

தாயை இழந்து தந்தையிடம் வளரும் பூமாதேவி (ராஷ்மிகா) முதுகலைப்படிப்புக்காக நகரத்துக்கு வருகிறார். அங்கு முதுகலை படிக்கும் விக்ரம் (தீக்சித் ஷெட்டி) மீது அவருக்கு காதல் வருகிறது. இயல்பிலேயே ஆணாதிக்க மனப்பான்மையுடன் வலம் வரும் அவர் ராஷ்மிகாவின் முன்னேற்றத்தை தடுத்து தனக்கான பணிப்பெண்ணாக மாற்றத்தொடங்குகிறார். அதீத எதிர்மறை மனப்பான்மையில் சிக்கும் ராஷ்மிகா அவருடன் பிரேக் அப் செய்கிறார்.
அதன்பிறகு பூமாவை விடாமல் துன்புறுத்தத்தொடங்க பயத்தின் உச்சிக்கு செல்லும் ராஷ்மீகா அதிலிருந்து மீள்கிறாரா இல்லையா என்பதை இருபாலருக்கும் பாடமெடுத்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா வெளியூர் படிக்க வருவது தொடங்கி தனது ஆசையை, கனவை தேடி படிப்படியாக உழைப்பது, பயத்தை வெளிப்படுத்துவது என முதல்பாதியிலும் பிரேக் ஆன பின்பு தனது காதலனால் பயமுறுத்தப்பட்டு நடுங்குவது அதில் இருந்து மீள்வது என உண்மையிலேயே தனது நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
ராஷ்மிகாவுக்கு இது உண்மையிலேயே முக்கியமான கதாபாத்திரம். அதை நன்றாக மெருகேற்றியிருக்கிறார். ஆணாதிக்கம் செய்கிறோம் என்பதை உணர்ந்து தனக்கு வேலை செய்ய, கேள்விக்கேட்காத, பயந்த நிலையில் இருக்கும் பெண்ணை படிப்படியாக பணிப்பெண்ணாக்கும் சூழலை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் தீக்சித் ஷெட்டி.
தன் அம்மா (ரோகிணி) பேசாமல் தான் சொல்வதை செய்வது, தான் கழற்றி எறிந்த ஷூவை எடுத்து வைப்பது, பிடித்த உணவை செய்து தருவது போலவே தன் காதலியும் தேவை என்பதை உருவாக்கும் பலரின் சாயலை வெளிப்படுத்துகிறார். தன்னை விட தன் காதலியோ, அம்மாவோ உயரக்கூடாது என்பதை விரும்பும் ஆணாதிக்க மனத்தை வெளிப்படையாக்கியிருக்கிறார்கள்.
பட்ட மேற்படிப்பு படிப்போர் காதலில் தலையிடமாட்டேன் என துறைத்தலைவர் சொல்வதை ஏற்கலாம். ஆனால், கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் ரூமுக்கு சர்வசாதரணமாக ஆண்கள் செல்வதாக காட்டி சற்று சறுக்கியிருக்கிறார்கள். உண்மையில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் ஆணாதிக்கத்தால் பெண்கள் நெருக்கடிக்கு உள்ளாவதையும், கல்விதான் வாழ்வை மாற்றும் - தைரியமாக எதிர்கொள்ளுங்கள், எதற்கும் பயந்து பின்தங்கிவிடாதீர்கள் என்பதை வசனங்களாலும், காட்சிகளாலும் காட்டியுள்ளார். ஒரு சில லாஜிக் மீறிய குறைகள் இருந்தாலும் நல்ல தைரியமூட்டும் கருத்துக்காக நிச்சயம் பாராட்டலாம். தமிழில் நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.