சி.வி.சண்முகம் வசமுள்ள ஆப்ஷன்கள் என்னென்ன? - ஓர் உள்ளரசியல் பார்வை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியின் உத்தரவை மீறி, முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 6 எம்எல்ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் வகையில், 25 எம்எல்ஏக்களை வழி நடத்திய மயிலம் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்தை பொதுச் செயலாளர் பழனிசாமி ஓரங்கட்டியுள்ளார்.

புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் பதவியை ஏற்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மயிலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அசைவ விருந்து வழங்கிய சி.வி.சண்முகம், திண்டிவனத்தில் உள்ள வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தவெக கொடியுடன் வந்த காரில் இருந்த இறங்கிய ஒருவர், செல்போன் பேசிக்கொண்டு சி.வி.சண்முகம் வீட்டுக்குள் சென்றார். இந்த நபர், சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. பின்னர், கார் சென்றுவிட்டது. சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில், எதிர்கால அரசியலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து சி.வி.சண்முகம் பேசியதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்ததும் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த சி.வி.சண்முகம் கூறும்போது, “என்ன கருத்து, என்ன ஆலோசனை கூட்டம் என கேட்கிறீர்கள். நான் ஒரு வாரத்துக்கு பிறகு வரும்போது என்னுடன் இருப்பவர்கள் வந்து சந்திப்பார்கள், பேசுவார்கள்.

என்னுடைய முடிவு என்ன என்று கேட்கிறீர்கள். தவெகவுக்கு போவதெல்லாம் இல்லை... வேறு என்ன கேட்க வருகிறீர்கள்? அதிமுகவில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். அது எனக்கே தெரியவில்லை. பழனிசாமியிடம் கேட்டு சொல்லுங்கள்.

எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்தது குறித்து எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தவில்லை. எந்தச் சிறப்பு தகவலும் இல்லை” என்று முடித்துக் கொண்டார் சி.வி.சண்முகம்.

தவெகவில் இப்போது 6 அதிமுக எம்எல்ஏக்கள் ஐக்கியமாக பிள்ளையார் சுழி போட்டதே சி.வி.சண்முகம்தான். ஆனால், அவர் இப்போது வரை தவெக பக்கம் செல்லும் முடிவை எடுக்கவில்லை. ஏனென்றால், இப்போது தவெகவில் ஐக்கியமாகும் அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வர் விஜய்யை கூட பார்க்க முடிவதில்லை. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தான் கட்சியில் இணைகின்றனர்.

எனவே, தவெகவுக்கு போனால் மரியாதை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில்தான் சி.வி.சண்முகம் அமைதியாகிவிட்டார் என சொல்லப்படுகிறது.

<div class="paragraphs"><p>திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டுக்கு தவெக கொடியுடன் வந்த கார்.</p></div>

திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டுக்கு தவெக கொடியுடன் வந்த கார்.

விரைவில், அதிமுகவில் பெரிய பூகம்பம் வெடிக்கும் என வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கணக்குப் போடுகின்றனர். அப்படி அதிமுகவில் பூகம்பம் வெடிக்கும்போது, முக்கிய பொறுப்பு தங்களிடம் வரும் என்றும் கருதுகின்றனர். அதற்கான காய்நகர்த்தல்களை சி.வி.சண்முகம் வேகமாக செய்வதாக சொல்லப்படுகிறது.

சி.வி.சண்முகம் பக்கம் இப்போது இரு வாய்ப்புகள்தான் உள்ளது. ஒன்று அதிமுகவில் மீண்டும் பவர்ஃபுல் பொறுப்பை பெறுவது அல்லது தவெகவில் இணைவது. இது இரண்டில் எதை அவர் தேர்ந்தெடுப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

சி.வி.சண்முகம் வசமுள்ள ஆப்ஷன்கள் என்னென்ன? - ஓர் உள்ளரசியல் பார்வை
தவெகவிடம் கூட்டணிக் கட்சிகளை திமுக பறிகொடுத்தது எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in