கனெக்ட் Review: திகிலான திரையரங்க அனுபவம்தான்... இது மட்டும் போதுமா?

By கலிலுல்லா

சூசன் (நயன்தாரா) தனது மகள் அன்னா(ஹனியா நஃபீசா) கணவர் ஜோசப் (வினய்), அப்பா ஆர்தர் (சத்யராஜ்) ஆகியோருடன் அழகான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர்களின் சந்தோஷத்தை கரோனா புகுந்து சீர்குலைக்க, எதிர்பாராத இழப்பு ஒன்றும் நேர்கிறது. சூசனும் அவரது மகள் அன்னாவும் கரோனா பாசிட்டிவாகி தனித்தனி அறையிலிருக்கும்போது அன்னாவின் வித்தியாசமான அச்சுறுத்தும் நடவடிக்கைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட, இதற்கான காரணம் புரியாமல் தவிக்கும் சூசன் இறுதியில் அந்தக் காரணத்தை கண்டறிந்து தனது மகளை மீட்டாரா? இல்லையா? - இதை திகில் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ‘கனெக்ட்’.

10 ரூபாய் தாளின் வெள்ளைப்பகுதியில் எழுதிவிடும் அளவிற்குத்தான் கதை என்றாலும், அதனை தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மேக்கிங்கில் மெருகேற்றி மிரட்டியிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். பெரும்பாலும் கைகளாலேயே ஹெண்டில் செய்யப்பட்டிருக்கும் கேமரா திரைக்கும் பார்வையாளர்களுக்குமான இடைவெளியை குறைத்து நெருக்கத்தை கூட்டி அச்சுறுத்துகிறது.

அடர் இருட்டில் மெழுகுவர்த்தி, டார்ச் ஒளியில் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் பாயின்ட் ஆஃப் வியூவிலேயே கேமராவை நகர்த்தி சிறந்த காட்சி அனுபவத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி. போதாக்குறைக்கு அமைதியாக நகரும் கேமராவுடன், பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசையும், ஒலிக்கலவையும் இணைய, ஹாரருக்கான உணர்வுகள் சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சிகளில் பின்னணியில் இடியின் சப்தத்தை எழுப்பி அட்ரீனலின் வேகத்தை கூட்டுவது என ஹாரருக்கான அம்சங்கள் அதிகமாகவே உள்ளன.

அம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா. மிகையில்லாத நடிப்பில், பயம், பதற்றத்தை உடல்மொழியில் உணர்ச்சிகளாக கடத்தும் விதத்தில் ஈர்க்கிறார். கட் இல்லாமல் நீளும் சில க்ளோசப் ஷாட்ஸ்களில் அவரின் அழுகை உலுக்கவும் செய்கிறது. சத்யராஜ் வழக்கமான நடிப்புடன் கவனம் பெறுகிறார். நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் ஹனியா நஃபீசாவின் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பெரும் பலம். அனுபம் கேர் சொற்பக் காட்சிகளில் கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துவிட்டுச் செல்கிறார். வினய் சில காட்சிகள் வந்தாலும் கதாபாத்திரத்தன்மைக்கு நியாயம் சேர்க்கிறார்.

பிரதான கதைக்களமாக ஒரு வீடு, ஐந்து, ஆறு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின். அதற்கு கரோனா சூழலை பயன்படுத்தி தர்க்கப் பிழைகளுக்கான கேள்விகளுக்கு வேலியிடுகிறார். தொடக்கத்தில் விறுவிறுப்புடன் நகரும் படம், ஒரு கட்டத்திற்குப்பிறகு கதைக்கான தேவையை எழுப்புகிறது. ஆனால், அந்த தேவைக்கான தீனி திரைக்கதையில் இல்லாமல் வெறுமனே ஹாரராக மட்டுமே காட்சிகள் நகர்ந்துகொண்டிருப்பது ஒரு இடத்திற்கு பிறகு திகட்டிவிடுகிறது.

காட்சிகளுக்கு காட்சி பார்வையாளர்களை அச்சுறுத்தும் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம் புரிகிறது. இருப்பினும் மொத்தப் படமுமே வெறும் ‘திகில்’ அனுபவத்துடன் சுருங்கி நிற்பது பெரும் ஏமாற்றம். அதிலும் குறிப்பாக படம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும்போது, அடுத்தடுத்த காட்சிகளையும், படத்தின் முடிவையும் நம்மால் எளிதாக யூகிக்க முடிவதால் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் தணிந்துவிடுகிறது. திகில் உணர்வைத்தாண்டி மற்ற எந்த உணர்ச்சிகளுக்கும் வேலைகொடுக்காத திரைக்கதையில் சில இடங்களில் வரும் சென்டிமென்ட் ‘கனெக்ட்’ ஆகவில்லை. இறுதிக்காட்சிகளில் ‘எப்புட்றா?’ தருணங்களும் லாஜிக் கேள்வியை எழுப்பாமலில்லை.

பேய் படங்களில் வான்டாக வண்டியில் ஏற்றப்படும் கிறிஸ்துவர்கள், தேவாலயம், ஃபாதர் என்ற டெம்ப்ளேட் இந்தப் படத்தில் மிஸ்ஸாகாமல் இடம்பெற்றிருப்பதுடன், இறுதியில் மரம் வளர்ப்போம் என்ற மெசேஜ் காரணமில்லாமல் சொல்லப்படுவதுடன் நயன்தாராவின் முந்தைய படமான ‘ஓ2’-வை நினைவுப்படுத்தி பிரசாரத்தை முன்னிருத்துகிறது.

மொத்தத்தில் திகிலான திரையனுபவத்தை கொடுக்கும் ‘கனெக்ட்’ படத்தில் ஹாரரைத் தாண்டி எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு ‘404’ நாட் ஃபவுண்ட் தான். (குறிப்பாக அதீத அச்சுறுத்தும் காட்சிகள் இதயம் பலவீனமாவனவர்களை பாதிக்கலாம்). இப்படம் வரும் வியாழக்கிழமை திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்