

கோடை வெயில் கொளுத்தும் சித்திரையில் மதுரை மாநகரம் மட்டும் 15 நாட்கள் குதூகலித்துக் கொண்டிருக்கும். காரணம், மதுரை சித்திரைத் திருவிழா என்பது ஊர் அறிந்த விஷயமே. ஆனால், ஊருக்கு ஊர் இருப்பதுபோல் தீம் பார்க்குகளும், ஷாப்பிங் மால்களும், மல்டிப்ளெக்ஸ்களும், கேமிங் மையங்களும், உணவு, உடை சார்ந்த பல்வேறு சர்வதேச பிராண்ட் கடைகளும், ஏன் ஸ்பா சென்டர்களும், இன்னும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் மதுரையிலும் கூட பெருகிவிட்ட நிலையிலும், அங்கு சித்திரைத் திருவிழாவின் மவுசு சற்றும் குறையவில்லை.
அது ஏன் என்பது மதுரைக்காரர்களுக்கு சொந்தமான அனுபவம். அதைப் பற்றி விவரிக்கச் சொன்னால், மீம் கன்டென்ட்களில் சொல்வதுபோல், “அது ஒரு எமோஷன் சார்” என்பார்கள் மதுரைக்காரர்கள்.
உண்மையில் மதுரைவாசிகளுக்கும் சித்திரைத் திருவிழாவுக்குமான பிணைப்பு பக்தி உணர்வையும் கடந்து பல்வேறு மகிழ் உணர்வுகளையும் தேக்கி வைக்கும் நினைவகமாகவே அவர்களின் மூளையை மாற்றிவிடுகிறது.
குடும்பங்களுக்குள் நிலவிய பகைமை மறைவதற்கும், குடும்பங்களின் கோடை விடுமுறை கூடுகைகளுக்கும், சைவம் - வைணவம் பேதம் கடந்து எல்லோரும் கூடி கும்பிடவும், மதங்கள் கடந்து மனிதம் செழிக்கவும் ஒரு திருவிழா இன்றளவும் வலுவான தளமாக இருக்கிறது என்றால், அது மதுரை சித்திரைத் திருவிழாகத்தான் இருக்கமுடியும்.
சித்திரைத் திருவிழா மட்டுமல்ல, ஆண்டின் 365 நாட்களுமே மதுரையின் ஏதோ ஒரு கோயிலில் ஏதோ ஒரு உற்சவம் நடந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான் அது திருவிழாக்களின் தலைநகராகவும் இருக்கிறது.
திருவிழாக்களின் தலைநகர் மதுரை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் சித்திரவீதிக்காரனிடம் பேசியபோது, மதுரையின் உயிர்நாடியான சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு ருசிகரத் தகவல்களைப் பகிர்ந்தார். அவை இங்கே...
“மதுரை சித்திரைத் திருவிழா, என்னைப் பொறுத்தவரை திருவிழாக்களின் திருவிழா. இந்தியா முழுவதுமே நிறைய கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் தென்னிந்தியாவில் மதுரையில் கொண்டாடப்படும் இந்த சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாக இருக்கக் காரணம், அதனை ஒட்டி நடைபெறும் திரு நிகழ்ச்சிகளே.
உதாரணத்துக்கு மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை எடுத்துக் கொள்வோம். எல்லா கோயில்களிலுமே திருக்கல்யாணமும், அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறுவது மரபே. ஆனால் மதுரையில் மட்டும்தான் மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு முதல் நாளன்று, மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறும். ஒரு தெய்வத்துக்கு முடிசூட்டு விழா நடைபெறுவது மதுரையில் மட்டும்தான்.
மீனாட்சி மதுரை மக்களுக்கு தெய்வம் மட்டுமல்ல. அவர்களுக்கு மீனாட்சியே ஆளும் அரசி. தங்களை ஆளும் அரசி அன்றைய தினம் முடிசூடி வருவதை மதுரை மக்கள் அனைவரும் பெருமிதம் பொங்க வரவேற்பார்கள். தனித்துவம் கொண்ட மீனாட்சி மதுரையின் மங்கையர்கரசி என்ற பெயர் தாங்கி நிற்கிறாள். மாதர் மற்றுமல்ல, பாலினம் கடந்து எல்லோரும் கொண்டாடும் வீரத்தின் உருவமாக மீனாட்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பட்டாபிஷேகத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் திக்விஜயம் நிகழ்ச்சியும் தனிச்சிறப்பானது. மதுரையின் பட்டத்தரசியாக முடிசூட்டிக்கொண்ட உடன் எட்டு திக்கும் வென்று வர மீனாட்சி அம்மன் திக் விஜயம் செல்வதைக் காணவே ஏராளமான பக்தர்கள் நகர வீதிகளில் காத்துக் கொண்டிருப்பார்கள். கயிலாயம் செல்கையில் மீனாட்சி சிவனை வெல்லாவிட்டாலும், சிவன் மங்கையர்க்கரசி மீனாட்சியுடன் மதுரை வந்து சோமசுந்தரராக ஓர் அமைச்சரைப் போல் பட்டத்தரசிக்கு துணையாகிறார்.
