1 / 10
2023-ம் ஆண்டு அதிகம் வசூலித்த தமிழ் சினிமா படங்களில் விஜய் நடித்த ‘லியோ’ படம் முதலிடம் பிடித்துள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.
2 / 10
2வது இடத்தில் ரஜினியின் ‘ஜெயிலர்’. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினியின் மாஸ் காட்சிகளால் படம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் ரூ.610 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 / 10
3வது இடத்தில் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடியை வசூலித்தது.
4 / 10
4வது இடத்தில் வாரிசு. வம்சி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய், சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீரியல் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்தது.
5 / 10
அஜித்தின் ‘துணிவு’ 5வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வங்கிகளின் அத்துமீறல்களை பேசியிருந்தது. படத்தின் மைய கதை வரவேற்பை பெற்றபோதிலும், அதைச்சுற்றி எழுதியிருந்த கமர்ஷியல் திரைக்கதை வலுசேர்க்கவில்லை. இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
6 / 10
6வது இடத்தில் தனுஷின் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் அரசுப்பள்ளிகளை அழித்தொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசுகிறது. இப்படம் அதன் ஓவர் சென்டிமென்ட் எமோஷன்களால் தடுமாறியது. ஜி.வி.பிரகாஷின் இசை பலம் சேர்த்தது. சம்யுக்தா, சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரூ.120 கோடி வசூலித்தது.
7 / 10
7வது இடத்தில் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் எங்கேஜிங் திரைக்கதையால் படம் ரூ.110 வரை வசூலித்து விஷாலுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.
8 / 10
8வது இடத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன். மடோன் அஸ்வினின் இப்படம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் சிக்கல்களையும், அம்மக்களின் வலியையும் பேசியது. பாரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். அதிதி ஷங்கர், யோகிபாபு நடித்துள்ள இப்படம் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது.
9 / 10
9வது இடத்தில் மாரி செல்வராஜின் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு நடித்த படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அரசியலுக்குள் நிலவும் சாதிய முரண்பாடுகளை பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்தது.
10 / 10
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த ‘போர் தொழில்’ த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஜூன் 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. அதேபோல, ‘குட் நைட்’, ‘டாடா’, ‘அயோத்தி’ படங்கள் அடுத்தடுத்து ரூ.50 கோடிக்குள்ளான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.