

காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை | அதிமுக - கே.பழனி | நாதக - சிந்து | தவெக - தென்னரசு
தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 29-வது இடத்தைப் பிடித்துள்ளது ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி. ஆன்மிகச் சிறப்பும், உலகத்தரம் வாய்ந்த தொழில் வளர்ச்சியும் ஒருங்கே அமைந்த ஒரு தனித்துவமான தொகுதியாக இந்தத் தொகுதி திகழ்கிறது.
வைணவத் தத்துவஞானி ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமி இது. இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் உலகப் புகழ் பெற்றது. அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவிடம் இங்குதான் அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக, சென்னைக்கு மிக அருகாமையில் இருப்பதால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ‘தெற்காசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓரகடம் சிப்காட் வளாகங்கள் இத்தொகுதியின் அங்கமாக உள்ளன.
1952 முதல் தேர்தல்களைச் சந்தித்து வரும் இத்தொகுதியில், காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை, அதிமுக வேட்பாளர் கே.பழனியை 10,879 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்:
தொழிற்பேட்டைகள் நிறைந்த பகுதி என்பதால், இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளே முதன்மையானவையாக உள்ளன. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குப் பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் சீரான குடிநீர் விநியோகம் பெரும் சவாலாக உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு சிப்காட் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. இதேபோல், தொழிற்சாலைகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவசாயிகள் மத்தியில் வலுவாக உள்ளன.
வேட்பாளர்கள் பின்புலம்:
திமுக கூட்டணியில் தற்போதைய எம்எல்ஏ-வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுகிறார். ஆளுங்கட்சியின் பலம் மற்றும் தொகுதி முழுவதும் உள்ள தனிப்பட்ட அறிமுகம் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது.
அதேபோல், அதிமுக கூட்டணியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி களம் காண்கிறார். இந்தத் தொகுதியில் அதிமுகவுக்கு பாரம்பரிய வாக்கு வங்கி உள்ளது. கடந்த முறை இழந்த வெற்றியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பழனி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் சிந்து போட்டியிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புதிதாக களம் கண்டுள்ள தவெக சார்பில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்கள் இளைஞர்களின் ஆதரவு மற்றும் விஜய்யின் செல்வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.
இந்தத் தொகுதியில் 4 பேர் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆனாலும், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, வன்னியர் மற்றும் தலித் மக்கள் வாக்குகள் இந்தத் தொகுதியில் அதிகம் உள்ளன. இவர்கள் வாக்கும், தொழிலாளர்கள் வாக்கும் யாருக்கு அதிகம் விழுகிறதோ அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.