திலக் வர்மா அதிரடி சதம்: குஜராத் அணியை 100 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்

திலக் வர்மா அதிரடி சதம்: குஜராத் அணியை 100 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்
Updated on
1 min read

அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ்அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது; காகிசோ ரபாடா தனது அபாரமான பந்துவீச்சால் டானிஷ் மாலேவார் (2), குயிண்டன் டி காக் (13) மற்றும் சூர்யகுமார் யாதவ் (15) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். 

ஒரு கட்டத்தில் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த மும்பையை, திலக் வர்மா மற்றும் நமன் தீர் (45) ஜோடி மீட்டெடுத்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய திலக் வர்மா, பின்னர் அதிரடியாக விளையாடி வெறும் 45 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இதன் பலனாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

200 ரன்கள் கடினமான இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில், ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் பந்திலேயே சாய் சுதர்சனை (0) ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் வந்த ஜோஸ் பட்லர் (5) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (14) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். மும்பை பவுலர் அஸ்வானி குமார் அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குஜராத் அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தார்.

மிட்செல் சாண்ட்னர் மற்றும் அல்லாஹ் கஜன்பர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் குஜராத் அணி 15.5 ஓவர்களில் வெறும் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

தொடர்ந்து நான்கு தோல்விகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் பெற்ற 99 ரன்கள் வித்தியாசத்திலான மெகா வெற்றி, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் ரேட்டை வெகுவாக உயர்த்தியுள்ளது. ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மாவின் இந்த சதம், மும்பை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திலக் வர்மா அதிரடி சதம்: குஜராத் அணியை 100 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்
ஓய்வை அறிவித்தார் WWE லெஜண்ட் ப்ராக் லெஸ்னர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in