கலர் ஆஃப் பாரடைஸ்: நிறைவுறாத பால்யத்தின் எழிலோவியம்

By பால்நிலவன்

உலகில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றுள் மனித சிந்தனையை மேம்படுத்தும் மகத்தான படைப்புகள் மிகச் சிலவே. அவ்வரிசையில் என்றென்றும் முக்கிய இடத்தில் உள்ளது 'கலர் ஆஃப் பாரடைஸ்' (Color of Paradise) எனும் ஈரானிய படம்.

கண்பார்வையற்ற இளம்சிறுவன் மொஹமத். அவனை மனப் பிறழ்வுகளுக்குள் தத்தளிக்க வைத்துவிடாமல் அவனது அழகான மன உலகத்தை மெல்ல மெல்ல விரிவடையச் செய்கிறார் இயக்குநர் மஜீத் மீஜிதி.

மொஹமத் எனும் சிறுவன் டெஹ்ரானில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பவன். தாயை இழந்த அவனுக்கு தந்தைதான் எல்லாம். ஆனால் தந்தையான ஹாஷெமுக்கு தன் மகன் பார்வையற்றவனாக இருப்பதில் சங்கடமும் அவமானமும் உண்டு. தனக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்பும் நேரத்தில் மொஹமது தன் வீட்டிலிருக்க வேண்டாம் என நினைக்கிறார்.

அதனால் இவனை ஏதாவது செய்யவேண்டுமெ என பலவாறு முயற்சிக்கிறார். பள்ளி முடிந்ததும் விடுமுறைக்குப் பிறகு அவனை பள்ளியின் தங்கும்விடுதியில் வைத்துக்கொள்ளமுடியுமா எனக் கேட்கிறார். பள்ளியின் தலைமைஆசிரியர் முடியாது எனக் கூறிவிடுகிறார்.

வேறுவழியின்றி அவனை ஊருக்கு அழைத்து வருகிறார். கிராமத்துக்கு வரும் மொஹமத் இயற்கையெழிலின் சுகந்தத்தை. தென்றலை, குளிர்ச்சியை அனுபவிக்கிறான். அவனது சகோதரிகள் அவனை அன்போடு, பாசத்தோடு வைத்துக்கொள்கிறார்கள்.

அவனது சகோதரிகள் படிக்கும் பள்ளிக்கு மொஹமத் அழைத்துச் செல்லப்படுகிறான். அங்குள்ள ஆசிரியர், மாணவர்கள் இவனது அறிவுக்கூர்மையைக் கண்டு வியக்கிறார்கள்.வீடு திரும்பும்போது பாட்டி நான் 20 மார்க் வாங்கிட்டேன் என்று அவன் கூவிக்கொண்டே வருவதை அப்போதுதான் அங்குவந்த அவனது தந்தை ஹாஷெம் அதைக் கேட்டு வெறுக்கிறார்.

அவன் இங்கிருந்தால் திரும்பவும் படிப்பு அது இது என்று தொடர்ந்து இங்கேயே தங்கிவிடுவான், அது புதிய உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது மிகவும் அவமானகரமாகிவிடும். அவனை கைத்தொழில் ஒன்றைப் பழகச் சொல்லிவிட்டால் மொஹமதுவின் வாழ்க்கையே திசைமாறிவிடும் என நினைக்கிறார்.

இதனால் அடுத்தநாளே அவனை வலுக்கட்டாயமாக வேறொரு மலைக் கிராமத்தில் உள்ள ஒரு மரத் தச்சரிடம் கொண்டுபோய் விடுகிறார். தச்சரும் பார்வையற்றவரே.

மொஹமதின் தந்தையான ஹாஷெம் நிறைய பணத்தோடு பெண்வீட்டாரிடம் செல்ல, மணப்பெண் அவரை அன்பொழுக எதிர்கொள்கிறாள். அங்கு அவர்களின் சம்பிரதாயப்படி பேசி பணத்தைக்கொடுத்து பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நாளையும் குறித்துவிட்டு வருகிறார்.

