

வாஷிங்டன்: ஹார்முஸ் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றி உள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பு இடையே இரு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. எனினும் ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக தடை செய்துள்ளது. இதேபோல ஜலசந்தியின் இரு முனைகளிலும் சரக்கு கப்பல் போக்குவரத்தை அமெரிக்க கடற்படை முடக்கி உள்ளது.
இந்த சூழலில் சீனாவில் இருந்து புறப்பட்ட ஈரானின் தவுஸ்கா என்ற சரக்கு கப்பல் நேற்று முன் தினம் இரவு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நெருங்கியது. அப்போது கப்பலை நிறுத்தும்படி அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூ யன்ஸ் போர்க்கப்பலில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையை புறந்தள்ளிய சரக்கு கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கி வேகமாக முன்னேறியது.
இதைத் தொடர்ந்து ஈரான் சரக்கு கப்பலை, அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியது. அப்போது ஈரான் கப்பலின் இன்ஜின் அறையை குறிவைத்து எம்கே 45 ரக துப்பாக்கி மூலம் சரமாரியாக சுடப்பட்டது. இதில் ஈரான் சரக்கு கப்பலின் இன்ஜின் சேதமடைந்து நடுக்கடலில் நங்கூரமிட்டு நின்றது.
இதனிடையே அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ட்ரிபோலி போர்க்கப்பலை சேர்ந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் சரக்கு கப்பலில் தரையிறங்கி அந்த கப்பலை கைப்பற்றினர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, “900 அடி நீளம் கொண்ட ஈரான் சரக்கு கப்பல், அமெரிக்க கடற்படையின் எச்சரிக்கையை மீறிச் சென்றது. அந்த கப்பலின் இன்ஜின் அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, கப்பல் நிறுத்தப்பட்டது. தற்போது அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் ஈரான் கப்பல் இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து 17 கடல் மைல் தொலைவில் இருந்த ஈரான் சரக்கு கப்பலை கைப்பற்றி உள்ளோம். ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முடக்கி உள்ளது. கடந்த சில நாட்களில் ஈரான் துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட 25 சரக்கு கப்பல்களை இடைமறித்து திருப்பி அனுப்பியிருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, டெஹ்ரானில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: போர் நிறுத்தம் அமலானது முதல் அமெரிக்காவின் செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது.
இது போர் நிறுத்தத்தை மீறும் செயல் ஆகும். அமெரிக்காவுடன் அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டம் இல்லை. இவ்வாறு இஸ்மாயில் பாகாயி தெரிவித்தார்.
ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கடற்கொள்ளை தாக்குதல் போன்றது. ஈரான் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். ஈரான் கப்பலில் எங்களது மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலன் கருதி அமெரிக்கா மீதான தாக்குதலை தாமதப்படுத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தன.
சீனாவில் இருந்து ஏவுகணை வெடிபொருள்? - அமெரிக்கா கைப்பற்றி உள்ள ஈரான் சரக்கு கப்பல் தவுஸ்கா கடந்த மார்ச் 29-ம் தேதி சீனாவின் காவோலன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து சோடியம் பெர்குளோரேட் என்ற ரசாயன பொருள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை ஏவுகணையின் திட எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.
ஈரான் சரக்கு கப்பலான தவுஸ்கா, சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தை ஏற்றிக் கொண்டு ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் நோக்கி விரைந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கப்பலையே அமெரிக்க கடற்படை நடுவழியில் இடைமறித்து கைப்பற்றி உள்ளது. எனினும் கப்பலில் என்ன பொருள் இருக்கிறது என்பது குறித்து அமெரிக்காவோ, ஈரானோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதனிடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று சவுதி அரேபிய இளவரசர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ‘‘ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சீனா முழு ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.