Diés Iraé: காதல் ஆவிகளும் திகில் விருந்தும் | ஓடிடி திரைப் பார்வை

திகில் படங்களுக்காகவே நன்கு அறியப்பட்டவர் மலையாள இயக்குநர் ராகுல் சதாசிவன். ‘ரெட் ரெயின்’ தொடங்கி ‘பூதகாலம்’, மம்முட்டி நடித்த ‘பிரமயுகம்’ வரை ஒவ்வொரு படியாக மேலேறி வந்தார். மோகன்லால் மகன் பிரணவ்வுடன் அவர் கைகோர்த்து வெளிவந்த ‘டைஸ் ஐரே’ (Dies Irae) தற்போது தமிழிலிலும் ஓடிடியில் வெளியாகியுள்ளது

‘டைஸ் ஐரே’ என்பதற்கு லத்தீன் மொழியில் ‘இறுதித் தீர்ப்பு நாள்’ என்றே பொருள். அமெரிக்காவில் வசிக்கும் கோடீஸ்வர ஆர்க்கிடெட் மகனான பிரணவ் தனித்து வாழ்ந்து, நண்பர்களுடன் பார்ட்டி மூடில் வசிக்கிறார். பிரேக் அப் ஆன தனது காதலி தற்கொலை செய்த தகவலறிந்து துக்கம் விசாரிக்க பிரணவ் செல்கிறார். அங்கு தனது முன்னாள் காதலி பயன்படுத்திய கிளிப்பை எடுத்து வர... தொல்லை ஆரம்பமாகிறது.

தனியாக வசிக்கும் தனது வீட்டில் கொலுசு அணிந்து வரும் அமானுஷ்ய உருவத்தால் தாக்கப்பட்டு பிழைக்கிறார். தனது முன்னாள் காதலி வீட்டருகே வசிக்கும் கட்டடம் கட்டும் பணியிலுள்ள ஜிபின் உடன் இணைந்து அமானுஷ்யத்தை ஆராய நுழைகிறார்.

தன்னை மிரட்டி தாக்குவது தனது பிரேக் அப் காதலியல்ல... ஆண் ஆவி எனத் தெரிகிறது. ஆண் ஆவி யாருடையது? ஏன் கொலுசு சத்தம் கேட்கிறது என்பதை ஒவ்வொன்றாக விளக்க, க்ளைமாக்ஸில் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்று இரண்டாவது பாகத்துக்கும் அடிபோடுகிறார் இயக்குநர்.

படம் முழுக்க பிரணவ் ராஜ்யம்தான். தெனாவெட்டாக இருப்பது, அமானுஷ்யத்துக்கு பயப்படுவது, துணிந்து தேடலை தொடர்வது என ஜமாய்த்து விடுகிறார். முக்கியமாக கிறிஸோட் சேவியர் இசையும், ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவும் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்கிறது.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு படியாக முன்னேறிய ராகுல் சதாசிவன், இப்படத்தில் திரைக்கதைக்குள் பாலு மகேந்திராவின் ‘மூடுபனி’ படத்துக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதை உணர முடியும். டெக்னிக்கலில் கில்லியாக இருக்கும் இந்தப் படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. திகில் விரும்பிகளுக்கு விருந்து நிச்சயம். - செ.ஞானப்பிரகாஷ்

Diés Iraé: காதல் ஆவிகளும் திகில் விருந்தும் | ஓடிடி திரைப் பார்வை
The GirlFriend: ஆணாதிக்கத்தின் நிழலும் கல்வியின் முக்கியத்துவமும் | ஓடிடி திரை அலசல்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in