தவெக தொகுதி ‘பறிப்பு’ யுத்தம்... ஆதவ் அர்ஜுனா ‘ஆதிக்கம்’
தனித்தே போட்டி என்ற நிலைப்பாட்டை எட்டி இருக்கும் தவெகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறதாம். இது குறித்து தவெக வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “சென்னையின் சில தொகுதிகளைக் குறிவைத்து ஆனந்த் ஆதரவாளர்கள் ஆரம்பத்திலிருந்தே பணியாற்றி வந்தனர். அந்த தொகுதிகளை எல்லாம் இப்போது ஆதவ் கைப்பற்றியிருப்பதாக சொல்கிறார்கள். தவெக மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பவர் பூக்கடை குமார். இவர் விஜய் கட்சி தொடங்கும் முன்பே வில்லிவாக்கம் பகுதியில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தார். அதனால் வில்லிவாக்கத்தில் போட்டியிட தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என அவர் பெரிதும் நம்பியிருந்தார்.
ஆனால், வில்லிவாக்கத்தில் தவெக-வுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை சர்வே மூலம் தெரிந்து கொண்ட ஆதவ், அந்தத் தொகுதியை தனக்காக ஒதுக்கவைத்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பூக்கடை குமார் இதுகுறித்து ஆனந்திடம் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்திய ஆனந்த், ‘என்னையே பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாவும், அதனால்தான் அவர்களுக்கு செல்வாக்கு உள்ள தி.நகரைத் தேர்வு செய்ததாகவும் கதை கட்டிவிட்டுவிட்டார்கள்.
இதனால் தி.நகரைக் எதிர்பார்த்திருந்த அப்புனுவின் வாய்ப்பும் பறிபோய்விட்டது. நிலைமை இப்போது கையை மீறிவிட்டது’ என தனது மனக் குமுறலைக் கொட்டியதாகத் தெரிகிறது. இதேபோல் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் சுறா வேலு, ஆர்.கே.நகர் தொகுதிக்காக வேலை செய்து வந்தார். ஆனால், அந்தத் தொகுதியை சமீபத்தில் கட்சியில் இணைந்த ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சனுக்கு ஒதுக்க ஆதவ் தரப்பு பரிந்துரைத்திருக்கிறது.
மரிய வில்சன் அங்கே தேர்தல் பணிகளைத் தொடங்கி இருப்பதால் சுறா வேலு சுருண்டு போய்க் கிடக்கிறார். இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே இதுதான் நிலை” என்றனர் தவெக வட்டாரத்தினர். நிர்வாகிகளுக்குள் இத்தனை குமுறல்கள் இருந்தாலும் விஜய்க்கு நெருக்கமானவர்களோ, “அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. யார் எங்கு நின்றால் வெற்றி கிடைக்கும் என்பது தலைவர் விஜய்க்கு நன்றாகத் தெரியும். அதன்படி அவர் வேட்பாளர்களை தேர்வு செய்வார். தவெக-வில் உட்கட்சி மோதல் இருப்பதாக திமுக-வினர் தான் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்” என்கிறார்கள்.