புகைப்படங்கள் இல்லாமல் வெளிவந்த பிரெஞ்சு நாளிதழ்!

By சைபர் சிம்மன்

அதிர்ச்சி வைத்தியம் என்பார்களே, அதுபோல் பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற நாளிதழ் 'லிபரேஷன்' வாசகர்களுக்கு கலாச்சார அதிர்ச்சியை அளித்துள்ளது. 40 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நாளிதழ் சமீபத்தில் முதல் முறையாக புகைப்படங்களே இல்லாமல் ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளது.

நேர்த்தியான புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிடுவதற்காக அறியப்படும் இந்த நாளிதழை கடந்த 14-ம் தேதி வாங்கிப் பார்த்த வாசகர்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். காரணம் அந்தப் பதிப்பில் செய்திகள் மட்டுமே இருந்தன. வழக்கமாக செய்திகளுக்கு வலு சேர்க்கும் புகைப்படங்கள் இல்லை. புகைப்படங்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் கட்டங்கள் மட்டுமே இருந்தன. எந்த பக்கத்தை புரட்டினாலும் புகைப்படங்கள் இல்லை. வெறும் கட்டங்கள்தான் இருந்தன.

புகைப்படங்களுக்காகவே போற்றப்படும் லிபரேஷன் நாளிதழ், புகைப்படங்களே இல்லாமல் ஒரு பதிப்பை கொண்டு வருவதற்கான காரணம், புகைப்படக் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலோ அல்லது புகைப்படங்கள் இனியும் தேவையில்லை என்ற எண்ணத்தினாலோ அல்ல! மாறாக, புகைப்படங்கள் ஒரு நாளிதழுக்கு எந்த அளவு முக்கியம் என்று உணர்த்துவதற்காகவே இந்த மரபு மீறிய செயலை மேற்கொண்டுள்ளது.

இப்படி புகைப்படங்கள் இல்லாமல் வெளியாவது ஏன் என்பதற்கு லிபரேஷன் நாளிதழ் முகப்புப் பக்கத்திலேயே விளக்கம் அளித்திருந்தது.

'லிபரேஷன் புகைப்படக் கலைக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறது. புகைப்படங்கள் மீதான எங்கள் ஆர்வம் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதில்லை. அதற்கு காரணம், புகைப்படங்கள் நமது உலகின் நாடித்துடிப்பை உணர்த்துவது தான்... பாரீஸ் புகைப்படக்கலை கண்காட்சி துவங்கும் தினத்தன்று இப்படி வெறுமையாக நாளிதழை வெளியிடுவதன் மூலம், புகைப்படக்கலை மீதான எங்கள் ஈடுபாட்டை வலியுறுத்துகிறோம். புகைப்படக்கலையை நாங்கள் மறைக்கவில்லை... மாறாக அதற்குத் தகுதியான மரியாதையை செலுத்துகிறோம்.'

இப்படிக் குறிப்பிட்டிருந்த அந்த நாளிதழ், தொழில்முறை புகைப்பட செய்தியாளர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் சோதனையான நிலையை யாரும் புறக்கணித்துவிட முடியாது என்றும் கூறியிருந்தது. குறிப்பாக, உயிரைப் பணயம் வைத்து படங்கள் எடுத்து வரும் போர் புகைப்படக்கலைஞர்கள் நிலை மேலும் மோசமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

லிபரேஷன் சுட்டிக்காட்டும் இந்த நிலை பலரும் அறிந்தது தான். இணைய யுகத்தில் புகைப்படக்கலைஞர்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர். டிஜிட்டல் காமிராக்கள் சகஜமாகி, செல்போன் காமிராக்களும் பரவலாக துவங்கியிருக்கும் நிலையில், புகைப்படங்களை எடுப்பது எளிதாகி இருக்கிறது. மேலும் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகள் மூலம் பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐபோன்களில் புகைப்படம் எடுப்பது என்பது புதிய புகைப்பட கலையாகவே உருவாகி இருக்கிறது. புகைப்படக்கலையின் ஜனநாயகமாக்கல் என இதனை ஏற்றுக்கொண்டாலும், தொழில்முறை புகைப்படக்கலைஞர்கள் இந்த போக்கால் மிகவும் பாதிகப்பட்டுள்ளனர். பல செய்தி நிறுவனங்கள் தொழில்முறை புகைப்பட கலைஞர்களுக்கு பதிலாக பகுதி நேர புகைப்படக்கலைஞர்களை பயன்படுத்த துவங்கியுள்ளன.

மேலும் சில செய்தி நிறுவனங்கள் செய்தியாளர்களையே புகைப்படம் எடுக்க வைக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் சிகாகோ சன் டைம்ஸ் தனது புகைப்படக்கலைஞர்கள் குழு முழுவதையும் நீக்கி அதிர்ச்சி அளித்தது. செய்தியாளர்களே ஐபோன்கள் மூலம் புகைப்படமும் எடுத்து கொடுக்க வேண்டும் என அந்த நாளிதழ் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு புள்ளிவிவரம், அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் புகைப்படக்கலைஞர்களுக்கான வேலைவாய்ப்பு 50 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது.

இந்நிலையில் தான், செய்தியைச் சொல்ல புகைப்படங்கள் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்துவதற்காக லிபரேஷன் நாளிதழ் புகைப்படங்களுக்கு ஒரு நாள் மட்டும் விடை கொடுத்துள்ளது. அதன் 14 ம் தேதி பதிப்பு வழக்கமான வடிவமைப்பு மற்றும் செய்திகளுடனே வெளியானது. புகைப்படங்களுக்கான இடம் மட்டும் வெறுமையாக இருந்தது. நல்ல புகைப்படங்கள் இல்லாவிட்டால் இப்படி தான் நாளிதழ் இருக்கும் என்று காட்டிய லிபரேஷன், அதன் கடைசி பக்கத்தில் அந்த இதழில் வெளியாகி இருக்க வேண்டிய புகைப்படங்கள் அனைத்தையும் செய்தியோ, புகைப்படக்குறிப்போ இல்லாமல் வெளியிட்டிருந்தது.

இணைய யுகத்தில் பாரம்பரியம் மிக்க புகைப்படக்கலைக்கு ஏற்பட்டுள்ள சோதனையான நிலையை, ஒரு அழகிய புகைப்படம் எப்படி செய்தியை உணர்த்துமோ அதே முறையில் லிபரேஷன் காட்சிரீதியாக உணர்த்தியுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலும் விவரங்களுக்கு: F >rench newspaper removes all images in support of photographers

தொழில்முறை புகைப்படக்கலையின் முக்கியத்துவம் பற்றி புகைப்படக்கலைஞரின் வலைப்பதிவு:>The Idiocy of Eliminating a Photo Staff

சைபர்சிம்மன், கட்டுரையாளர் - தொடர்புக்கு enarasimhan@gmail.com

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம்>http://cybersimman.wordpress.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்