திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதான விரைவுப் பார்வை
தமிழகத்தில் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தாலும், அது தனிப்பெரும்பான்மை அல்லாத திமுக கூட்டணி ஆட்சியாகவே இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. ஆளும் கட்சியான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக என 4 முனைப் போட்டி நிலவியது .
இந்த நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை, பல்வேறு நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின்படி திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்என் கணிப்பில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், இந்தியா டுடே முடிவுகளில் தவெக முன்னிலை வகிக்கும் என்றும், காமாக்யா கணிப்பில் தொங்கு சட்டப் பேரவைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி தேவை எனும் நிலையில், திமுக கூட்டணி 125 முதல் 145 வரையிலான தொகுதிகளை வெல்லும் என என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் தெரிவித்துள்ளது. 92 முதல் 110 வரை வெல்லும் என இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியாவும், 75 முதல் 95 வரை வெல்லும் என டைம்ஸ் நவ் - ஜேவிசியும், 125 முதல் 145 வரை வெல்லும் என ரிபப்ளிக் டிவி + பி-மார்க்கும், 122 முதல் 132 வரை வெல்லும் என ரிபப்ளிக் டிவி - மாட்ரிஸும் தெரிவித்துள்ளன.
அதேபோல், திமுக கூட்டணி 145 முதல் 160 இடங்கள் வரை வெல்லும் என சாணக்யா - ஸ்டார்டஜிஸும், 89 முதல் 101 வரை வெல்லும் என ஸ்பைக் மீடியாவும், 78 முதல் 95 வரை வெல்லும் என காமாக்யாவும், 103 முதல் 113 வரை வெல்லும் என சிஎன்பிசி டிவி 18 நிறுவனமும் கணித்துள்ளன.
இவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின் முடிவுகள், திமுக கூட்டணி குறைந்தபட்சம் 120 தொகுதிகளையும், அதிகபட்சம் சராசரியாக 140 இடங்களையும் வெல்லும் என கணித்துள்ளதால், இந்தக் கணிப்புகள் அப்படியே மே 4-ல் வெளிவரும் தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போகும் பட்சத்தில், தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் துணையுடன் திமுக கூட்டணி அரசு அமைவதற்கான சாத்தியம் அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.
அவ்வாறு, தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவும் பட்சத்தில், அதற்கு விஜய்யின் தவெக பிரிக்கக் கூடிய வாக்குகளே முதன்மைக் காரணியாக இருக்கக் கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
திமுக வாக்குகளை சற்று வசப்படுத்தியதால், அக்கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலும், அதிமுக வாக்குகளை வசப்படுத்தியதால் அக்கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முடியாத சூழலுக்கும் விஜய் வித்திட்டுள்ளார் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லக் கூடிய சேதியாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கருத்துக் கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்தேறுவதும் உண்டு, எதிர்மறையாக நடப்பதும் உண்டும். அதனாலேயே எப்போதும் அவை டிஸ்க்ளெயமருடன் வரும். இந்த முறை கூடவே கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் சில ‘ஹெல்த் அலர்ட்’ என்று குறிப்பிட்டு இவை கணிப்புகள் மட்டுமே உறுதியான முடிவு மே.4-ல் தெரியவரும் என்றும் கூறியிருக்கின்றன.
விஜய்யின் தவெக தேர்தலில் தனித்து நின்று, பரிச்சயம் இல்லாத முகங்களை வேட்பாளர்களாக இறக்கி தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுகவுக்கு இத்தகைய வலுவான போட்டியை ஏற்படுத்தியிருப்பதே அதன் வெற்றிதான் என்று சொல்கின்றனர் நிபுணர்கள். ஆரம்பமே முதலே தெளிவான திமுக எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கையில் எடுத்த விஜய் கூடவே தன்னை எம்ஜிஆர் போல கட்டமைத்த பிம்பம் தான் பெண்கள், மூதாட்டிகள் வாக்குகளையும் அவருக்கு மடைமாற்றியிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜய் என்றால் அது நிச்சயம் மிகைமொழியல்ல என்றும் கூறுகின்றனர். விஜய் எஃபெக்ட் காரணமாகத் தான் தமிழகத்துக்கான கருத்துக் கணிப்பை துல்லியமாக இப்படித்தான் என்று சொல்ல முடியாமல் பல்வேறு கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் மாறுபட்ட கணிப்புகளை வெளியிட்டிருப்பதாக சுட்டிக்காட்டும் நிபுணர்கள், மே 4 ரிசல்ட் வரை காத்திருப்போம் என மக்கள் தீர்ப்பை பிரதானப்படுத்தி நழுவுகின்றனர்.