ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம்: உலக சுகாதார அமைப்பு

இந்திய - ஆப்பிரிக்க உச்சி மாநாடு ஒத்திவைப்பு
ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம்: உலக சுகாதார அமைப்பு
Updated on
1 min read

ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதேநேரத்தில் உலக அளவில் தொற்று குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெசஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் அறிவித்தேன். அவசரநிலைக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பாக தலைமை இயக்குநர் அறிவிப்பது இதுவே முதல்முறை. சர்வதேச சுகாதார வழிமுறைகள் சட்டம் 12-ன் கீழ் இந்த நடவடிக்கையை நான் எடுத்தேன்.

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடனான ஆலோசனைகளுக்கப் பிறகு தேவையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.

எபோலா தொற்றால் அவசரநிலை சூழல் ஏற்படவில்லை என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அறிவிப்பை அடுத்து அவசரநிலைக் குழு கூட்டத்தை நேற்று நான் கூட்டினேன். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அந்த குழு ஏற்றது. ஆனால், தொற்றுக்கான அவசரநிலை இல்லை என்பதையும் அது ஏற்றது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வில், எபோலா தொற்று பிராந்திய மற்றும் தேசிய அளவில் அதிகமாக உள்ளது. ஆனால், உலக அளவில் இது குறைவாகவே உள்ளது.

காங்கோவின் வடக்கு மாகாணங்களான இத்துரி மற்றும் வடக்கு கிவு ஆகியவற்றில் இதுவரை 51 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. உகாண்டாவில் இரண்டு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எபோலா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் (அதாவது உயிரோடு உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள்) எண்ணிக்கை 600 ஆக உள்ளது.

எபோலா பரவலைத் தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எபோலா பாதிப்பு குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று காங்கோவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். இதைக் கருத்தில் கொண்டே மேற்கண்ட அபாய மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வரும் 28-ம் தேதி முதல் 31ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற இருந்த இந்திய - ஆப்பிரிக்க உச்சி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போதுள்ள சுகாதாரச் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகள் பரஸ்பர ஆலோசனைகளுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம்: உலக சுகாதார அமைப்பு
ஊடகங்களிடம் தகவல்களைப் பகிர அதிகாரிகளுக்கு மேற்கு வங்க அரசு தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in