

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் மாநில அரசு, குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டையை நீக்கியது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை மதிய உணவுத் திட்டம் என்பது உணவு மட்டும் அல்ல, அதைவிட மேலானதாக பார்க்கப்படுகிறது. சமூகத்தில் அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி பிறக்கவில்லை, பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு நேரமாவது, சரிவிகித சத்துணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் மதிய உணவுத் திட்டம் முட்டையுடன் விரிவுபடுத்தப்பட்டது. சில குழந்தைகள் காலை, மதியம் இருவேளை உணவு கிடைக்கிறதே என்பதற்காகவே பள்ளிக்கு படிக்கவும் வருகிறார்கள்.
அதனால்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, புறநானூற்றிலே புலவர் குடபுலவியனாரால் ‘உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தோரே’ என்று உணவின் முக்கியத்துவம் குறித்து தமிழர்களின் மரபில் விதைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் என்ன பிரச்சினை?
மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டையை ரத்து செய்து சைவமாக மாற்றியது.
இஸ்கான் (ISKCON) அமைப்புடன் இணைந்து மேற்கு வங்க அரசு சைவ உணவுத் திட்டத்தை புகுத்தி முட்டை, வெங்காயம், பூண்டு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. சைவ உணவுகளான கிச்சடி, பனீர், ராஜ்மா, சோயாபீன், பருப்பு வகைகள் என முட்டைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டன. ஆனால், ‘குழந்தைகள் நலனில் மேற்கு வங்க அரசு விளையாடுகிறது, உணவில் அரசியலை, மதத்தை கலக்க பாஜக அரசு முயல்கிறது’ என்று எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
மதிய உணவின் ‘முன்னத்தி ஏர்’ யார்?
தேசிய அளவில் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்துக்கு தேசிய அளவில் முன்னத்தி ஏராக இருப்பது தமிழகம்தான். 100 ஆண்டுகளுக்கு முன்பே மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோதே, உணவில் முட்டையை சேர்த்து தமிழகம் வழங்கியிருக்கிறது. 1920-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் பொது மக்களின் உதவியுடன், கட்டாய தொடக்க கல்வித் திட்டத்துக்காக மதிய உணவுத் திட்டம் சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் தமிழக குடும்பங்களில் நிலவிய வறுமை, பசி, குழந்தைகள் உழைப்பை சார்ந்து பெற்றோர் இருந்ததால் குழந்தைகளுக்கு கல்வி என்பது கிடைக்காத செல்வமாக இருந்தது. குழந்தைகளை கல்வி கற்பதை ஈர்க்கும் வகையில் மெட்ராஸ் மாநகராட்சி சார்பில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கோக்ரேன் பேசின் கார்ப்பரேஷன் பள்ளியில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
அப்போது ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகவும், மெட்ராஸ் மாநகராட்சி கவுன்சில் தலைவராகவும் பி.தியாகராய செட்டியும், சென்னை மாகாணத்தின் முதல்வராக சுப்பராயுலு ரெட்டியாரும் இருந்தனர். வறுமையின் பிடியில், பொருளாதார வசதியற்ற 165 குழந்தைகளுக்கு முதல்முறையாக மதிய உணவு வழங்கப்பட்டு கல்வி புகட்டப்பட்டது.
காமராஜரின் மகத்தான முயற்சி
சுதந்திரம் அடைந்தபின், 1956-ம் ஆண்டு தமிழக முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றதும் பள்ளிகள் அனைத்துக்கும் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி உத்தரவிட்டார். 1982-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் முதல்வராக இருநத் எம்.ஜி.ஆர், பள்ளிக் குழந்தைகளுக்கு சரிவிகித சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். சத்துள்ள உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை அதிகரித்தது.
சத்துணவில் முட்டை எப்போது?
1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.கருணாநிதி, கற்கும் திறனை மேம்படுத்த, சரிவிகித சத்து கிடைக்க சத்துணவுத் திட்டத்தில் வாரத்தில் இரு முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேசமயம், சைவ உணவுத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி ரத்து செய்யவும் இல்லை. முட்டையை விரும்பாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் தரப்படும் என அறிவித்தார்.
2013-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதா, பள்ளிக் குழந்தைகளுக்கு கலவை சாதத் திட்டத்தை கொண்டு வந்தார். தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மேம்படுத்தவே செய்தனர்.
கேரளாவும் பின்பற்றியது...
