போர்ச் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை
புவி அரசியலில் மோதல்கள் ஏற்படும்போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவிப்பர். ஆனால், இந்த முறை தங்கம் விலை அவ்வாறு நாடப்பட்டு விலையுயர்வு காணவில்லை. இந்த நிலைமாற்றம் மிக முக்கியக் கேள்வியை நம்முள் எழுப்பலாம். மேற்காசியப் போர் நெருக்கடிக்கு மத்தியிலும் தங்கம் விலை குறைவது ஏன் என்ற அந்தக் கேள்விக்கு விடை தேடுவோம்.
காரணம் 1: மேற்கு ஆசிய மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் எண்ணெய் மற்றும் எல்பிஜி, எல்என்ஜி கப்பல் போக்குவரத்து பாதிப்பு எண்ணெய், எரிவாயு விநியோகச் சங்கிலியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்பது, உலக நாடுகளில் பணவீக்கத்தை எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் உயர்ந்தே இருக்கச் செய்யும் என்ற அச்சத்தைக் கடத்தியுள்ளது. அந்த வகையில் பணவீக்க அச்சம்தான் தங்கம் விலை சரிவுக்கு முதன்மைக் காரணம் என்று கணிக்கப்படுகிறது.
பணவீக்கம் அதிகமாக இருந்தால், மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்காது. மேலும், விலைவாசி ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கவே முற்படும். உலகச் சந்தைகள் இப்போதைக்கு இதை நோக்கியே செல்லக் கூடும். குறிப்பாக, அமெரிக்காவின் மத்திய வங்கியின் நிதிக் கொள்கை என்னவாக இருக்குமென்பதில் நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. இது தங்கத்தின் மீது நேரடியான தாக்கத்தைக் கடத்துகிறது.
காரணம் 2: தங்கத்தின் மீதான முதலீடு என்பது நேரடியாக நிலையான வருமானத்தைத் தருவது அல்ல. பாண்ட்கள், டெபாசிட்டுகள் போல் இவை ரிட்டர்ன்கள் தருவதில்லை. அப்படி இருக்கையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால் நாட்டின் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்களுக்கு நிலையான வருமானம் தரக்கூடிய சொத்துகள் பக்கம் தங்களின் கவனத்தை திருப்புவர். அத்தகைய நேரங்களில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறையும். இதனால் தங்கம் விலை குறையும் எனக் கூறப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு புதிய உச்சங்களைத் தொட்டுவிட்ட நிலையில், இத்தகைய உச்சத்துக்குப் பின்னர் முதலீட்டாளர்கள் ப்ராஃபிட் புக்கிங் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்கத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் முதலீட்டு கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது.
காரணம் 3: சர்வதேச அளவிலான பொருளாதார நிச்சயமற்ற சூழல்களில், தங்கமும், டாலரும் தான் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், இப்போதைய சூழலில் டாலர் அதிக புழகத்தை ஈர்க்கிறது. டாலரின் மதிப்பு வலுவாக இருக்கும்போது, தங்கத்தை மற்ற நாணயங்களைக் கொண்டு வாங்குவது என்பது கைக்கு எட்டாத விலையாகிவிடுகிறது.
இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையை குறைக்கிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறையும்போது அதுவும் தங்கம் விலை மீது கூடுதல் அழுத்தத்தை செலுத்துகிறது. ஆக, டாலர் மதிப்பின் எழுச்சியும் தங்கம் விலை சரிவுக்கு மற்றொரு காரணம்.
இவ்வாறாக, உலகாளவிய சந்தைகள் புவிசார் அரசியல் பதற்றங்களைக் காட்டிலும் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாலேயே தங்கம் விலை குறைகிறது என்றளவில் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.