சினிமா என்பது கட்டாயத் திருமணம் : இயக்குனர் மகேந்திரன்

By செய்திப்பிரிவு

‘சினிமாவை வெறுத்து ஓடிய எனக்கு, என்றுமே அது காதல் திருமணமாக இருந்ததில்லை. சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான். அந்த உன்னதமான ஊடகத்தில் நான் நுனிப்புல் மேய்ந்தவன்’ என இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.

கோவை, குஜராத்தி சமாஜத்தில் சனிக்கிழமை, இயக்குநர் மகேந் திரனின் ‘சினிமாவும் நானும்’ நூல் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர் மகேந்திரன், பின்னணிப் பாடகி ஜென்ஸி, கவிஞரும் பாடலாசிரியருமான அறிவுமதி, எழுத்தாளர் பாமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மௌனமே சிறந்த மொழி

நிகழ்ச்சியில் இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது: “மெளனத்தை விட சிறந்த மொழி இருப்பதாகத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்தசமயம் எண்ணங்களை, மெளனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். ’உதிரிப்பூக்கள்’ போன்ற எனது படங்களில் மெளனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள். உண்மைதான், எனது படத்துக்குப் பெரும்பாலும் வசனம் எழுதியது இளையராஜாதான். மெளனங்களை நான் வசனங்களாக வடித்தபோது, இசையால் ஒவ்வொரு இடத்தையும் நிரப்பியவர் இளையராஜா.

100 ஆண்டுகள் கடந்தும் டூயட் பாடல்கள் இருப்பது தமிழ் சினிமாவின் சுமையாக இருக்கிறது. சினிமாவின் இயல்புத் தன்மையை பாடல்கள் கெடுத்து விடும். அதே சமயம், நான் இளையராஜாவின் பாடல்களுக்கு அடிமை. பல நேரங்களில் மன இறுக்கத்துக்கு மருந்தாக இருந்தவை ராஜாவின் பாடல்களே. திரைக்கதை எழுதும் போதும், மனஉளைச்சலை உணரும்போது அவரது இசையும் பாடல்களுமே மனத்தை அமைதிப்படுத்தும். நீங்கள் கேட்க நினைக்கும், அனைத்து கேள்விகளுக்கும் ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் பதில்கள் கூறியுள்ளேன்.

தமிழ் சினிமா மீது வெறுப்பு!

ஏன் குறைவான படங்களை கொடுத்தீர்கள்? 12 படங்களைக் கொடுக்க இவ்வளவு காலம் ஏன்? என்பதற்கெல்லாம் எனது பதில் இதுதான்: தமிழ் சினிமாவைத் தவிர வேறு எதையுமே பார்க்காமல் இருந்தவன், யதேச்சையாக இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்த்தேன். அதன்பின் தமிழ் சினிமாக்கள் மீது வெறுப்பு வந்துவிட்டது.

இங்கு பல உன்னத கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் உருவாக்கப்படுவது சினிமாவாக இல்லை. காலத்தின் கட்டாயத்தால் வெறுப்புடன் இதனை ஏற்றுக்கொண்டேன்.

இந்தப் பிழைப்பு வேண்டாமென, பலமுறை சினிமாவை விட்டு ஓடியிருக்கிறேன். நான் செய்த தவறுகளுக்குத்தான் நான் பொறுப்பே தவிர; நான் செய்த நன்மைகளுக்கும், சாதனைகளுக்கும் நான் பொறுப்பல்ல. இது தன்னடக்கமில்லை, எனது வாக்கு மூலம்.

காதல் திருமணம்

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருமே ஆசை, விருப்பம், லட்சியம், போராட்டம் ஆகியவற்றைக் கடந்து, வெற்றி பெறுவார்கள். அது அவர்களுக்குக் காதல் திருமணம் போன்றது. ஆனால், நான் சினிமாவை வெறுத்தவன். என்றுமே சினிமா எனக்குக் காதல் திருமணமாக இருக்கவில்லை. கட்டாயத் திருமணமாகத்தான் இருந்துள்ளது.

ஓடிச் சென்றவனை விடாமல் பிடித்துக் கொண்டதற்காக, சினிமாவுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், அந்த சினிமாவை இதுவரை அன்போடு நெருங்கவில்லை” என்றார்.

நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

43 mins ago

க்ரைம்

47 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்