தாகத்தில் தவிக்கும் இலங்கை: 1.15 லட்சம் மக்களின் க(த)ண்ணீர் கதை!

தாகத்தில் தவிக்கும் இலங்கை: 1.15 லட்சம் மக்களின் க(த)ண்ணீர் கதை!
Updated on
3 min read

இயற்கையின் சமநிலை குலையும்போது, அதன் முதல் பலியே மனித குலம்தான் என்பதற்கு இலங்கையில் நிலவும் தற்போதைய வறட்சியே சாட்சி. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘சூப்பர் எல்-நினோ’ காலநிலை மாற்றம், பல ஆயிரம் மைல்கள் தள்ளியிருக்கும் ஒரு குட்டித் தீவில் வாழும் மக்களைத் தண்ணீருக்கு தவிக்க விடும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு சொட்டுத் தண்ணீருக்காக மைல் கணக்கில் நடக்கும் கால்கள், வறண்டுபோன குளத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடும் விவசாயிகள், பிளாஸ்டிக் குடங்களோடு நீருக்காக வரிசையில் காத்திருக்கும் பெண்கள் என இலங்கையின் 7 மாவட்டங்களில் 1.15 லட்சம் மக்கள் குடிக்க நீரின்றி வறட்சியின் கொடும் உச்சத்தில் சிக்கியிருக்கிறார்கள். அந்நாட்டின் அமைதியும், பொருளாதாரமும் மீண்டும் ஒரு கடுமையான சோதனையைச் சந்தித்துள்ளன.

நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், குடிக்க சொட்டு நீரின்றி ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தவிக்கிறார்கள். இந்த விசித்திரமான முரண்பாடுதான் இலங்கையை இன்று உலுக்குகிறது.

வடமத்திய மாகாணம் முதல் கிழக்குக் கடலோரப் பகுதிகள் வரை, நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கருகும் பயிர்களையும் வறண்டு போன கிணறுகளையும் கண்டு கண்ணீர் வடிக்கும் இலங்கை மக்களின் துயரம், குடிநீருக்காக மட்டுமல்லாமல் வாழ்வாதாரப் போராட்டமாகவும் மாறியுள்ளது.

இலங்கைக்கு ஏன் இந்த நிலைமை?

‘எல்-நினோ’ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீர், இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பமடையும் ஓர் உலகளாவிய காலநிலை நிகழ்வாகும். 2 டிகிரிக்கு மேல் வெப்பமடையும் பகுதிகளில் ‘சூப்பர் எல்-நினோ' தாக்கமும் ஏற்படும். இந்த நிகழ்வு உலக அளவில் காற்று, மழைப்பொழிவு மற்றும் ஒட்டுமொத்த காலநிலை அமைப்பையே தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்டது.

எல்-நினோ தாக்கம் தெற்காசியப் பகுதியில் பருவக்காற்றின் திசையை மாற்றி, மேகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் ஈரப்பதமற்ற வறண்ட காற்று வீசி, இயல்பான மழைப் பொழிவை முற்றிலுமாகத் தடுக்கிறது.

இலங்கைக்கு அதிக மழை பொழிவைக் கொடுக்கும் தென்மேற்குப் பருவமழை, எல்-நினோவால் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை குறைவாகவே பெய்துள்ளது. சுட்டெரிக்கும் வெப்பத்தால் அணைகள் மற்றும் குளங்களிலில் இருந்து நீர் வேகமாக ஆவியாகி, நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

இலங்கையின் 6 மாகாணங்களைச் சேர்ந்த 7 பிரதான மாவட்டங்கள் மிக மோசமான நேரடிக் குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளன. அனுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி பிரகித் தனசூர்யா கூறுகையில் “சுட்டெரிக்கும் வெப்பம், பொய்த்துப் போன மழைப்பொழிவு ஆகியவற்றால் 25 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் கடும் குடிநீர் பஞ்சத்தைச் சந்தித்து வருகிறார்கள். தேசிய பேரிடர் மையத் தரவுகளின்படி, 28 மண்டலங்களில் 30,011 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 94 ஆயிரம் மக்களுக்குக லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள எருவெவ நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 1,000 ஏக்கர் அடியாக குறைந்துவிட்டது. மாத்தளை, நந்திக்கடல் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

