அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 21வதாக இடம் பெற்றுள்ள அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதி அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள், கட்டிடக் கலை வல்லுநர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என விஐபி-க்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது.
அண்ணாநகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு, சாந்தி காலனி, புது ஆவடி சாலை, ஷெனாய் நகர், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, சூளைமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய முக்கிய வர்த்தகப் பகுதியாகவும் இந்த தொகுதி விளங்குகிறது.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்: வில்லிவாக்கம் தொகுதியில் அண்ணாநகர் டவர் பூங்கா, ஐயப்பன் கோயில், தேவாலயங்கள், மசூதி, மால்கள், அண்ணாநகர் ஆர்ச், வணிக நிறுவனங்கள், இரவு நேர ஷாப்பிங் வீதிகள், போகன் வில்லா பூங்கா போன்றவை முக்கிய அடையாளங்களாக உள்ளன.
அனைத்து சாதியினரும் பரவலாக உள்ள இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் இத்தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது. இருந்தபோதும் மெட்ரோ ரயில் சேவை இத்தொகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.
மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்தின் பெரும் பகுதி அண்ணாநகர் தொகுதிக்குள் தான் வருகிறது. நெல்சன் மாணிக்கம் சாலையில் இரட்டை அடுக்கு பாலம் கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும், மழைநீர் வடிகால் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளர்கள் பின்புலம்: இந்த தொகுதி திமுகவின் கோட்டையாகவும், விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகவும் திகழ்ந்து வருகிறது. கடந்த 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா வெற்றி பெற்று திமுகவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார். அதன் பிறகு, 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.கே.மோகன், எதிர்த்துப் போட்டியிட்ட கோகுல இந்திராவை விட 1,687 வாக்குகள் கூடுதலாக பெற்று மீண்டும் தொகுதியை திமுக வசமாக்கினார்.
2021 தேர்தலில் மீண்டும் திமுகவின் எம்.கே.மோகன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கோகுல இந்திராவை 27,445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-வது முறையாக வெற்றி பெற்றார். இந்த முறையும் இந்த தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.
அதிமுக சார்பில் மீண்டும் 4-வது முறையாக வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான கோகுல இந்திரா களமிறங்கி உள்ள நிலையில், திமுக சார்பில் எம்.கே.மோகனுக்குப் பதிலாக திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவரும், துணை முதல்வர் உதயநிதியின் தீவிர ஆதரவாளருமான நே.சிற்றரசு முதன்முறையாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இம்முறையும் இத்தொகுதியில் வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்போடு திமுக வேட்பாளரான நே.சிற்றரசு, தோழமை கட்சியினருடன் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அதேபோல், கோகுல இந்திராவும், 2011 தேர்தல் மேஜிக் இம்முறையும் தனக்கு வேலை செய்யும் என்ற நம்பிக்கையுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோகுல இந்திராவின் மகள்களான டாக்டர் பூர்ணிமா மற்றும் நிவேதா ஆகியோரும் தங்களது தாயாருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இரு பிரதான கட்சிகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில், இந்த தொகுதியில் தவெக சார்பில் ஆஸ்திரேலியாவில் முதுகலை பொறியாளர் பட்டம் பெற்ற வி.கே.ராம்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில், உயர் நீதிமன்ற வழக்கறிஞரான எஸ்.சங்கரும் தொகுதியில் பம்பரமாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இம்முறை அண்ணாநகர் தொகுதியில் அதிக வாக்குகளை அள்ளப் போகும் வேட்பாளர் யார் என்பதுதான் அத்தொகுதி வாக்காளர்கள் மனதில் தற்போது எழுந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வியாகும்.