இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தீவிரம்: சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்

ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்க வாய்ப்பு
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தீவிரம்: சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்
Updated on
2 min read

இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்கா - ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்கி உள்ளது. அமெரிக்கா தரப்​பில் 15 நிபந்​தனை​களும், ஈரான் தரப்​பில் 10 நிபந்​தனை​களும் வலி​யுறுத்​தப்​பட்​டன. இதில் பல்​வேறு அம்​சங்​களில் சுமுக உடன்​பாடு ஏற்பட்​ட​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்​.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிக போர்​நிறுத்​தத்தை அறி​வித்​தன. இந்த போர்​நிறுத்​தம் 2 வாரங்​களுக்கு மட்​டும் அமலில் இருக்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்கு ஏற்பாடு செய்​யப்​பட்​டது. இதற்​காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் ட்ரம்ப்பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் சிறப்பு விமானத்​தில் இஸ்​லா​மா​பாத் வந்​தடைந்​தனர்.

ஈரான் தரப்​பில் அந்த நாட்டு நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்​சி, பாது​காப்​புச் செயலர் அலி அக்​பர் அகம​தி​யான், ஈரான் மத்​திய வங்கி ஆளுநர் அப்​தோல் நாசர் ஹெம்​மாட்டி ஆகியோ​ரும் சிறப்பு விமானத்​தில் இஸ்​லா​மா​பாத்​துக்கு வந்​தனர்.

இந்​நிலை​யில், இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள செரீனா நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று பிற்​பகலில் அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்​கியது. முதல்​கட்​ட​மாக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் குழு​வினர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்​தித்து ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்​கா​வின் 15 அம்ச திட்​டம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

‘அணு ஆயுத திட்​டத்தை ஈரான் கைவிடவேண்​டும். செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை சர்​வ​தேச அணுசக்தி முகமை​யிடம் ஒப்​படைக்க வேண்​டும். அணுசக்தி தளங்​களை ஆய்வு செய்ய அனு​ம​திக்க வேண்​டும். நீண்ட தூரம் பாயும் ஏவு​கணை​களை தயாரிக்​கக்​ கூ​டாது. ஹிஸ்​புல்​லா, ஹவுத்​தி, ஹமாஸ் உள்​ளிட்ட கிளர்ச்​சிக் குழு​வினருக்கு ஆயுதம், நிதி​யுதவி வழங்​கக் கூடாது’ என்​பது உட்பட 15 நிபந்​தனை​களை வான்ஸ் வலி​யுறுத்​தி​னார்.

அதே​போல, ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலிபாப் தலை​மையி​லான குழு​வினரும் ஷெபாஸ் ஷெரீப்​புடன் தனி​யாக பேச்சு நடத்​தினர். அப்​போது, ‘ஈரான் மீதான தாக்​குதலை அமெரிக்க ராணுவம் முழு​மை​யாக நிறுத்த வேண்​டும். ஈரானின் யுரேனி​யம் செறிவூட்​டல் திட்​டத்தை ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். அனைத்து பொருளா​தா​ரத் தடைகளை​யும் நீக்க வேண்​டும். ஹார்​முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்​டுப்​பாட்​டிலேயே இருக்​கும். அமெரிக்க ராணுவத் தாக்​குதலில் ஏற்​பட்ட சேதத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும். லெப​னான் மீது இஸ்​ரேல் ராணுவம் தாக்​குதல் நடத்​தக் கூடாது’ என்​பது உள்​ளிட்ட 10 நிபந்​தனை​களை ஈரான் தரப்பு வலி​யுறுத்​தி​யது.

இதன்​பிறகு, அமெரிக்கா மற்​றும் ஈரான் குழு​வினரிடம் பாகிஸ்​தான் தரப்​பில் விரி​வான சமரச பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில் பல்​வேறு அம்​சங்​களில் சுமுக உடன்​பாடு ஏற்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் இஷாக் டார், உள்​துறை அமைச்​சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் இருதரப்​புக்​கும் இடையே சமரச தூது​வர்​களாக செயல்​பட்​டனர்.

இறு​தி​யில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தலை​மையி​லான குழு​வினரும், ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப் தலை​மையி​லான குழு​வினரும் நேரடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ‘ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்’ என்று ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்கா தரப்பில் ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்க வேண்டும். அனைத்து கப்பல்களையும் அனுமதிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அமைதிப் பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்​தானில் சீனக் குழு முகாம்: பேச்சுவார்த்தை குறித்து சர்​வதேச அரசி​யல் நோக்​கர்​கள் கூறியதாவது: ஈரானுக்​குத் தேவை​யான ஆயுத உதவி​களை சீனாவே மறைமுகமாக வழங்கி வரு​கிறது. குறிப்​பாக, சிறிய ரக ஏவு​கணை​கள், ட்ரோன்​கள், உதிரி பாகங்​களை ஈரானுக்கு சீனா வழங்கி வரு​கிறது.

இந்த சூழலில், சீனா​வின் அழுத்​தம் காரண​மாகவே தற்​காலிக போர்​நிறுத்​தத்​துக்கு ஈரான் ஒப்புக்கொண்டது. சீனா​வின் உயர்​நிலைக் குழு தற்​போது இஸ்​லா​மா​பாத்​தில் முகாமிட்​டுள்​ளது. அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டால், அந்த ஒப்​பந்த விதி​கள் அமல்​படுத்​தப்​படு​வதற்கு சீனா உறுதி அளிக்​கும். சீனா உறுதி அளித்​தால் மட்​டுமே ஈரான் பிர​தி​நி​தி​கள் அதில் கையெழுத்​திடு​வார்​கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்க வாய்ப்பு

அமெரிக்காவின் மேரிலேண்டில் செய்தியாளர்களிடம் அதிபர் ட்ரம்ப் நேற்று கூறியதாவது: ஈரானின் ஆதரவோடு அல்லது ஈரானின் ஆதரவு இல்லாமலேயே ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும். இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு உதவ பல்வேறு நாடுகள் தயாராக இருக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தரப்பில் சுங்க வரி வசூல் செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வித கட்டணமும் இல்லாமல் சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்வதை அமெரிக்கா உறுதி செய்யும்.

அதேபோல, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதிலும் மிகவும் உறுதியாக உள்ளோம். இரு நாடுகள் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் அணு ஆயுத ஒழிப்பே பிரதான இடம்பிடிக்கும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தீவிரம்: சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்
“பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்” - ஜே.டி.வான்ஸ் உடனான சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in