Published on : 07 Apr 2023 20:35 pm

புனித வெள்ளி - சிறப்பும் ஆல்பமும்

Published on : 07 Apr 2023 20:35 pm

1 / 30

புனித வெள்ளி. இயேசு சிலுவையில் உயிர்விட்ட தினம். அவரது திருப்பாடுகளைத் தியானித்து அனுசரிக்கிற தவக்காலத்தின் கடைசி வாரத்தில் மிகப் புனிதமான நாள்.

2 / 30

இயேசு கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், தன் சீடர்களுடன் பாஸ்கா பண்டிகையின் இரவு உணவை உண்கிறார். அப்போது கடவுளாகிய தன் தந்தை விரும்பியபடி தன் உயிரையும் ரத்தத்தையும் பலியாகக் கொடுக்கப் போவதை குறிப்பால் உணர்த்தினார்.

3 / 30

ரொட்டியையும் திராட்சை ரசத்தையும் தன் சீடர்களுக்கு உணவாகக் கொடுத்து, அவை தனது உடலும் ரத்தமுமாகக் கொள்ளப்படவேண்டிய அடையாளம் என்றும் அதைத் தன் நினைவாகத் தொடர்ந்து நிறைவேற்றும்படியும் சீடர்களிடம் கேட்டுக்கொண்டார்.

4 / 30

தன் மரணம் அனைவருக்குமான மீட்பு என்பதை வியாழன் இரவு உணவின் வழியாக உணர்த்திய இயேசு, அந்த பாஸ்கா விருந்துக்குச் சற்றுமுன்பாக தன் சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைத்தார். அதை இன்று வரை புனித வியாழன் வழிபாட்டுச் சடங்கில் கத்தோலிக்கர்களும் கிழக்கு மரபுவழி கிறிஸ்துவர்களும் நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.

5 / 30

தேவாலய குருவானவர், பொதுநிலையின ராகிய மக்களின் பாதங்களைக் கழுவும் புனிதச் சடங்கை நிறைவேற்றுவார். அதன் வழியாக இயேசுவின் முன்மாதிரி நினைவுகூரப்படுகிறது. இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவியதன் மூலம் தன் வாழ்வு, பாடுகளின் நோக்கம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் தன்னை அர்ப்பணிக்கவே என்பதைக் காட்டினார்.

6 / 30

இயேசு திருநிலைப்படுத்திய இவ்வழக்கத்தைப் பின்பற்றி, அவர் மனித குலத்தை அன்பு செய்ததுபோல் சகமனிதர்களை அன்புகூரவும் அவர்களை அரவணைக்கவும் புனித வியாழன் சடங்குகளில் கலந்துகொள்ளும் கிறிஸ்துவ மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

7 / 30

அடுத்த நாள் புனித வெள்ளி. இயேசுவின் மரணம் குறித்த மறையுண்மையை ஆழமாகத் தியானித்து, அவர் உயிர்விட்ட சிலுவையை முத்தமிட்டு வணங்கும் புனிதச் சடங்கானது அனுசரிக்கப்படுகிறது.

8 / 30

மனிதர்களின் பாவமானது, இயேசுவின் உயிர்த் தியாகம் வழியாக அதுவரை வரலாற்றில் இல்லாத அவரது பேரன்பால் துடைத்தெறியப்பட்டது. அவரது தியாகச் சாவு, பாவத்தில் நாட்டம் கொள்ளாத புதுவாழ்வு வாழ அவர் சுமந்த சிலுவையின் பாதை மனித குலத்துக்கு புதுவழியைக் காட்டுகிறது.

9 / 30

இயேசுவின் மரணம் வழியான இந்த அளப்பரிய அன்பை மனதில் கொண்டு வாழவும், அவரைப் போல் பிறருக்காக வாழவும் ஒவ்வொரு புனித வெள்ளியின்போதும் அழைக்கப்படுகிறோம்.

10 / 30

அந்த வகையில் புனித வெள்ளியை ஒரு நாள் நிகழ்வாக, நினைவேந்தலாகக் கடந்துபோவது கிறிஸ்துவ வாழ்வல்ல என்று எடுத்துக்காட்டுகிறார் புனித பேதுரு.

11 / 30

“பாவத்தின் குழியிலிருந்து விடுதலையாக்கு வதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழியக் கூடியது அல்ல. மாறாக, மாசு மருவற்ற தூய ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள ரத்தமாகும்” - புனித பேதுரு புனித வெள்ளியின் மகத்துவத்தை இப்படி எடுத்துக்காட்டியிருக்கிறார்.

