இந்தியப் பல்கலைக்கழகங்களின் நிலை: சர்வதேசத் தரத்தில் தொடரும் சறுக்கல்!

By எஸ்.எஸ்.லெனின்

 

லகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாறுவதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறது இந்தியா. இதற்காக, பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், ராணுவத் தளவாடப் பெருக்கம் என வல்லரசுக் கனவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், தேசத்தின் அடித்தளமான உயர்கல்வித் துறை அதன் சர்வதேச அடையாளத்தில் பெருமை இழந்து நிற்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா சறுக்கி வருகிறது.

அண்மையில் வெளியான ‘டாப் 200’ பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவுக்கு இடமில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை. நாளந்தா காலம்தொட்டு உலகுக்கே கல்விக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த மண்ணில், உயர்கல்வித் துறை பின்னடைந்த அவலம் கல்வியாளர்களையும் பெற்றோர்களையும் கவலையடையச் செய்திருக்கிறது.

இந்தியா போன்ற பரந்த தேசத்தில் பெருமளவிலான மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தருவதுதான் பிரதான நோக்கமே தவிர, சர்வதேச அளவுகோல்கள் தற்போதைக்குப் பிரதானமல்ல என்று பலர் யோசிக்கக்கூடும். ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியாகிவரும் இந்தப் பட்டியல்களை உற்று நோக்கினால் இந்தியப் பல்கலைக்கழகங்களின் பரிதாப நிலையைப் புரிந்துகொள்ளலாம்.

தொடரும் சறுக்கல்

நடப்பாண்டின் மத்தியில் ‘குவகரேலி சைமண்ட்ஸ்’ (Quacquarelli Symonds) என்ற சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைக்குட்படுத்தும் அமைப்பு வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவின் 3 உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றன. உலக அளவில் முன்னணியில் இருக்கும் 959 பல்கலைக்கழகங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்தியாவின் ஐ.ஐ.டி. டெல்லி (172), ஐ.ஐ.டி. மும்பை (179), இந்திய அறிவியல் நிறுவனம்-பெங்களூரு (190) ஆகியவை மட்டுமே ‘டாப் 200’-ல் இடம்பிடித்தன.

இந்தப் பட்டியலில் ஐ.ஐ.டி. சென்னைக்கு 264-வது இடம். இதேபோல செப்டம்பரில் டைம்ஸ் நிறுவனத்தின் 2018-ம் ஆண்டு உயர்கல்விக்கான ‘டாப் 200’ தரவரிசைப் பட்டியல் வெளியானது. 77 நாடுகளின் 1,000 பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இப்பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடமில்லை. சிறிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்றவை டாப் 200-ல் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றன.

சுயபரிசோதனைக்கான தருணம்

பல்கலைக்கழகங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மாணவர் தேர்ச்சி, தேர்ச்சிக்குப் பிந்தைய அவர்களின் பணிவாய்ப்பு, ஆசிரியர் –மாணவர் விகிதம் ஆகியவற்றுடன் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை, சர்வதேசப் பேராசிரியர்களின் பங்களிப்பு போன்றவற்றையும் பரிசீலித்து இந்தப் பட்டியல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பிந்தைய பரிசீலனைக் கூறுகளான சர்வதேச மாணவர் பேராசிரியர் வருகைக்கு இந்திய அரசு கடும் நிர்ப்பந்தங்களை விதித்ததே தரவரிசைப் பட்டியலில் நமது பல்கலைக்கழகங்களின் பின்னடைவுக்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், உயர்கல்விக்கான ஜி.டி.பி. ஒதுக்கீடு, ஆராய்ச்சித் துறையில் முன்னெடுப்பு, ஆசிரியர்- மாணவர் விகிதங்கள், அனைவருக்குமான உயர்கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது இந்தப் பின்னடைவைத் தெளிவாக உணரலாம். இந்த உறுத்தல்களை உணர்ந்தது போலவே, சுய ஆய்வுக்கான தருணமாகக் கருதி மத்திய அரசும் முன்னகரத் தொடங்கியுள்ளது.

புதிய முன்னெடுப்புகள்

ஐ.ஐ.டி. நிறுவனங்களைச் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு ரூ. 8,700 கோடி மதிப்பிலான ‘விஸ்வஜீத் திட்ட’த்தை அறிவித்தது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பெருக்கம், சர்வதேச உதவிகள் ஆகியவற்றுக்கு டெல்லி, மும்பை, சென்னை, காரக்பூர், கான்பூர், ரூர்கி, குவாகாத்தி ஆகிய ஐ.ஐ.டி.க்கள் இதனால் உதவி பெற இருந்தன. ஆனால், கடந்த ஓராண்டாக நிதி அமைச்சகம் இதை நடைமுறைப்படுத்தவே இல்லை.

இதேபோல, ‘மாண்புமிக்க உயர்கல்வி நிறுவனங்கள்’ (Institutes of Eminence) என்ற பெயரில் நாட்டின் தலைசிறந்த 10 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சர்வதேசத் தரத்திலான ஆய்வகங்கள் அங்கு மேம்படுத்தப்பட உள்ளன. இவை தவிர தலைசிறந்த கல்வியாளர்கள் குழுவின் உதவியுடன் நாட்டின் 20 கல்வி நிறுவனங்களைச் சர்வதேச டாப்-20 பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளும் தனியாகத் தொடங்கப்பட்டுள்ளன.

முக்கியமாகச் சர்வதேச மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான கதவுகளை மத்திய அரசு அகலத் திறக்க முடிவுசெய்துள்ளது. வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் அதிக அளவில் சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களை நமது மாணவர்களுக்கு உதவச் செய்வதும் இவற்றில் அடங்கும்.

புதிதாக 20 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. நாட்டின் தலைசிறந்த 20 பல்கலைக்கழகங்களைச் சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தும் நோக்கில் தலா ரூ.500 கோடி என ரூ.10 ஆயிரம் கோடி ஆகஸ்ட் மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.க்கு அப்பால்

அனைவருக்கும் தரமான அடிப்படைக் கல்வி, அர்த்தமுடைய பொதுத் தேர்வு, பள்ளிக் கல்வி முடிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு என நமது நாட்டுக் கல்வித் துறையின் நடைமுறை சவால்களில் பல்கலைக்கழகங்களின் சர்வதேசத் தரமும் தற்போது சேர்ந்திருக்கிறது. சர்வதேசத் தரத்துக்கான முன்னெடுப்பின் ஊடே ஐ.ஐ.டி.-களுக்கு அப்பால் பரந்திருக்கும் நாட்டின் 789 பல்கலைக்கழகங்களும் மேம்படும் வகையில் புதிய திட்டங்கள், மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சகல மாணவர்களின் உயர்கல்விக் கனவும் சாத்தியமாகும். அப்போதுதான் இந்தியா உலக அளவில் சக்திவாய்ந்த நாடாகும் நமது இலக்கும் முழுமையான அர்த்தம் பெறும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

விளையாட்டு

36 mins ago

இந்தியா

40 mins ago

உலகம்

47 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்