

தவெக ஆட்சி அமைந்த பின்னர் தமிழகத்தின் அரசியல் களமே முற்று முழுதாக மாறிப்போய் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போது கொத்தாக தவெக பக்கம் மாறியுள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளை பறிகொடுத்ததன் பின்புலத்தை கவனிப்போம்.
கருணாநிதி, எம்ஜிஆர் - ஜெயலலிதா காலங்களில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்திக்கும். அவ்வப்போது மூன்றாவது அணி தோன்றினாலும் அவை பெரிதாக மக்களிடம் எடுபட்டதில்லை. இதனால், இந்த இரு பிரதான கட்சிகளிடமே கூட்டணி கட்சிகள் நம்பிக்கையோடு கைகோப்பது வழக்கம்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்தது. இதன் காரணமாக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் அதிமுக என்ற ஆப்ஷனையே முற்றிலும் தவிர்த்தன. பழனிசாமியின் கைகளில் அதிமுக வந்த பின்னர், இந்தக் கட்சிகள் ஒரேயடியாக திமுக கூட்டணியில் ஐக்கியமாகின. எத்தனை விமர்சனங்கள் வந்தபோதும், கடந்த 10 ஆண்டுகளாக இக்கட்சிகள் திமுக கூட்டணியில் விடாமல் தொடர்ந்து வந்தன.
இரு சட்டப்பேரவைத் தேர்தல்கள், இரு மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களை ஒன்றாக சந்தித்த இக்கட்சிகள் இப்போது ஒரேயடியாக தவெக பக்கம் தாவியுள்ளன. ஆட்சி கவிழ்ந்துவிடும், ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என சாக்குப்போக்கு சொல்லி முதலில் ஆதரவளித்த கட்சிகள், இப்போது திமுகவை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கியுள்ளன. திமுகவும் இந்தக் கட்சிகள் மீதான விமர்சனத்தை கூர்மைப்படுத்தியுள்ளது.
திமுகவை கைவிட்டது ஏன்?
2024-ல் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு திமுக – அதிமுக என இருமுனைப் போட்டியே நிலவியது. அதிமுகவின் பக்கம் பாஜக இருப்பதால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளால் அந்த அணியின் பக்கம் போக முடியாத நிலை இருந்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட திமுக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், இக்கட்சிகளின் தொகுதிகளை கணிசமாக குறைத்தது. இடதுசாரிகள், விசிக, மதிமுக கட்சிகளுக்கு தலா வெறும் 6 தொகுதிகள் மட்டுமே அப்போது ஒதுக்கப்பட்டன. காங்கிரஸுக்கும் 25 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.
பாஜகவின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து கூட்டணிக் கட்சிகளை இதற்கு ஒப்புக்கொள்ளவும் செய்தது திமுக. மதிமுக, விசிக போன்ற கட்சிகளை திமுக சின்னத்தில் நிற்க சொல்லி நெருக்கடியும் கொடுக்கப்பட்டது. ஆனாலும், விசிக பிடிவாதமாக தனிச் சின்னத்தில் போட்டியிட்டது. மதிமுக உதயசூரியனில் களம் கண்டது.
உள்ளாட்சி தேர்தலிலும் மிகச் சொற்பமான இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது திமுக. மேயர், துணை மேயர், சேர்மேன் பதவிகளை கொடுப்பதாக அறிவித்து, சில இடங்களில் பொறுப்பேற்க விடாமல் செய்யப்பட்ட காட்சிகளும் நடந்தன. ஆனாலும், திமுக ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், இக்கட்சிகள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. ஆட்சியில் இருந்தபோது கூட்டணிக் கட்சிகள் வைத்த கோரிக்கைகளும் பெரிதாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மேலும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணிக் கட்சியினரை மோசமாக நடத்தினர் என்றும் புகார்கள் எழுந்தன.
தவெக தொடங்கப்பட்ட பின்னர், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளை கூட்டணிக்குள் கொண்டுவர கடைசி வரை முயற்சி செய்தார் விஜய். ஆனாலும், திமுக எப்படியோ தனது கூட்டணியை தக்கவைத்தது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் அனைவரையும் சாறாக பிழித்து எடுத்தது திமுக. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்த இடதுசாரிகளுக்கு தலா 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆட்சியில் பங்கு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த விசிகவுக்கு 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஐயுஎம்எல்க்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. மதிமுகவும் 4 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு உதய சூரியனில் களமிறங்கியது. திமுக கொடுத்த நெருக்கடியில் தொகுதிகளே வேண்டாம் என கும்பிடு போட்டார் கமல்ஹாசன்.
தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட நெருடல், தேர்தல் களம் வரை எதிரொலித்தது. இதன் காரணமாக திமுக – கூட்டணிக் கட்சிகள் இடையே முறையான ஒருங்கிணைப்பு களத்தில் உருவாகவில்லை. தங்கள் கட்சிக்கு போதுமான தொகுதிகள் ஒதுக்கவில்லை என அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டினர். திமுக கூட்டணியின் கடும் பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகிப் போனது.
இந்தச் சூழலில், தேர்தல் முடிவுகளில் தவெக தனிப்பெரும்பான்மை பெற்ற பின்னர், காங்கிரஸ் எந்த யோசனையும் இல்லாமல் உடனடியாக விஜய்க்கு ஆதரவை தெரிவித்தது. மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்த இடதுசாரிகள், விசிக தலைவர்களும், தவெகவுக்கான ஆதரவை உறுதிப் படுத்தினர். பின்னர் ஐயுஎம்எல் கூட்டணியில் சேர்ந்தது, இப்போது மதிமுகவும் இணைந்துள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்துள்ளது தவெக.
இப்போது திமுக – முன்னாள் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே காரசார விவாதங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
“திமுக ஆட்சியில் நடந்த தவறுகளை வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டிருந்தோம்” என கோரஸாக பேச ஆரம்பித்துள்ளனர் முன்னாள் சகாக்கள்.
திமுகவும், முன்னாள் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறது. “கூட்டணி கட்சிகளிடம் திமுக பண்ணையார்த்தனமாக நடந்துகொண்டதே அவர்கள் வெளியேற காரணம்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாகவே பேசினார்.
“இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 5 ஆண்டுகளும் விஜய்தான் முதல்வர்” என தெரிவித்துள்ளார் வைகோ. தவெக கூட்டணியில் இணைந்துள்ள மற்ற கட்சிகளின் எண்ணமும் இதுதான்.
திமுகவோடு இப்போது தேமுதிகவும் இன்னும் சில சிறிய கட்சிகளும் மட்டுமே உள்ளது. அடுத்தடுத்து இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், திமுக எப்படி வலுவாக தேர்தலை சந்திக்கும் என்று பார்ப்போம்.