புரூஸ் லீ 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பிரபல நடிகர், தற்காப்புக் கலை வீரர்

உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ (Bruce Lee) பிறந்த தினம் இன்று (நவம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் சான்பிரான்சிஸ் கோவில் (1940) பிறந்தார். சீன வம்சாவளியை சேர்ந்தவரான தந்தை, நாடகக் கலைஞர். சினிமா உலகிலும் பலருடன் பழக்கம் உள்ளவர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

# சீனப் பாரம்பரியம் சார்ந்த கல்வி பெறுவதற்காக ஹாங்காங்கில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். யிப் மான் என்ற குருவிடம் தற்காப்புக் கலையை ஆர்வத்துடன் கற்றார்.

# படிப்பைவிட அடிதடிகளில்தான் அதிக நேரம் கழிந்தது. இதற்கு முடிவு கட்டுவதற்காக மீண்டும் சான்பிரான்சிஸ்கோ அனுப்பப்பட்டார். உணவகத்தில் பகுதி நேரமாக வேலை செய்துகொண்டே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சொந்தமாக ஒரு நூலகமே வைத்திருந்தார்.

# சீன தற்காப்புக் கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் தற்காப்பு பயிற்சிப் பள்ளி தொடங்கினார். மேற்கத்திய மல்யுத்தம், ஜூடோ, கராத்தே, குத்துச்சண்டையுடன் சில புதிய முறைகளையும் சேர்த்து புது வடிவிலான தற்காப்புக் கலையை உருவாக்கினார். ‘ஜீட் குன் டோ’ என்ற அந்த கலை இவரால் பிரபலமடைந்தது.

# தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். ஹாலிவுட்டில் கதாநாயகனாக வேண்டும் என்று எண்ணம் நிறைவேறாததால், மனம் சோர்ந்து ஹாங்காங் திரும்பினார். 1971-ல் ‘தி பிக் பாஸ்’ படத்தில் நடித்தார். ஆசிய கண்டத்தை அசத்திய இப்படம், ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்க்கவில்லை.

# அடுத்து வெளிவந்த ‘ஃபிஸ்ட் ஆஃப் ப்யூரி’ மாபெரும் வெற்றி பெற்றது. 1972-ல் ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்’ படத்தை தயாரித்தார். திரைக்கதை, இயக்கமும் அவரே. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏராளமான அமெரிக்க இளைஞர்கள் இவரது வெறித்தனமான ரசிகர்களாக மாறினர். உடனடியாக அடுத்த படத் தயாரிப்பில் இறங்கினார்.

# ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தன. தனது ஹாலிவுட் கனவு நிஜமாகும் சந்தர்ப்பத்தை நழுவவிட அவர் விரும்பவில்லை. சொந்தப் படம் தயாரிக்கும் வேலையை நிறுத்திவிட்டு ‘என்டர் தி டிராகன் பட வேலையில் இறங்கினார்.

# சண்டைக் காட்சிகளில் இவரது வேகத்துடன் கேமராவின் வேகம் ஈடுகொடுக்க முடியாமல் 24 என்று இருந்த ஃபிரேம் அளவை 34-ஆக மாற்றிய ஹாலிவுட் வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது.

# 1973-ல் இவரது ‘என்டர் தி டிராகன்’ திரைப்பட ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது, பாதியில் நின்ற தனது ‘கேம் ஆஃப் டெத்’ திரைப்படம் குறித்து விவாதிக்க வெளியே சென்றவர் மர்மமான முறையில் இறந்தார். நான்கே படங்களில் நடித்து, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சாதனையாளரான புரூஸ் லீ 33-வது வயதில் மறைந்தார்.

# இவரது மறைவுக்குப் பிறகு வெளிவந்த ‘என்டர் தி டிராகன்’ படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகெங்கும் உள்ள இளைஞர்களை ஈர்த்த தனி மனிதன் புரூஸ் லீயாகத்தான் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

விளையாட்டு

30 mins ago

வேலை வாய்ப்பு

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்