இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார் விஜய்சேதுபதி: திருமுருகன் காந்தி புகழாரம்

By செய்திப்பிரிவு

இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார் விஜய்சேதுபதி என்று '96' படத்தின் 100-வது நாள் விழாவில் திருமுருகன்காந்தி புகழாரம் சூட்டினார்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. நந்தகோபால் தயாரித்த அப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து சுமார் 100 நாட்கள் கடந்துள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இவ்விழாவில் '96' படக்குழுவினருடன் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் திருமுருகன் காந்தி பேசியதாவது:

இந்த வெற்றி விழாவிற்கு இயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புகொடி காட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் சூழலில் '96' படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் '96' படம் அற்புதமாக இருந்தது.ஆனால் இந்தப் படத்தில் இன்னும் சில விஷயங்கள் சொல்லியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம்.

காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள். ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி அப்படி செய்ய முடியும்.? எங்கே கோளாறு இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். இது போன்ற தகவல்கள் ஊடகங்களில்அதிகமாக வெளியாகும் சமயத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது போன்றவற்றை பேசும் '96' படம் வெளியாகியிருக்கிறது.

காதல் என்பது மனிதர்களுக்குள் மட்டுமே வரக்கூடிய உணர்வு அல்ல,இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிடத்திலும் இருக்கும் அடிப்படை குணாதிசயம். படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தைப் போல் காதல் என்பது காலத்துடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது. காதல் என்பது காலத்தின்இனிமை, காதல் என்பது நேசத்துடன்கூடிய ஒரு உணர்வு.

படத்தில் நிகழ்காலம் முழுவதும் இரவிலும், கடந்த காலம் முழுவதும் பகலிலும் நடைபெறும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.இதுவும் நன்றாக இருந்தது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார். அதை படத்தின் முதல் பாடலிலேயேதெளிவாக சொல்கிறார் இயக்குநர்.

காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால்அந்த ஆண் வெறுப்புக்கு ஆளாகாமல், வன்மத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையை நேசிப்பவராக, பேரன்பு மிக்கவராக மாறுவதை அந்த முதல் பாடல் எடுத்துக்காட்டும் போது நாமும் மாறிவிடுகிறோம்.

அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார்.இதைத் தான் ஒரு பேட்டியிலும் சொன்னேன். இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார்.

இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்களோ ,எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார்.  இப்படிபட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன்.

இன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவே இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார். அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களை போன்றவர்கள் தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது.

திரிஷாவும் அற்புதமாக நடித்திருந்தார். இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது,

‘இரும்பு பிசிறாக நீளும்

 நானிருக்க

 நீ செல்லும் ரயில்’ என்ற அறிவுமதியின் கவிதைத்தான் நினைவுக்கு வருகிறது.

‘மல்லிகையின் வாசம்

மழையின் நேசம்

எதுவும் அதுவாக இல்லை.

எல்லாம் அவளின் நினைவுகளாகவே இருக்கிறது.”என்ற என்னுடைய நண்பரின் கவிதையும் நினைவிற்கு வருகிறது.

இன்றைய தேதியில் செல்போன் இருப்பதால் நாம் நினைத்ததை உடனடியாக பேசிவிடுகிறோம். பிடித்ததையும், பேசிவிடுகிறோம். பிடிக்காததையும் பேசிவிடுகிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் நாம் நினைத்ததை நேரடியாக சென்று சொல்லிய அல்லது சொல்ல தவறிய அனுபவத்தை இந்த படம் அற்புதமாக பேசியிருக்கிறது.

இந்த படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல் தான். நாங்கள் மனிதர்களை காதலிக்கிறோம். இயற்கையை நேசிக்கிறோம்.அதனால் போராடுகிறோம். இது தான் உண்மை

இவ்வாறு திருமுருகன் காந்தி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்