்கும். இதன் காரணமாகவே அந்த அல்லி குளத்தை 'Jacana pond' என்போம். இன்று அந்த குளம் இருந்ததற்கான அடையாளமின்றிப் போய்விட்டது. முக்குளிப்பான்களும் நீர்க்கோழிகளும், இணைகளோடும் குஞ்சுகளோடும் நீந்தி வாழ்ந்து வந்த இடத்தில், இன்று ஓர் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகள் எல்லாவற்றின் நிலைமையும் இதுதான்.

மக்களும், “எங்க ஏரியா இப்போ நல்லா டெவெலப் ஆகிடுச்சு... “ என்று மகிழ்ச்சி அடைகின்றனர். அதே மக்கள் சிறு மழை பெய்தாலும் புறநகர்ப் பகுதிகள் எல்லாம் வெள்ளம் சூழும்போது குறைகூறாமல் இருப்பதில்லை. வீட்டுக்குள் பாம்புகள், பூச்சிகள் வந்துவிட்டதாகவும் அலறுகின்றனர் . இதுதான் சென்னை புறநகர்ப் பகுதியில் வாழும் மக்களின் இன்றைய நிலை.

காட்டுயிர் பலிபீடங்கள்

புறநகர்ப் பகுதிகளில் மக்கள்தொகை அதிகரிக்கும்போது நகரின் மற்ற பகுதிகளுடன் அப்பகுதியினரை இணைப்பதற்காக சாலைகள் உருவாக்கப்படுகின்றன. சாலைகள் மனிதர்களுக்கு அவசியம்தான். ஆனால் அந்தச் சாலைகள் மற்ற உயிரினங்களை எப்படி பாதிக்கின்றன என்பதை பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. மண் சாலைகளாக இருந்த இந்தப் பாதைகள் இன்றைக்கு தார்ச்சாலைகளாக மாறியுள்ளன. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் அவற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

இப்பகுதிகளில் நீர்நிலைகள், வேளாண் நிலங்கள் இன்னும் எஞ்சி இருப்பதாலும், குடியிருப்புகளை அடைவதற்கு செல்லும் பாதைகளும் இதுபோன்ற பகுதிகளின் ஊடே செல்வதாலும் இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவை சாலைகளைக் கடக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு இறப்பது வாடிக்கையாகிவிட்டது . இந்நிகழ்வுகள் அதிக அளவில் நிகழ்ந்தாலும் யாரும் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.

ஏன் ? எப்படி?

நமது நாட்டில் காடுகளுக்கு ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளாகி இறக்கும் காட்டுயிர்களின் கணக்கெடுப்பு தனியார், அரசு நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புறநகர், கிராமச் சாலைகளில் ஏற்படும் காட்டுயிர் உயிரிழப்புகள் பற்றிய ஆய்வோ கணக்கெடுப்போ பெரிதாக நடந்ததாகத் தெரியவில்லை.

இருள் சூழும் நேரத்தில்தான் காட்டுயிர்களின் நடமாட்டம் ஆரம்பிக்கும். அதனாலேயே இந்த வேளைகளில் அவற்றின் மீது வாகனங்கள் மோதி, அவை இறக்கின்றன. இப்படிச் சாலைகளில் அடிபட்டு பலியாவது, பெரும்பாலும் மெதுவாகச் செல்லக்கூடிய உயிரினங்களே. ஊர்வன வகையைச் சேர்ந்த ஆமைகள், பாம்புகள் குளிர்ரத்தம் கொண்டவையாக இருப்பதால் சூரியஒளி, தார்ச்சாலையின் வெப்பத்துக்காக சாலைகளுக்கு வரும் இயல்பைக் கொண்டவை. இதனாலேயே வாகனங்களால் இவை கொல்லப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

தவளை, தேரை போன்றவை சாலையின் விளக்கொளி, விளக்குக் கம்பங்களின் கீழிருக்கும் பூச்சிகளை உண்பதற்காக வரும்போது விபத்தை எதிர்கொள்கின்றன. சில நேரம் கீரி, நரி, காட்டுப்பூனை போன்றவை இனச்சேர்க்கைக்காகவோ இரையையோ துரத்தி செல்லும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. சில நேரம் ஏற்கெனவே அடிபட்டு இறந்து கிடக்கும் ஓர் உயிரினத்தை உண்பதற்காக வரும் நரி போன்ற சிற்றுயிர்களும் பலியாகின்றன.

சில தீர்வுகள்

மேலை நாடுகளில் சாலை விபத்துகளில் இருந்து உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காக பல வகைகளிலும் உள்கட்டமைப்பு மாற்றங்கள், சாலைகள் அமைக்கப்படும் இடங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தியும், சாலைகளில் காட்டுயிர்கள் இறப்பதைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போதைய சூழலில் நகர விரிவாக்கம் திட்டமிடப்படாத பின்னணியில்தான் நடைபெறுகிறது. அதனால், சாலைகளின் அருகிலுள்ள பகுதிகள் எம்மாதிரியானவை என்பதை கருத்தில் கொண்டு சாலைகள் உருவாக்கப்படவேண்டும். ஆய்வுகளின்படி சாலைகளின் இருபுறமுமோ அருகிலோ, புதர்களோ செடிகொடிகளோ இருந்தால் பறவைகளும் மற்ற உயினங்களும் அதிகம் விபத்துக்கு உள்ளாகின்றன.

அதனால் சாலைகளை ஒட்டிய பகுதிகளில் தாவரங்கள் அதிகம் இருந்தால், அப்பகுதிகளில் சாலை அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. அல்லது தாவரங்களை விட்டுத் தள்ளி இச்சாலைகள் அமைய வேண்டும்.

19CHVAN_panagkaadai.jpg பலியான பனங்காடை right

அயல்நாடுகளில் இருப்பதைப் போல் சாலைகளின் மேல் அகன்ற பாலம் போன்ற ஒரு கட்டமைப்பையும், அதன் மீது இப்பகுதி வாழ் தாவரங்களையும் வளரவிட்டால் உயிரினங்கள் அதைப் பயன்படுத்தி சாலையின் மறுபகுதிக்கு சென்றுவிடும். அதேபோல், சாலைகளுக்கு கீழ் சுரங்கப்பாதை, குழாய் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, உயிரினங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தலாம். கீரி போன்ற உயிரினங்கள் இவற்றை எளிதில் பயன்படுத்தினாலும், மான் போன்று திறந்தவெளிகளை விரும்பும் உயிரினங்கள் இவற்றை பயன்படுத்தாது.

பொதுவாக இதுபோன்ற சாலைகளின் இருபுறமும் ரம்மியமான இயற்கைக் காட்சிகளைக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் அவற்றை ரசித்தவாறு வேகமாக ஓட்டுவார்கள். அதற்கு பதிலாக வாகன ஓட்டிகள் வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது அவசியம்.

இயற்கையான நீர் வழித்தடங்களை மாற்றுவதோ அடைப்பதோ கூடாது.

சாலைகள் நல்ல உயரத்துடன் இருந்தால் உயிரினங்கள் எளிதில் கடக்க இயலாது.

புறநகர் பகுதிகள் பல வகையிலும் உள்நாட்டு தாவரங்கள், காட்டுயிர்களின் புகலிடமாக உள்ளன. வளர்ச்சி என்ற பெயரால் இவற்றை அழிக்கவேண்டுமா என்ற கேள்விக்கு, நகர்ப்புற வாசிகளும் ஆட்சியாளர்களும் பதில் கூற வேண்டும்.

கட்டுரையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

7 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்