12 / 30

சிலுவைப் பாதை 14: அப்படிப்பட்ட இயேசு, அதிகாரத்தில் இருந்த வர்களால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மிகத் துயரமான சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் சித்திரவதை செய்யப்பட்டுப் பாரமான சிலுவையைச் சுமக்கச் செய்து, அவரை கொல்கதா என்கிற இடத்துக்கு அழைத்துச்சென்று, சிலுவையில் அறைந்து கொன்றனர்.

13 / 30

அப்போது அவர் பாடுபட்டு, சிலுவை சுமந்து கொல்கதா நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிகழ்வுகளை, சிலுவைப் பாதை (Stations of the Cross) எனப் பெயரிட்டு நினைவுகூர்கின்ற வழிபாடு புனித வெள்ளியன்று மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பின்பற்றப்படுகிறது.

14 / 30

தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளியன்றும் கத்தோலிக்கம் உள்ளிட்ட பல பாரம்பரிய கிறிஸ்துவ சபைகளால் பின்பற்றப்படும் சிலுவைப்பாதை வழிபாட்டில் மொத்தம் 14 நிலைகள் உள்ளன.

15 / 30

1. இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும் மரணத் தண்டனையை யூத மத தலைமைப் பேராயத்தின் வற்புறுத்தலால் ஆளுநர் பொந்தியு பிலாத்து விதிக்கிறார். இவர், ரோமப் பேரரசின் ஆளுகையில் இருந்த யூதேயா பிரதேசத்தின் ஐந்தாம் ஆளுநர். 2. இதன் பின்னர் இயேசுவைச் சாட்டையால் அடித்து, அவர் தலையில் முள் கிரீடம் ஒன்றைச் சூட்டி, அவர் தோளில் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

16 / 30

3. சிலுவையின் பாரம் தாங்காமல் இயேசு முதல் முறை தரையில் விழுகிறார். 4. கொலைக் களத்துக்குச் செல்லும் வழியில் இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார். 5. சிரேன் என்கிற ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார். 6. வெரோணிகா என்கிற பெண்மணி இயேசுவின் ரத்தம் வழியும் முகத்தைத் துணியால் துடைக்கிறார்.

17 / 30

7. சிலுவையின் பாரம் தாங்க முடியாமல் இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார். 8. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 9. இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகிறார். 10. இயேசுவின் ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள். 11. இயேசுவைச் சிலுவையில் ஆணிகளால் அறைகிறார்கள். 12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.

18 / 30

13. இயேசுவின் உடலைச் சிலுவையிலிருந்து இறக்கி அவர் தாய் மரியாவின் மடியில் கிடத்துகிறார்கள். 14. இயேசுவின் சடலத்தைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். இந்தச் சிலுவைப் பாதை இயேசுவின் துயரம் மிக்க பாடுகளை நினைவூட்டி அவரது இறப்பின் மறைபொருளைத் தியானிக்க உதவுகிறது.

19 / 30

உயிர்ப்பும் உணவும்: இயேசுவின் சடலம் கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து, புனித சனிக்கிழமை அன்று தியானிக்கப்படுகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திருவிழிப்பு வழிபாட்டில், ‘அல்லேலூயா’ வாழ்த்தொலி எழுப்பி இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை ‘உயிர்ப்பு ஞாயிறு’ ஆகக் கொண்டாடப்படுகிறது.

20 / 30

மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு, “என்னைப் பின்தொடர விரும்புகிற யாரும் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்'' என்று வாழ்ந்த காலத்தில் அழைப்பு விடுத்தார். வலியில்லாமல் வாழ்க்கை இல்லை. தியாகம் இல்லாமல் வரலாறும் இல்லை. இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் நம் ஒவ்வொருவருக்கும் மீட்பின் உணவாக வந்தடையட்டும். | ஆக்கம்: ஆர்.சி.ஜெயந்தன் - படங்கள்:ஃபாரூக், ராமகிருஷ்ணா, பிஸ்வரஞ்சன் ரூட், மூர்த்தி

21 / 30
22 / 30
23 / 30
24 / 30
25 / 30
26 / 30
27 / 30
28 / 30
29 / 30
30 / 30

Recently Added

More From This Category

x