தமிழகத்தில் வெற்றிகரமாக சத்துணவுத் திட்டம் செயல்படுவதைப் பார்த்த கேரளா, நாட்டில் 2-வது மாநிலமாக 1984-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை தங்கள் மாநிலத்தில் அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு உணவு தானியங்களை மட்டும் வழங்கிய மத்திய அரசு, அதன்பின் 1995-ம் ஆண்டு 5-ம் வகுப்பு வரை 2,408 மண்டலங்களில் நிதியுதவி வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
2001-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்பில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை அரசு வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, 2007-ம் ஆண்டு 8-ம் வகுப்புவரை திட்டத்தை மத்தியில் ஆண்டு காங்கிரஸ் அரசு நீட்டித்தது. 2021-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ‘பிஎம் போஷான்’ திட்டமாக மாற்றி, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சூடான சத்துள்ள சமைக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டமாக மாற்றியது. தேசிய அளவில் இந்தத் திட்டம் விஸ்தரித்து இருப்பதற்கு முன்னத்தி ஏராக இருந்தது தமிழகம்தான்.
முட்டை சர்ச்சை ஏன்?
இந்தியா ஒரு சைவ நாடு என்று கூறப்பட்டாலும், ஆய்வுகளின்படி, 4 இந்தியர்களில் ஒருவர் மட்டுமே தங்களை சைவ உணவு உண்பவர்களாக இருக்கிறார்கள். மாநிலத்துக்கு மாநிலம் இந்த வேறுபாடு மாறுகிறது.
அதிலும், முட்டை சர்ச்சை நிலவும் மேற்கு வங்கத்தில் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் அசைவ உணவு உண்பவர்கள் அதிகளவில் உள்ளனர். பட்டியலினத்து மக்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர் தங்கள் குழந்தைகளுக்கு முட்டை, மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றை தினசரி உணவுகளாக வழங்கி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, பள்ளிகளில் குழந்தைகளுக்கு சைவ உணவை மாநில அரசு திணிக்க முயன்று, முட்டையை ரத்து செய்துள்ளது இப்போது பூதாகரமாகியுள்ளது.
குழந்தைகள் தட்டில் அரசியலா?
மேற்கு வங்கத்தின் வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. இதற்கு முன் மாநிலத்தை இடதுசாரிகளும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுமே ஆட்சியில் இருந்தன. இந்த 3 அரசுகளுமே பள்ளிக் குழந்தைகளின் உணவில் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கலக்கவில்லை, மாறாக குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்க வேண்டும், பசியாறுவதையே நோக்கமாக வைத்திருந்தன. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற பாஜக அரசு, பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவை ஒரு சாரர் மட்டும் உணவாக மாற்ற முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மதிய உணவில் முட்டை அவசியமா?
கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளுக்கு, குறிப்பாக ஏழ்மை நிலையில், நடுத்தர குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு என்பது ஒரு நாளின் மிகச் சத்தான உணவாக அமைகிறது. ஆதலால் குழந்தைகளின் உணவுத் தட்டில் இருக்கும் அரசியலை தவிர்த்து, அறிவியல் ரீதியான சான்றுகளோடு, முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.
முட்டையைப் பொறுத்தவரை, அனைவராலும் மலிவாக வாங்கக் கூடிய உணவு, எளிதாக செரிக்கக்கூடிய புரதச்சத்து என்று யுனிசெப், யுனெஸ்கோ, இந்திய மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு புரதச் சத்து எவ்வளவு முக்கியம், அது எளிதாக எதில் கிடைக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, “குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் முக்கியம். ஓர் உணவு என்பது 9 வகையான அமினோ ஆசிட் சத்துகளும் சரிவிகிதத்தில் வழங்குவதுதான் முழுமையான புரதசத்தாகும். அந்த வகையில் இயற்கை நமக்கு வழங்கிய முழுமையான சத்துள்ள புரதம்தான் முட்டை.
வேகவைக்கப்பட்ட முட்டை 9 அத்தியாவசிய அமினோ ஆசிட் கொண்டுள்ளது, குழந்தைகளால் எளிதாக செரிக்க முடியும். அதனால்தான் உலகளவில் ஏற்கப்பட்ட உணவாக முட்டை இருக்கிறது. கோலின் எனும் ஊட்டச்சத்து பால், பனீர், சோயாபீன் ஆகியவற்றைவிட 7 மடங்கு அதிகமாக முட்டையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ரிபோப்ளோவின், பான்டோதெனிக் ஆசிட், பையோடின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ஜிங்க் நிறைந்த உணவு ‘முட்டை’ மட்டுமே. ஆதலால் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை சிறந்தது” என்கின்றனர்.