வனப்பகுதியில் வறட்சியால் தாவரங்கள் கருகுவதால், விலங்குகளும் குடிக்க நீரின்றி மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் வருகின்றன. முல்லைத்தீவில் கடல்நீரும் நன்னீரும் கலந்ததால், ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

தென்னை, நெல், வாழை, கொய்யா உள்ளிட்ட விவசாயம் பாதிக்கப்பட்டு, நீரின்றி கருகுவதால் விவசாயிகள் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். தெற்காசிய நாடுகளிலேயே எல்-நினோவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறி வருகிறது. அங்கு ஏறக்குறைய 85 சதவீத மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?

கடும் வறட்சியைப் போக்க 72 ஆயிரம் பேருக்குத் தேவையான நீரை விநியோகம் செய்யும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மட்டும் இலங்கை அரசு உடனடியாக ரூ.480 கோடி ஒதுக்கியுள்ளது. இப்போதுள்ள நிலையில் இலங்கை அரசு குடிநீர் வழங்கலை மட்டுமே சரிசெய்து வருகிறது.

வனவிலங்கு பூங்கா மூடல்

இலங்கையில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பத்தால், புகழ்பெற்ற யால தேசிய வனவிலங்கு பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வன அதிகாரி சுஜீவாலா நிசாந்த கூறுகையில் “எங்களுக்கு இப்போது விலங்குகள் நலன்தான் முக்கியம். யால, வில்பத்து, குமணா, புந்தல ஆகிய வனவிலங்குப் பூங்காக்களில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் அனுமதி இல்லை. அக்டோபர் 15-ம் தேதி வரை பூங்கா மூடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

மழைப்பொழிவுக்கான வாய்ப்பு?

செப்டம்பர் மாதத்தின் பெரும்பகுதி வரை வறண்ட காலநிலையும் அதிக வெப்பமுமே தொடரும் என இலங்கை வானிலை மையம் கணித்துள்ளது. இலங்கை வானிலை மையத்தின் இயக்குநர் ஏ.எல்.கே.விஜிமனேகே கூறுகையில், “செப்டம்பர் மாத இறுதி வாரத்திலிருந்து மிதமான மழைப்பொழிவு தொடங்கக்கூடும். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையை சுட்டெறிக்கும் வெப்பமும், வறட்சியும், குடிநீர் பஞ்சமும் தற்காலிக இயற்கை சீற்றம் இல்லை. இது, உலகளாவிய காலநிலை மாற்றம் நமக்கு விடுத்துள்ள தீவிர எச்சரிக்கை மணி. அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை தீவு தேசத்துக்குத் தற்காலிக நிவாரணத்தைத் தரலாம்.

ஆனால், எதிர்காலத்தில் வரவிருக்கும் ‘எல்-நினோ’ போன்ற பேரழிவுகளில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால், நீர்நிலைகளைத் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்குதல் மற்றும் காடுகளைப் பாதுகாத்தல் போன்ற நீண்டகாலத் திட்டங்களை அரசு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த வேண்டும். இயற்கை அன்னைக்கு மனிதகுலம் தரும் மரியாதையே, எதிர்கால தலைமுறையின் தண்ணீர் தேவையைத் தீர்க்கும் ஒரே வழியாகும்.

தாகத்தில் தவிக்கும் இலங்கை: 1.15 லட்சம் மக்களின் க(த)ண்ணீர் கதை!
பிரதமர் மோடியின் ‘ராஜதந்திர’ சாதனைகள்: பிரிக்ஸ் 2026-ல் இந்தியா பெற்றது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in