Published on : 03 May 2020 21:39 pm

பேசும் படங்கள்... (03.05.2020)

Published on : 03 May 2020 21:39 pm

1 / 10

வீட்டின் சுவரில் திரைப்படம் பால்கனியில் பார்வையாளர்கள் : கரோனா தொற்றுப் பரவலை தடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி எங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மக்கள் அனைவரும் வீடடங்கி இருக்கின்றனர். வழக்கமான வாழ்க்கையில் இருந்து மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் மக்கள். குழந்தைகளால் வெளியே விளையாட முடியவில்லை. பெரியவர்கள் பொழுதுபோக்கு அம்சங்களின்றி வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றனர். இப்போதைக்கும் தொலைக்காட்சியும், அலைபேசியும்தான் ஓரளவுக்கு இவர்களது நிமிடங்களை அமைதிப்படுத்துகின்றன. இந்நிலையில் - 200 வீடுகள் அமைந்துள்ள புதுச்சேரி காமராஜர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஞானசேகரன் என்பவரது முயற்சியில்... இந்தக் குடியிருப்புப் பகுதி கலகலப்பூ சூட ஆரம்பித்துள்ளது. ஆம், இவர்... தனது வீட்டின் எதிரே உள்ள வீட்டின் சுவரில், புரோஜெக்ட்டர் முலம் தினம் ஒரு திரைப் படத்தை திரையிட்டு வருகிறார். நேற்று சனிக்கிழமை மாலை விருந்தாக.... குடியிருப்புவாசிகளுக்காக ‘தடம்’ திரைப்படத்தை திரையிட்டார். பொழுதுபோக்கின்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவரும் அப்படத்தை அவரவர் வீடுகளின் பால்கனியில் சமூக இடை வெளியை கடைபிடித்து கண்டுகளித்தனர். - தகவல் மற்றும் படம்: எம்.சாம்ராஜ்

2 / 10

'நிலைமை எங்களுக்குத் தெரிகிறது... எங்கள் வயிறுகளுக்குத் தெரியவில்லையே’ 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. அதை நிரூபிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உண்ண உணவும், உழைக்க வேலையும், இருக்க இருப்பிடமும் கொடுத்து வந்தது சென்னை. எல்லாமும்... கரோனா தொற்று பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காலத்துக்கு முன்பு வரையில்தான். இப்போது நிலைமை எல்லாமும் தலைகீழாய் மாறிவிட்டது. இந்நிலையில் - வேளச்சேரி பகுதியில் தங்கியிருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த வேலையும் இன்றி, வருமானமும் இன்றி அன்றாட உணவுக்கு வழியின்றி துயரத்தில் துவளும் அவர்கள் ’நிலைமை எங்களுக்குத் தெரிகிறது... எங்கள் வயிறுகளுக்குத் தெரியவில்லையே’ என்று கூறி... நேற்று காலையில் வேளச்சேரி பகுதியில் போராட்டம் நடத்த முயற்சித்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதேபோல் பல்லாவரம் பகுதியிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தகவல் மற்றும் படம்: எம்.முத்து கணேஷ்

3 / 10

ஆனாலும்... கொஞ்சம் ஓவர்! கரோனா தொற்று பரவலைத் தடுக்க வேண்டும் என்றால் எல்லோரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளிய வந்து சுற்றித் திரியாதீர்கள் என்று அன்புடனும் தாழ்பணிந்தும் மன்றாடியும் கேட்டுக்கொண்டே இருக்கிறது அரசாங்கம். இந்த எச்சரிக்கை கூப்பாட்டை ஒரு சிலர் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக விட்டுவிடுகின்றனர். தாங்கள் விபரீதத்துடன் விளையாடுகிறோம் என்பது - அவரவருக்கு கரோனா தொற்று வந்தால்தான் தெரியும். இந்நிலையில் - திருநீர்மலைப் பகுதியில் ’’இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீஸார் அடிக்கிறார்கள்... மடக்கிப் பிடித்து வாகனத்தை பறித்துக்கொள்கிறார்கள்... அதனால் நாங்கள் உயிருள்ள இந்த நாலு கால் வாகனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இப்ப என்னப் பண்ணுவீங்க... இப்ப என்னப் பண்ணுவீங்க'’ என்று எள்ளல் துள்ளலோடு வீதிவலம் வந்த இந்த உற்சாகர்களை என்ன சொல்வது? என்ன செய்வது? படம்: எம்.முத்து கணேஷ்

4 / 10

சுற்றாதே... சுற்றாதே! கரோனா தொற்றுப் பரவலை தடுக்க - பல்வேறு எச்சரிக்கைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகிறது அரசு. இந்த எச்சரிக்கைகளுக்கு செவிமடுத்து - பலர் கட்டுப்பாட்டுடன் வீடடங்கி இருந்தாலும், ஒரு சிலர் கவலையின்றி சுற்றித் திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நேற்று ஊரடங்கை மதிக்காமல் - சுற்றித் திரிந்தோரை மடக்கிப் பிடித்த போலீஸார், அவர்களுக்கு ’ஆணழகன்’ என்ற பட்டம் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். -படம்: எஸ்.குருபிரசாத்

