ராம் சரண், பிரசாந்த் நடிப்பில் வெளியான வினய விதேய ராமா படம் எப்படி?

By உதிரன்

அண்ணனைக் கொலை செய்த கொடூர வில்லனைச் சாய்க்கும் சாகச நாயகனின் கதையே 'வினய விதேய ராமா'.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த். இவர் பிஹாரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். பிஹார் மாநிலத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் தாதா விவேக் ஓப்ராய் அம்மாநில முதல்வரையே மிரட்டுகிறார். இந்நிலையில் ராணுவப் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த பிரசாந்த் திட்டமிடுகிறார். ஆனால், ராணுவத்தையே துவம்சம் செய்து பிரசாந்தை அவமானப்படுத்துகிறார் விவேக் ஓப்ராய். அவரின் அட்டகாசத்தைத் தடுக்க பிரசாந்தின் தம்பி ராம் சரண் வருகிறார். இந்தப் போராட்டத்தில் யாருக்கு என்ன நேர்கிறது? 300க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூட்டத்தை தனி மனிதராக ராம் சரணால் சமாளிக்க முடிந்ததா, ஹைதராபாத்தில் ஒரு பெரிய புள்ளி ஏன் ராம் சரணைப் பழிவாங்கத் துடிக்கிறார், பிஹார் முதல்வரே வந்து பிரசாந்த் குடும்பத்துக்கு திடீரென்று பாதுகாப்பு அளிப்பது ஏன் போன்ற கேள்விகளுக்கு அலுப்பாகவும் சொதப்பலாகவும் பதில் சொல்கிறது திரைக்கதை.

அக்கட பூமியில் இருந்து வந்திருக்கும் 1555-வது பழிவாங்கும் படம்தான் 'வினய விதேய ராமா'. 'சிம்ஹா', 'லெஜண்ட்' உள்ளிட்ட படங்களை இயக்கிய போயப்பட்டி சீனுவின் 8-வது படம். மனிதர் ஒரு முடிவோடுதான் களம் இறங்கியிருக்கிறார். பாட்டு, ஃபைட் என்று டெம்ப்ளேட் மாறாமல் கொடுத்து நம்மை ரொம்பவே சோதிக்கிறார். படத்தில் காமெடிக் காட்சிகள் அவ்வளவாக இல்லை. ஆனால், ஆக்‌ஷன் காட்சிகள் அந்தக் குறையைப் போக்கிவிடுகின்றன.

ராம் சரண் பத்து பேரை அடிப்பார் என்று நம்ப முடிகிறதுதான். ஆனால், அதற்காக வருவோர் போவோரையெல்லாம் புரட்டி எடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி? 300க்கும் மேற்பட்டோரை வீறுகொண்டு தாக்கும்போதெல்லாம் வாட் ய மேன் என்று சொல்ல முடியவில்லை. நம்புறமாதிரி அடிங்கப்பு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மிகையான சண்டைக் காட்சிகள். மற்றபடி காதல், பாசம், கோபம் என்று நாயகனுக்கான அம்சங்களில் ராம் சரண் வழக்கம்போல நடித்திருக்கிறார்.

கியாரா அத்வானி அறிமுகக் காட்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் சும்மா வந்து போகிறார்.

படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரசாந்த் பொருத்தமான தேர்வு. பயந்த சுபாவம், தம்பி மீதான பாசம், வில்லன் மீதான கோபத்தை சரியாக வெளிப்படுத்துகிறார்.  உங்களை எல்லாம் ஏறி மிதிக்க ஒருத்தன் வருவான்டா,  ஆண்டவன் வர லேட்டாகலாம். இவன் வர லேட்டாகாது என்று ஹீரோவுக்கு பில்டப் கொடுக்கும் வசனங்களில் பிரசாந்த் பேசும்போதுதான் நமக்கு உறுத்துகிறது. எப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரே?

விவேக் ஓப்ராய் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால், நடிப்பில் வில்லத்தனம் சுத்தமாக இல்லை. எதிர் நாயகனுக்கான எந்த அம்சத்தையும் அவர் கைவரப் பெறவில்லை. சினேகாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை அழகாகச் செய்திருக்கிறார்.

முகேஷ் ரிஷி, ஹரிஷ் உத்தமன், சலபதி ராவ், ஆர்யன் ராஜேஷ், மதுமிதா, ரவிவர்மா, ஜெயப்பிரகாஷ், ஹேமா, ஈஷா குப்தா என படத்தில் பலரும் வந்து போகின்றனர். யாருக்கும் முக்கியத்துவம் இல்லை.

ரிஷி, ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு ஹைதராபாத், நேபாள எல்லை, பிஹார், குஜராத் நிலப்பரப்பை பளிச்சென்று காட்டுகிறது. தொழில்நுட்ப ரீதியில் படத்தின் தரத்தை உயர்த்த இவர்கள் இருவரே காரணம். தேவிஸ்ரீ பிரசாத் தமிழ்ப் படங்களின் பாடல்களில் வரும் இசையையும், பின்னணியையும் உல்டா செய்திருக்கிறார். வெங்கடேஸ்வர ராவும், தம்மி ராஜும் பாடல்களுக்கு அப்படியே கத்தரி போட்டிருக்கலாம்.

குப்பை பொறுக்கும் சிறுவர்கள் அவர்களுக்கு அடைக்கலம் தரும் மருத்துவர் என்று பழைய டெம்ப்ளேட்டில்தான் கதை ஆரம்பிக்கிறது. ஆதரவற்றவர்கள் குடும்பமாக இணையும்போது ஏற்படும் உணர்வுகளை வலுவாகக் காட்சிப்படுத்தவில்லை. குஜராத்தில் விமான நிலையத்தில் இருக்கும் ராம் சரண் பிரசாந்த் போன் செய்த உடன் எப்படி ஐந்தே நிமிடத்தில் 2000 கிலோமீட்டர் தாண்டி ரயிலில் பிஹாருக்கு வருகிறார்? சினேகா ஏன் எமோஷனல் காட்சிகளில் சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுகிறார், பிஹார் முதல்வர் சொல்லும் பிளாஷ்பேக் காட்சியில் கூடவா ஹீரோவும், ஹீரோயினும் டூயட் பாடிக் கொண்டிருப்பார்கள்? 

பிஹார், குஜராத் என அந்த மாநில மக்கள் கூட தெலுங்கில் மட்டும் பேசுவது எப்படி? செல்போன் சிக்னலுக்காக ஏன் பிரசாந்த் அத்துவானத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறார்? என்று படத்தின் லாஜிக் ஓட்டைகள் ஏராளம். படத்தில் புதுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் எதுவும் இல்லாமல் வறட்சி நிலை நீடிக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்க்கும்போது சிரிப்பு மட்டுமே வருகிறது. அதுவும் விவேக் ஓப்ராயைக் கடித்த பாம்பு செத்தே போவதும், விவேக் ஓப்ராய் அதற்குப் பிறகு பஞ்ச் வசனம் பேசுவதும் சகிப்புத்தன்மைக்கு விடப்படும் சவால்.  மேலோட்டமாகப் பார்க்கும்போது நல்ல கதையாகத் தெரிந்தாலும் திரைக்கதையில் இயக்குநர் சறுக்கி இருப்பதால் படம் பலவீனமாக மாறிவிடுகிறது.

நீங்கள் எதற்கும் அசராமல் படம் பார்ப்பவர் என்றால் 'வினய விதேய ராமா' படம் பார்த்து உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

வர்த்தக உலகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்