முதல் பார்வை: இமைக்கா நொடிகள்

By உதிரன்

சீரியல் கில்லரைக் கண்டுபிடிப்பதற்காகப் போராடும் ஒரு சிபிஐ ஆபிஸர், தன் தம்பியுடன் இணைந்து திட்டமிட்டால் அதுவே ‘இமைக்கா நொடிகள்’.

பெங்களூருவில் அடுத்தடுத்து கடத்தப்படும் இளம்பெண்கள் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார்கள். அதற்குக் காரணமான சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிஐ ஆபிஸர் அஞ்சலி விக்கிரமாதித்யன் (நயன்தாரா) இறங்குகிறார். ஒரு அமைச்சரின் மகனும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட, விவகாரம் பெரிதாக வெடிக்கிறது. இந்த சூழலில் அஞ்சலியின் தம்பி டாக்டர் அர்ஜுன் (அதர்வா) தான் சீரியல் கில்லர் என இன்னொரு சிபிஐ ஆபிஸர் தேவன் சில தடயங்களை வைத்துச் சொல்கிறார். அஞ்சலி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அர்ஜீன் மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் முன்னாள் போலீஸ் அதிகாரியின் (அனுராக் கஷ்யப்) உதவியை தேவன் எதிர்பார்க்கிறார். உண்மையில் நடந்தது என்ன, அந்த சீரியல் கில்லர் யார், அதர்வா எப்படி சிக்கினார், முன்னாள் போலீஸ் அதிகாரி உதவினாரா என்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதோடு குற்றம் நடந்தது என்ன? என்பதை விரிவாகச் சொல்கிறது ‘ இமைக்கா நொடிகள்’.

டிமான்ட்டி காலனியில் மிரள வைத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து எமோஷனல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை கொஞ்சம் நீளமாகக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், அவரது முயற்சி வீண் போகவில்லை.

சிபிஐ ஆபிஸர் கதாபாத்திரத்தில் நயன்தாரா கம்பீர வார்ப்பு. திட்டம் வகுப்பது, அதைச் செயல்படுத்துவதில் காட்டும் பரபரப்பு என ஆளுமைமிக்க நடிப்புடன் வசீகரிக்கிறார். அதுவும் அந்த ஃபிளாஷ்பேக் காட்சியில் கலங்கடிக்கிறார்.

அனுராக் கஷ்யப் மிஸ்டர் கூல் மனிதராக படம் முழுக்க பிரமாதப்படுத்துகிறார். அசாதாரணமான அவரது ரியாக்‌ஷன்கள் தனி ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இனி அனுராக் கஷ்யப்பை நடிகராக இனி பல படங்களில் பார்க்கலாம்.

குற்றம் கண்டு பொங்கியெழும் இளைஞர் கதாபாத்திரத்தில் அதர்வா கச்சிதமாகப் பொருந்துகிறார். நடனம், சண்டைக்காட்சிகளில் முன்னேற்றம் தெரிகிறது. தனக்குக் கிடைத்த திரையை சரியாகப் பயன்படுத்தி பக்குவமான நடிப்பின் மூலம் அதர்வா அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் விஜய் சேதுபதி மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிறைகிறார். ராஷி கண்ணா நாயகிக்கான பங்களிப்பைக் குறையில்லாமல் செய்திருக்கிறார். ரமேஷ் திலக்கின் ஒருசில ஒன்லைனர்கள் ரசிக்க வைக்கின்றன.

தமிழ் சினிமாவில் சுட்டி என்ற பெயரில் கொஞ்சம் ஓவராகப் பேசும் கிளிஷே குழந்தை கதாபாத்திரம் தான் என்றாலும், மானஸ்வி அதை ரசிக்கும்படி செய்திருக்கிறார். தேவன், உதயபானு மகேஸ்வரன், வினோத் கிஷன் ஆகியோர் கதாபாத்திரங்களில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஆதியின் இசையில் நீயும் நானும் அன்பே, காதல் ஆகாயம் பாடல்கள் ரிப்பீட் ரகம். பின்னணி இசை காட்சிகளுடன் சரியாக ஒன்றிப் போகிறது.

புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பில் நேர்த்தி தெரிந்தாலும், சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். குறிப்பாக, அதர்வாவின் காதல் காட்சிகள் குறித்த ஃபிளாஷ்பேக் காட்சியைத் தவிர்த்திருந்தால் படத்தில் கச்சிதம் கூடியிருக்கும்.

சீரியல் கில்லர் ருத்ரா யார் என்ற கேள்வியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அதில் இருக்கும் ட்விஸ்ட் திரைக்கதையின் விரிவுக்கு வலு சேர்க்கிறது. அந்தத் திருப்பம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் அழுத்தமாகவும் உள்ளது.

ஆனால், படம் முழுக்க அநியாயத்துக்கு நம்பகத்தன்மை இல்லா காட்சிகள். சுட்டுப்பிடிக்க உத்தரவிட்ட பிறகும் கூட அதர்வா சர்வ சாதாரணமாக மருத்துவமனை, ஹோட்டலுக்குள் நுழைகிறார். கால் டாக்ஸியில் கவலைப்படாமல் பயணம் செய்கிறார். முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டற்ற சுதந்திரம் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. மிகப் பெரிய இழப்பைச் சந்திக்கும் நயன்தாராவை மட்டும் உயிர் சாட்சியாக டாக்டர் அண்ட் கோ விட்டுச் செல்வது எப்படி? என பல கேள்விகள் எழுகின்றன.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் அஜய் ஞானமுத்துவின் க்ரைம் படத்துக்கே உரிய திரைமொழியும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் 2.50 மணி நேரப் படத்தைப் பார்க்கும்படி நம்மைக் கட்டிப் போடுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்