சிறுவனை அவனது அன்பான சகோதரிகளிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றதை பாட்டி கடுமையாக எதிர்க்கிறார். அதுமட்டுமன்றி ஹாஷெமின் நடவடிக்கைகளை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார். கடும் மழையில் எங்கெங்கும் சேறும் சகதியுமான பாதையில் நடந்து செல்கிறார்.

இந்நிலையில் ஹாஷெம் தன் தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டைவிட்டுச் செல்வதை நினைத்து சற்றே வருந்துகிறார். தனது மூட்டை முடிச்சோடு அம்மா செல்லும்போது வேகமாக பின்தொடர்ந்து வருகிறார் ஹாஷெம். அவரது தாய் ஒரு சேற்றுக்குட்டையில் இறங்கி நீர்நிலையைக் கடக்க இருந்தவரை ஓடிவந்து பிடித்துவிடுகிறார்.

பையனை மீண்டும் அழைத்துவந்துவிடுவதாக வாக்குறுதி அளிக்கிறார். இதைக் கூறிய பிறகே சமாதானம் அடைகிறார் அவரது அம்மா. அப்போது பேரன் கொடுத்த ஹேர்பின் நீரில் விழுந்துவிட அதை எடுக்க முயன்று அது நழுவியும் போய்விடுகிறது. பாட்டிக்கு இதனால் பெரும் வருத்தம் மேலிடுகிறது. தனது அம்மாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுகிறார் ஹாஷெம்.

ஹாஷெம் தனது புதிய மனைவி வரப்போகும் வீட்டுக்கு சிற்சில மராமத்து வேலைகளை உற்சாகமாகச் செய்கிறார். வீட்டுக்கு வண்ணங்களைத் தீட்டி புதுப்பொலிவு பெறச் செய்கிறார். ஹாஷெமின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் முகமாக பாட்டி தன் புதிய மருமகளுக்குத் திருமணப் பரிசாக தனது விலையுயர்ந்த மணிமாலையைத் தருகிறார்.

உண்மையில் இதன்பொருட்டே அம்மாவை சமாதானப்படுத்திய ஹாஷெம், நகை கைக்கு வந்ததும் பூரிப்படைகிறார். ஹாஷெம் குணம் பாட்டிக்குத் தெரியும். பேரனை அழைத்துவருவது உறுதியானதல்ல என்பதை உணர்கிறார். பிரிந்துசென்ற தனது பேரன் மொஹமதை நினைத்து ஒரு கணம் ஏங்குகிறார். அன்று இரவே பாட்டியின் உயிர் பிரிந்துவிடுகிறது.

மறுநாள் காலை தனது தாயை அடக்கம் செய்துவிட்டு ஹாஷெம் வேலைக்குப் புறப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே மணமகனின் தாய் இறந்தது சகுனம் சரியில்லை என்று சொல்லிவிடுகிறார்கள் பெண்வீட்டார். இதனால் இத்திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்ததோடு அவர் கொடுத்த சீதனத்தை (பணமூட்டை)யும் ஹாஷெவிடம் கொடுத்துவிடுகிறார்கள்.

தன் தாய் இறந்ததற்குக் கூட அரற்றாத ஹாஷெம் பெண் வீட்டாரின் இந்த முடிவால் இடிந்துபோகிறார். கத்தி அரற்றுகிறார். பணமூட்டையை அப்படியே போட்டுவிட்டு இனி தனது ஒரே வாழ்வாதாரமான தன் மகனை கண்டுஅழைத்து வரச்செலகிறார் தந்தை ஹாஷெம். குதிரையில் புறப்படும்போதே மேகமூட்டமும் இடியுமாக ஒரு மாதிரியான தீய அறிகுறியை இயக்குநர் காட்டிவிடுகிறார். வழியெங்கும் மழைபெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அவர் தனது மகன் வேலை கற்றுக்கொள்ளும் பார்வையற்ற தச்சரின் தச்சுப்பட்டறைக்குச் சென்றாரா? மகனை அழைத்துவந்தாரா? அப்படி அழைத்து வரும்போது பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தை மரப்பாலத்தில் கடந்துவரும்போது என்ன ஆனது என்பதையெல்லாம் மீதிபடம் கடும்வலியோடு சித்தரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் மொஹமத் எனும் சிறுவன் பாத்திரம் காட்சிரீதியாக நிறுத்தியிருந்த விதம் மிகமிக கவித்துவமானது. பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து தன் தந்தை வருகைக்காக ஒரு தோட்டத்தில் அவன் காத்திருப்பான். அப்போது பறவைகளின் கூவல்கள் யாவும் அவன் முகத்தை மலர்ச்சியடைய செய்யும். அப்போது ஒரு சிட்டுக்குருவியின் குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. இதை நுட்பமான ஓசையுணர்வில் அறிந்து மெல்ல மெல்ல தட்டுத்தடுமாறி செல்வான்.

