நாமெல்லாம் தலைகுனிய வேண்டும்: இயக்குநர் சசிகுமார் பேச்சு

By செய்திப்பிரிவு

நாமெல்லாம் தலைகுனிய வேண்டும் என்று 'நாடோடிகள் 2' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சசிகுமார் பேசினார்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாடோடிகள் 2'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. சரியான வெளியீட்டுத் தேதிக்காக மட்டுமே படக்குழு காத்திருந்தது.

தற்போது அக்டோபர் மாதம் இந்தப் படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து 'நாடோடிகள் 2' படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் நடிகர் சசிகுமார் பேசியதாவது:

"சமுத்திரக்கனி படம் என்றாலே உடனே நடித்துவிடுவேன். அவர் படத்தில் மட்டும் கஷ்டப்படுறதே தெரியாது. அந்த அளவுக்குச் சிரித்துக் கொண்டே வேலை வாங்கிவிடுவார். படமாகப் பார்க்கும் போது தான் எவ்வளவு வேலை வாங்கியிருக்கார் என்று தெரியும். படப்பிடிப்பு தளத்தில் அவர் அளிக்கும் ஊக்கம், நம்மை அந்த அளவுக்கு ஓட வைக்கும்.

ஒரு நடிகரின் ப்ளஸ், மைனஸ் இயக்குநருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி என்னுடைய ப்ளஸ், மைனஸ் தெரிந்தவர் சமுத்திரக்கனி. நான் எந்த வசனம், எங்கு நின்று பேசினால் நன்றாக இருக்கும் என்பதுவரை தெரிந்து வைத்திருப்பார். அவர் எழுதியிருக்கும் வசனங்களை இந்தப் படத்தில் என் உடலும், ஆன்மாவும் பேசியிருக்கிறது.

நானும் இவரும் 3 படங்கள் பண்ணிட்டோம். மலையாளத்தில் மோகன்லால் சாரும் - ப்ரியன் சாரும் 42 படங்கள் சேர்ந்து பண்ணியிருக்காங்க. நாங்கள் அந்த அளவுக்குப் போக முடியாவிட்டாலும், 15 படங்களாவது பண்ணனும் என்ற ஆசையிருக்கிறது. 'நாடோடிகள்' முதல் பாகத்தில் 'சம்போ சிவ சம்போ' பாடல் பெரிய ஹிட். அதை விட இதில் சிறப்பாகப் பண்ண வேண்டும் என்ற சவால் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு இருந்தது. அதையும் ரொம்பவே சிறப்பா பண்ணியிருக்கார்.

இப்போதுள்ள காலகட்டத்தில் படம் பண்ணுவது எளிது. வெயில், மழை பார்க்காமல் நடித்து முடித்துவிடுவோம். அதை வெளியிடுவது தான் கஷ்டமாக இருக்கிறது. முன்பு சின்ன படங்கள் தான் கஷ்டமாக இருந்தது, இப்போது பெரிய படங்களும் கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படத்துக்குள் பரணி வந்தவுடன் தான் 'நாடோடிகள் 2' ஆக மாறியது. அவருக்கு முதல் பாகத்தில் எப்படி பெயர் கிடைத்ததோ, அதே போல் 2-ம் பாகத்திலும் கிடைக்கும். இந்தப் படத்தில் நமீதா என்ற திருநங்கை ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அவர் மூலமாக அந்தச் சமூகம் படும் வேதனையைப் பதிவு செய்துள்ளார். நன்றாக நடனமாடக் கூடியவர்,

என்ன பண்ணியிருக்கோம் என்பதை சமுத்திரக்கனி அனைவரிடமும் காட்டுவார். சில காட்சிகளை நமீதா பார்த்துவிட்டு அழுது கொண்டிருந்தார். அப்போது தான் அவர்களை நாம் எவ்வளவு ஒடுக்கி வைத்திருக்கிறோம் என்பது புரிந்தது. நாமெல்லாம் தலைகுனிய வேண்டும். அவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதை இந்தப் படத்தின் மூலமாக சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார்.

சமூகம் சார்ந்து படங்கள் பண்ணுவதால் அவரை சமூகக்கனி என்று தான் சொல்வேன். காமெடி காட்சி வைத்தாலும், அதிலும் ஒரு சமூகக் கருத்து வைப்பார். சமூகம் சாராமல் எந்தவொரு படமும் பண்ணவே மாட்டார். இப்படி ஒரு இயக்குநர் நமக்குத் தேவை. ஆகையால் தான் அவரது படத்தில் எப்போதுமே நடிக்கிறேன்”.

இவ்வாறு சசிகுமார் தெரிவித்தார்.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்