விண்வெளியில் ஆயுதங்களை குவிக்கும் அமெரிக்கா!
எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க விண்வெளியிலும் ஆயுதங்களை நிலைநிறுத்தி உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எதிர்கால போர்கள் விண்வெளியை மையமாக கொண்டே நடைபெறும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி படை தொடங்கப்பட்டது. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் வெவ்வேறு பெயர்களில் விண்வெளி படைகளை தொடங்கி உள்ளன.
இந்த சூழலில் அமெரிக்க விமானப் படை செயலாளர் டிராய் மெய்ங்க், மேரிலேண்ட் மாகாணம், நேஷனல் ஹார்பர் பகுதியில் நேற்று முன்தினம் பேசும்போது, “விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்க விண்வெளி படை சார்பில் விண்வெளியில் ஆயுதங்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.
அமெரிக்க விண்வெளி படையின் ஓய்வுபெற்ற கர்னல் சார்லஸ் கால்பிரெத் கூறியதாவது: அமெரிக்கா் - ஈரா்ன் போரில் ஈரானுக்கு சீனா மறைமுகமாக உதவி செய்து வருகிறது. அமெரிக்க விமானப் படைத் தளங்கள் குறித்த செயற்கைக்கோள் படங்கள், தகவல்களை ஈரான் ராணுவத்துக்கு சீனா வழங்கி வருகிறது. இதை முறியடிக்க எதிரிகளின் செயற்கைக்கோள்களை லேசர், ஜாமர் மூலம் செயலிழக்க செய்ய அமெரிக்க விண்வெளிப் படை நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சீனா, ரஷ்யா அதிருப்தி
சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறும்போது, “விண்வெளியை போர்க்களமாக மாற்றக்கூடாது. அமெரிக்காவின் நடவடிக்கையால் விண்வெளியில் ஆயுதங்கள் குவிக்கப்படும் அபாயம் உருவாகும்” என்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, “விண்வெளியில் எந்தவொரு ஆயுதமும் இருக்கக்கூடாது. இது தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்த ரஷ்யா தீவிர முயற்சி செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பூமியில் இருந்து ஏவுகணைகள் மூலம் செயற்கைக்கோள்களை தகர்க்கும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவிடம் உள்ளன. கடந்த 2024-ம் ஆண்டில் ரஷ்யாவின் சார்பில் இரு செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள், ஐரோப்பிய செயற்கைக்கோள்களின் தகவல் தொடர்புகளை முடக்கின.
மேலும் சீன விஞ்ஞானிகள், டிபிஜி 1000சிஎஸ் என்ற அதிநவீன மைக்ரோவேவ் ஆயுதத்தை உருவாக்கி உள்ளனர். இதை செயற்கைக்கோளில் பொருத்தி விண்வெளியில் நிலைநிறுத்த முடியும். இதன்மூலம் விண்வெளியில் சுற்றும் எதிரிகளின் செயற்கைக்கோள்களை அழிக்க முடியும். குறிப்பாக அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை முடக்க மைக்ரோவேவ் ஆயுதத்தை சீனா பயன்படுத்தக்கூடும்.
இதைத் தொடர்ந்தே அமெரிக்காவும் விண்வெளியில் ஆயுதங்களை குவித்து வருகிறது. இதை முதல்முறையாக அமெரிக்க ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் எதிர்விளைவாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்வெளியில் ஆயுதங்களைக் குவிக்கக்கூடும். இவ்வாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.