5 / 10

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பறிசோதனைக்கு என்றே சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு, பரிசோதனை நடைபெற்ற வருகிறது. இங்கே கரோனா அறிகுறியுடன் வரும் நபரை பரிசோதனை செய்வதற்காக - கண்ணாடி அறை ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் மருத்துவர்கள் கையுறை அணிந்தபடி பரிசோதனை மேற்கொள்வர். இந்நிலையில் நேற்று அந்தக் கண்ணாடி அறைக்குள் மருத்துவர்கள் அணிய வேண்டிய கையுறைகள் கிழிந்து தொங்குவதையும், அதையும்கூட மாற்றாமல் மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபடுவதையும் காண முடிந்தது. இதனால் நோய் தொற்று மருத்துவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. -படம். எம்.சாம்ராஜ்

6 / 10

வனத்துறையின் பச்சைய பாசம்! திருமங்கலம் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டு, அதைச் சுற்றிலும் வேலி அமைத்து நீரூற்றி பராமரித்து வருகின்றனர். இந்த மரக்கன்றுகளைச் சுற்றிலும் தற்போது ஆள் உயரத்துக்கு கோரைப் புற்கள் வளர்ந்து புதராக மண்டியுள்ளது. இந்நிலையில் - அப்பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் சிலர் தங்கள் நிலப்பகுதி புதர்களை அழிப்பதற்காக வைக்கும் தீயானது... வனத்துறையினர் பராமரிக்கும் மரக்கன்று பகுதிக்கும் பரவி...மரக்கன்றுகளை கருகச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தங்கள் பராமரிப்பில் உள்ள மரக்கன்றுகளைப் பாதுகாக்க - வனத்துறையினர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி கவனித்து வருகின்றனர். - தகவல் மற்றும் படம்; க.ஸ்ரீபரத்

7 / 10

புது வெய்யில் மழை இங்கு பொழிகின்றது! இது கோடைக்காலம். நாளுக்கு நாள் வெப்ப நிலை எகிறிக்கொண்டே போகிறது. எங்கும் வெய்யிலின் அதிகாரப் பரவல். ’புது வெய்யில் மழை இங்கு பொழிகின்றது... மனம் குளிரான இடம் தேடி அலைகிறது’ எனப் பாடியபடி குளிரான நிலப்பகுதியைத் தேடிச் சென்று அடைக்கலம் புகவும் கரோனா அச்சம் தடுக்கிறது. நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மனிதர்களால் என்னதான் செய்ய முடியும்?! கத்திரி வெயில் நாளை தொடங்கவுள்ள நிலையில் - பல இடங்களில் வெய்யிலின் உக்கிரம் செஞ்சுரியை தாண்ட ஆரம்பித்துவிட்டது. இன்று காலையில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வெயிலுக்கு அச்சாரமாக... கானல் நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள். -படம்: எம்.முத்துகணேஷ்

8 / 10

கெண்ட மீனு இருக்குங்கிறான்.. கெழுத்தி மீனு இருக்குங்கிறான்.... கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் இதே நாட்களில் மீன்பிடித் தடைக்காலமும் நீடித்து வருகிறது. எனவே, மீன் அங்காடிகளுக்கும் சிறு சிறு மீன் கடைகளுக்கும் கடல் மீன்களின் வரத்து குறைந்துபோய்விட்டது. இதையடுத்து.. ரோகு, கட்லா, கெண்டை, ஜிலேபி கெண்டை, வளர்ப்பு எறா, தேலி, குறவை, விரால் போன்ற ஏரி மற்றும் குளத்து மீன்களுக்கு பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. புதுச்சேரி வில்லியனுார் சங்கராபரணி ஆற்றங்கரையில் இன்று அதிகாலையிலேயே இந்த வகை மீன்கள் விற்பனைக்கு கடைவிரிக்கப்பட்டிருந்தன. தகவல் மற்றும் படம்: எம்.சாம்ராஜ்

9 / 10

மலர் மழையை எதிர்பார்த்து மருத்துவர்கள் ஏமாற்றம்! கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகத்தில் பல மருத்துவமனைகளின் மீது நேற்று இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மலர் மழை தூவப்பட்டது. இந்த மலர் மழையில் நனைய விரும்பிய கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் காத்திருந்தனர். ஆனால் இம்மருத்துவமனை மீது மலர் தூவ விமானங்கள் வராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம்: ஜெ.மனோகரன்

10 / 10

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் , சுகாதார ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் நன்றி செலுத்தும் வகையிலும் கடலோர காவல்படை கப்பலில் இருந்து புதுச்சேரி கடற்கரையில் வாணவேடிக்கை நிகழ்த்தி ஒளி மழை பொழியப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x