

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அந்நாட்டு அரசு அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஆவணங்கள் இல்லாத இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருவோர் இலவசமாக தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக இந்த திட்டத்தை அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பில் தாஜ்மஹாலின் புகைப்படத்தை அந்தத் துறை பயன்படுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சமூக வலைதளத்தில், ”நீங்கள் ஒரு புதிய தொடக்கத்துடன் உங்கள் தாய் நாட்டுக்கு செல்லலாம். சிபிபி ஹோம் என்ற செல்போன் செயலியைப் பயன்படுத்தி நீங்களாகவே உங்கள் நாட்டுக்கு செல்ல முன்வரும் போது இலவச விமான டிக்கெட் மற்றும் வெளியேறுவதற்கான 2,600 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2.41 லட்சம்) போனஸ் தொகையைப் பெற்றிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு வருவோருக்கு எந்தவித சட்டச் சிக்கலும் இல்லாமல் அவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரை கண்காணிப்பதற்கான செலவுகளைக் குறைக்கவும், காவல், நீதித்துறை அமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், அதே நேரத்தில் முறைசார்ந்த நாடு கடத்தலுடன் தொடர்புடைய சட்டரீதியான தண்டனைகளைத் தனி நபர்கள் தவிர்க்கவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பில் இந்தியாவிலுள்ள தாஜ்மஹால் புகைப்படத்தை அச்சடித்துள்ளனர். இந்தத் திட்டத்தை வரவேற்கும் சிலர், தாஜ்மஹால் புகைப்படத்தை இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பில் அச்சிட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், சுய நாடு கடத்தல் திட்டத்தின் மூலம் பணம் வழங்குதல் மற்றும் இலவசப் பயணத்துக்கான சலுகைகள் இக்கட்டான சூழலில் இருப்பவர்களை ஈர்க்கக் கூடும் என்று குறிப்பிட்டாலும், இத்தகைய திட்டங்கள் நீண்ட கால விளைவுகளை மறைக்கக்கூடும் என்று குடியேற்றப் பிரிவு வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.