இப்படியாக மதுரை சித்திரைத் திருவிழா என்பது கதை சொல்லலோடு பிணைந்திருப்பது ஒவ்வோர் ஆண்டும் அதை புதிதாய் அறிபவர்களையும், ஏற்கெனவே அறிந்திருந்தாலும் அதைக் காட்சியாய் மீண்டும் காணும் இறையனுபவமும் சித்திரைத் திருவிழா கூட்டத்தை குறையாமல் வைத்துள்ளது எனலாம்” என்கிறார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம், மதுரை சித்திரைத் திருவிழா பற்றி பல்வேறு சுவாரஸ்யக் குறிப்புகளை கூறியிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியைப் போல் அழகரும் ஒரு ஹைலைட் தான். ஆற்றுக்கு இந்தப் புறம் மீனாட்சியை கொண்டாடிக் கொண்டிருக்கையில், அந்தப் புறத்திலிருந்து அழகர் புறப்பட்டு வருவார். அழகர் வரும் வழியெல்லாம் மக்கள்தான். அவரை வரவேற்க கருப்புசாமி வேடமிட்டு திரிப்பந்தம் ஏந்தி வரும் பக்தர்களைக் காணலாம். பதினெட்டாம்படி கருப்புசாமி, ராக்காயி என அழகர் திருவிழாவோடு சிறுதெய்வ வழிபாடுகளும் களைகட்டும். அழகருக்கு மொட்டை அடிக்கும் நிகழ்வுகளுக்கும் குறைவிருக்காது.
அழகர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்க தங்கக் குதிரையில் சித்திரை சூரியனா அல்லது நானா என்று தகத்தகாய கோலத்தில் வரும் அவரை பக்தர்கள் செம்பு நிறைய சர்க்கரை நிரப்பி அதன் மீது சூடம் ஏற்றி வரவேற்பர். இதுபோன்ற நேர்த்திக் கடன்களை செலுத்த வெளிநாட்டில் இருந்தாலும் ஆஜராகும் பக்தர்கள் இன்றும் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறார்கள்.
சித்திரைத் திருவிழா நாட்கள் முழுவதும் வீட்டில் உலை வைக்க வேண்டாம். காலையில் சாமி பார்க்க கிளம்பிச் சென்றால் இரவு வரை சிற்றுண்டி, அன்னதானம், பலகாரம், பானகம், ரோஸ்மில்க், பொங்கல், வடை என வகை வகையான பிரசாதங்கள் கிட்டும். கூடவே வேண்டுதலுக்கு ஏற்ப விசிறி, மாங்கல்யம், வளையல், மஞ்சள் பை, பிக் ஷாப்பர், குங்கும டப்பா என குட்டி குட்டி பரிசுப் பொருட்களும் கிடைக்கும்.
இவையெல்லாம் தாண்டி “சைவமும், வைணவமும், நாட்டார் தெய்வங்களும் கொண்டாடப்படும் மதுரை சித்திரைத் திருவிழா தமிழ் மண்ணின் ஆன்மிக செழுமையை உயர்த்திப் பிடிக்கும் விழா,” என்கிறார் எழுத்தாளர் சித்திரைவீதிக்காரன்.
மேலும் அவர், சித்திரைத் திருவிழாவின் கொண்டாட்ட சிறப்பின் இன்னொரு முக்கிய விஷயமாக பக்தர்கள் வேடம் கட்டிக் கொள்வதைக் குறிப்பிடுகிறார்.
எழுத்தாளர் சித்திரவீதிக்காரன்
“முருகன், மீனாட்சி, பதினெட்டாம்படி கருப்பசாமி வேடங்களை தங்கள் குழந்தைகளுக்கு தரித்து கொண்டாடும் பக்தர்கள் அதற்கான விரதத்தை, அலங்கார திட்டமிடலையும் ஒரு மாதத்துக்கு முன்னரே தொடங்கி விடுகின்றனர். எப்ப வரும் எப்ப வரும் என்று காத்திருந்து கொண்டாட்ட களம் காணும் மதுரை மக்கள் தாங்கள் தேக்கிவைத்த பரவசத்தை 15 நாள் திருவிழாவிலும் கொட்டித் தீர்க்கிறார்கள்.
வைகையில் கள்ளழகர் எழுந்தருள்கையில் அதிகலையிலேயே திரளும் பக்தர்கள் கூட்டம் அந்தப் பரவசத்தின் உச்சம். அழகரை வரவேற்பதுபோல் அவரை திருப்பி அனுப்பிவைப்பது வரை பக்தர்கள் ஆராவாரம் இம்மியளவும் குறையாது” என்கிறார்.
“மதங்கள் கடந்து கொண்டாடப்படும் திருவிழா மதுரை சித்திரைத் திருவிழா. மீனாட்சி, முருகன், கருப்பசாமி என வேடம் தரித்து வரும் குழந்தைகளை இஸ்லாமியர்கள் வரவேற்றுக் கொண்டாடுவதும் மதுரையில்தான் காணக் கிடைக்கும். வில்லாபுரத்தில் அழகரை வரவேற்க இஸ்லாமியர்கள் காத்திருப்பது மத நல்லிணக்கத்தின் உச்சம்.
பொதுவாகவே, மதுரையில் கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு விழாவையும், செயின்ட் மேரி தேவாலய தேர் பவனியையும், புதூர் லூர்து மேரி தேர் பவனியையும் இந்துக்கள் கொண்டாடுவது ஆண்டாண்டு காலமாகவே நடைமுறையில் இருக்கிறது. திருவிழா என்றால் சேர்ந்து கொண்டாடித் தீர்ப்போம் என்ற மக்களின் மனநிலை தான் மதுரை சித்திரைத் திருவிழாவை திருவிழாக்களின் திருவிழாவாக இன்றளவும் வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.” என்றும் அவர் கூறுகிறார்.
பள்ளிக்கூடம் முடிந்து கோடை விடுமுறையில் குழந்தைகளின் உடலும், உள்ளமும் புதுப்பொலிவு பெறுவது போல் மதுரைக் காரர்களுக்கு சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் புத்துயிர் பாய்ச்சுகிறது. புதிய நம்பிக்கையோடு வாழ்க்கையை நகர்த்த அன்மிகமும், அத்துடன் இணைந்து கொள்ளும் கொண்டாட்டமும் அவர்களுக்கு உறுதுணையாகிறது.