தயாரிப்பாளர் சங்கத்துக்கு பதிலடி: சினிமாவில் அரசியல்வாதிகள் நுழைவதை தடுக்க முடியாது - ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சினிமாவில் அரசியல்வாதிகள் நுழைவதை யாரும் தடுக்க முடியாது என்று ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"'லிங்கா' பட விநியோகஸ்தர்கள் போராட்டம் தொழில் தர்மத்திற்கு மாறானது என்றும் போராட்டத்திற்குள் அரசியல் தலைவர்களை இழுப்பது வருந்தத்தக்கது என்றும், உண்மையில் பிரச்சனை இருக்கும் பட்சதில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

'லிங்கா' பட நஷ்டம் தொடர்பான போராட்டம் திருச்சி - தஞ்சை விநியோகஸ்தர் சம்பந்தப்பட்ட போராட்டம் போன்ற ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். 'லிங்கா' படத்தை திரையிட்டதன் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சுட்டிக் காட்டி இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவிஸ், படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் கதாநாயகன் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவருக்கும் தமிழ்நாட்டின் லிங்கா திரைப்பட விநியோகஸ்தர்கள் சார்பில் கடிதம் மூலமாகவும், மின் அஞ்சல் மூலமாகவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் சம அளவில் நஷ்டம் அடைந்து இருந்து விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கோரினால் அது தொழில் தர்மத்திற்கு எதிரானது என்பதில் மாற்றுகருத்தில்லை. லிங்கா பட விவகாரத்தில் லாபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இது எப்படி தவறாகும்?

கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்து அவுட்ரேட் மற்றும் மினிமம் கியாரண்டி முறையில் விநியோகஸ்தர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டபோது நஷ்டத்தில் பங்கொடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்களும் நடிகர்களும் நிறைய உண்டு. நஷ்ட ஈட்டை திருப்பிக் கொடுத்த விஷயங்கள் மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் நடைபெற்ற சம்பவங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தெரியாததா?

'பாபா' மற்றும் 'குசேலன்' போன்ற படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தாமாக முன் வந்து ரஜினி வழங்கினார். நடிகர் கமல்ஹாசன் நடித்த 'மும்பை எக்ஸ்பிரஸ்', 'ஹேராம்' போன்ற படங்கள் நஷ்டத்தை சந்தித்த போதுதாமாகவே முன்வந்து நஷ்டத்தில் பங்கு கொண்டார்.

இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் சினிமாவில் நடந்து உள்ளன. 'லிங்கா' பட பிரச்சனை தொடர்பாக ஜனவரி 10ம் தேதி வள்ளுவர் கோட்டம் எதிரில் நஷ்டம் அடைந்த திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின்னர் எங்களை அழைத்த கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணி கணக்குகளை ஒப்படைக்குமாறும் நஷ்ட ஈடு தரப்படும் எனவும் கூறினார். அதனை நம்பி கணக்குகளை ஒப்படைத்தோம். கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் இழுத்தடிப்பது தான் தொழில் தர்மத்திற்கு மாறானது என்பதை தயாரிப்பாளர் சங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த படத்தை ரஜினிகாந்தை நம்பித்தான் வாங்கினோம். அதனால் நஷ்டத்தில் அவரும் பங்கு கொள்ள வேண்டும் என அழைக்கிறோம்.

பிரச்சனையை தீர்க்க சங்கத்தை அணுக வேண்டும் என்று கூறும் நீங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினர் அல்லாத புது விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்ற ராகை வெங்கடேஷையோ, வேந்தர் மூவிஸ் நிறுவனத்தையோ ஏன் கண்டிக்கவில்லை? புதிய விநியோகஸ்தர்களுக்கு உங்கள் தொழில் தர்ம முறையை போதித்து விட்டல்லவா படத்தை விற்றிருக்க வேண்டும்.

தமிழில் மூன்று படங்களை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் உங்கள் சங்கத்தில் உறுப்பினர் கூட கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். உறுப்பினரல்லாத ஒருவருக்காக குரல் கொடுப்பதன் பின்னணியை அறிந்து கொள்ள விரும்புகிறோம். மக்கள் இந்த பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசினால் அவரின் கால்ஷீட் கிடைக்கும் என்ற நப்பாசையில் பல பேர் தொடர்ந்து அறிக்கை வெளியிடுகிறார்கள்.

பணத்தை இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். எனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் அகிம்சை முறையில் போராடும் விநியோகஸ்தர்களுக்கும் ஒத்துழைப்பு தரும்படியும் தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரண்டர கலந்திருப்பதால் அரசியலில் சினிமாக்காரர்கள் நுழைவதையும், சினிமாவில் அரசியல்வாதிகள் நுழைவதையும் யாரும் தடுக்க முடியாது"

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

35 mins ago

வாழ்வியல்

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்