அப்போது ஒரு பூனை கத்தியபடியே ஓடிவரும். கீழே விழுந்திருக்கும் குருவிக்குஞ்சை பூனை நெருங்குவதற்குள் இவன் நெருங்கி அதை விரட்டிவிட்டு குருவிக்குஞ்சை தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு மரத்தில் ஏறுவான். மரக்கணுக்களில் கால்வைத்து பின்னர் கிளைகளில் கால்வைத்து கைகளால் தடவிப் பார்த்து சிட்டுக்குருவியின் கூடு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பான். தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து குருவிக்குஞ்சை எடுத்து குருவிக்கூட்டில் எடுத்து வைக்கும்போது அவனது விரல்களை குருவி கவ்வுவதும் ரசித்து மகிழக்கூடியக் காட்சி....

பாட்டியையையும் தனது சகோதரிகளையும் சந்திக்கச் செல்லும்போது அவர்களுக்குப் பிடித்த ஹேர் பின், சோடா பாட்டில் மூடிகளைக்கொண்ட மாலை, ஓர் இயற்கை ஓவியம் என அன்பொழுகக் கொடுக்கும் மொஹமத் பாத்திரமேற்ற மோஹ்சன் ராமிசேனியின் தனது நடிப்பால் நமது இதயத்திலும் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகிறான.

பள்ளியைவிட்டுப் பிரியும் போதும் சகோதரிகளை, பாட்டியைவிட்டுப் பிரியும்போதும், தன் மனக்கிளை முறிந்த சோகத்தை வெளிப்படுத்தும்போதும், இயற்கையின் உலகத்தில் திளைக்கும் உற்சாகத்தை வெளிப்படுத்தும்போதும் ராமிசேனியின் பால்யமுகம் நம்இதயத்தை கரைத்துப்போடுகிறது. பறவைகளின் கெச்சட்டத்தையும் மலைச்சாரல் மற்றும் வயல்வெளிகளின் காற்றோசையையும் அழகான பின்னணியிசையில் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் அலிரேசா கொஹாண்டேரி.

தாவூதியின் ஒளிப்பதிவு பாத்திரங்களின் மனசுக்கு நெருக்கமானது. அவர்களது வாழ்க்கைப் பாதையில் நம்மை அழைத்துச்செல்கிறது. பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தின் பல்வேறு திருப்பங்களிலும் மொஹமத் அடித்துச் செல்லப்படுவதும் தந்தை மகனை வெள்ளத்தில் காணாமல் அதில் விழுந்து அங்குமிக்கும் அலையும்போதும் நம்மையே தத்தளிக்க வைக்கிறது ஒளிப்பதிவு.

கடைசியில் கரை ஒதுங்கியுள்ள இறந்த மகனின் உடலை மடியில் போட்டு தந்தை கதறுகிற காட்சி மிக முக்கியமானது. இதில் தந்தையின் முதுகுப்புறம் நீட்டியுள்ள மகனின் கைவிரல்கள் மெல்ல அசைகிறது. இறந்த பிறகு காட்டும் இந்தப் பாசத்தால் எந்தப் பயனுமில்லை என்பதாக மூடியிருந்த அந்த விரல்கள் விரிகின்றன. பொன்னிற ஒளிஅதிர்வில் அந்த விரல்களின் அசைவதன்வாயிலாக எந்தப் பயனுமில்லை எனக் காட்டும் இயக்குநர் மஜீத் மஜிதி இங்கு பார்வையாளரின் மனதோடு பேசுகிறார்.

உள்ளார்ந்த உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த இப்படம் 1999ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதுபெற்றது. சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் இப்படம் பரிந்துரைசெய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

49 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்